கொரோனாவுக்கு பின்னரான பாதிப்பு நிலையிலிருந்து எவ்வாறு மீளலாம்?

விளக்குகிறார் குழந்தை நல விசேட வைத்திய நிபுணர் விஜி திருக்குமார்

கொவிட் தொற்றிலிருந்து ஒருவர் மீண்டாலும் அவரது உடலும் மனதும் அதன் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு சில காலம் செல்லும். எனவே கொவிட் தொற்றுக்கு பின்னரான நிலைமையிலிருந்து எவ்வாறு மீண்டு வரலாம் என்பதையிட்டு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு கூறுகின்றார் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், மட்/போதனா வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்திய நிபுணருமான விஜி திருக்குமார்.

கொவிட் தொற்றுக்குப் பின்னரான நிலைமை அல்லது குணங்குறிகள் என்பது கொவிட் தொற்றிலிருந்து மீண்டாலும் எமது உடலும் மனதும் இவற்றின் பாதிப்புகளில் இருப்பதைக் குறிக்கின்றது. இவற்றின் தாக்கம் பொதுவாக இரண்டு வாரங்களில் இருந்து ஆறு வாரங்கள் வரை இருக்கக் கூடும்.சிலருக்கு சில மாதங்கள் வரை செல்வதுண்டு.

உடல் களைப்பு / சோர்வு, கிரகித்தல் செயற்பாடுகளில் பின்னடைவு, மூச்சு விடுதல் சிரமம், தலைவலி, நீண்ட நேரம் ஒரு இடத்தில் நிற்கும் போது மயக்கம் வருதல், நெஞ்சு படபடப்பு, நெஞ்சு / வயிறு வலி, இருமல், தசை/மூட்டு வலி, வயிற்றுப் போக்கு, மனநிலையில் குழப்பம்/ மனஅழுத்தம், நித்திரைக் குழப்பம், சுவை /மணம் மாற்றம், தோலில் புதிய தழும்புகள் போன்றவற்றை அவதானிக்க முடியும்.

இவற்றுடன் குறிப்பாக சிறுவர்களில் கொவிட் தொற்றுக்கு பின்னர் அவதானிக்க கூடியதாக பின்வரும் குணங்குறிகள் தென்படும்.

பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிரமம், பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை தொடர்கின்ற வேளைகளில் கற்றலில் கவனம் செலுத்துவதில் அலட்சியம், குறித்த நேர இடைவெளியில் கற்றல் நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் காலதாமதம் ஏற்படுதல், வழமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம்/ பின்னடைவு போன்றவற்றை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் உடலின் பல தொகுதிகள் மற்றும் அங்கங்களில் இவற்றின் பாதிப்புகளின் விளைவுகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கும். அவையாவன:

மூச்சு விடுதல் சிரமம்,களைப்பு, வயிற்று வலி, பசியின்மை, வாந்தி, வினைத்திறனாக செயற்படுதல் மற்றும் கிரகித்தல் போன்றவற்றில் பின்னடைவு ஏற்படுதல், இதய குருதி குழாய்கள் தசைகளின் தாக்கத்தால் நெஞ்சு வலி, குருதி அமுக்கம் குறைவு, மனநிலையில் மாற்றம் போன்றவற்றை அவதானிக்க முடியும்.

தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகளை கவனமாக கையாளுதல், தடுப்பூசிகளை காலதாமதம் இன்றி பெற்றுக் கொள்ளுதல் இவற்றின் தாக்கத்தை பெருமளவில் குறைப்பதற்கு ஏதுவாக அமைகிறது.

மேற்குறிப்பிட்ட பாதிப்புகள் அனைத்தும் ஒருவரில் வெளிக்காட்டபடுவதில்லை. ஆனால் பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட குணங்குறிகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

இந்த அறிகுறிகளை சிறுவர்கள் மற்றும் வளர்ந்தவர்களில் அவதானிக்கின்ற வேளையில் உரிய வைத்தியர்களை அணுக வேண்டும். அவர்கள் ஆலோசனைகளையும் குணங்குறிகளுக்கு தகுந்த சிகிச்சைகளையும் வழங்குவார்கள்.இதன் மூலமாக இவற்றிலிருந்து வெற்றிகரமாக மீளலாம்.

வி.ரி. சகாதேவராஜா...

(காரைதீவு குறூப் நிருபர்)