டுபாய் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் பெரும் ஆர்வம்

டுபாய் நாட்டின் பல நிறுவனங்கள் இந்தியாவிலும் ஜம்மு காஷ்மீரிலும் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாக இந்திய மத்திய வர்த்தகம் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் டுபாய் நாட்டுடன் ஜம்மு- காஷ்மீர் நிர்வாகம் பல்வேறு திட்டங்களின் நிமித்தம் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சார்த்திட்டிருப்பதானது இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுவதற்கு இந்திய மற்றும் ஜம்மு காஷ்மீர் கைத்தொழில் துறை வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டுபாய் நாட்டுடன் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் பியூஸ் கோயல், லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஜம்மு காஷ்மீர் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றது. இவ்வாறான சூழலில் டுபாயுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்புரிந்துணர்வு உடன்படிக்கை இந்தியாவை உலக வல்லரசாக மாற்றப் பெரிதும் உதவும் என்றார்.

ரியல் எஸ்டேட் அபிவிருத்தி, கைத்தொழில் பூங்காக்கள், தொழில்நுட்பக் கோபுரங்கள், பல்நோக்கு கோபுரங்கள், மருத்துவக் கல்லூரி, விஷேட வசதிகளுடனான மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் நிமித்தம் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.