வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 31 ஆண்டுகள் பூர்த்தி

Jaffna Muslims 1990 October 30

வடமாகாண முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டு 31 வருடங்கள் உருண்டோடி விட்டன. 90ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாத இறுதியில் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்தச் செயற்பாடு வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை துன்பத்துக்கு உள்ளாக்கியது. அந்த துயர் மிகுந்த சம்பவமானது 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் 31 வருடங்களைத் தாண்டியுள்ளது.

இவ்வாறு 31 வருடங்கள் தாண்டியும் இம்மக்களின் அவல நிலை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்தும் வடமாகாண முஸ்லிம்களின் துன்பங்கள் தீரவில்லை. தமது சொந்த மண்ணில் மீள்குடியேறும் கனவுகளுடனேயே அவர்கள் உள்ளனர் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியமர்வு என்பது கானல்நீராகவே இருந்து வருகின்றது.

இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்ற விடயத்தில் நம்பிக்கை அற்றவர்களாகவே இருக்கின்றனர். மீள்குடியேற்ற விடயங்கள் எல்லாம் வடக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை நிறைவேறவில்லை.

நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து ஆட்சிக் காலம் நிறைவடையும் கட்டம் வரையும் நீண்ட காலப் பிரச்சினையாக புரையோடி இருக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்ற விடயத்தில் அக்கறை காட்டப்படவில்லை. முழு முஸ்லிம் சமூகமும் நல்லாட்சி அரசின் மீதும் நம்பிக்கை இழக்க வேண்டிதொரு நிலைமை ஏற்பட்டது.

நல்லாட்சி அரசு தோற்றம் பெற்ற போது நூறுநாள் வேலைத் திட்டத்தில் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பாக முயற்சி மேற்கொள்ளப்படுமெனக் கூறியிருந்தார். ஆனால் அந்த அறிவித்தல் புஷ்வாணமாகியதையே கண்டு கொள்ள முடிந்தது. வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் மீள்குடியேற்றம் இன்னுமே நிறைவேறவேயில்லை. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் பாதிக்கப்படவர்களாகவே உள்ளனர்.

மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த போது பல ஆயிரமாக காணப்பட்டவர்கள் இன்று பல குடும்பங்களாக பெருகி இடம்பெயர்ந்த மக்களின் தொகை இலட்சக்கணக்காக மாறி இருப்பதுடன் கணிசமானளவு மக்களைத் தவிர ஏனையவர்களுக்கு சொந்த இடத்தில் வாழ சரியான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அவர்கள் தமது பூர்வீகத்தைக் கண்டு கொள்ளும் ஆவலுடன் 31 வருடங்களாக காத்திருக்கின்றனர். அவர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்ற செய்தி முஸ்லிம்களைப் பொறுத்தவரை பகற் கனவாக அமைந்து விட்டது.

முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் சர்வதேசம் வரை தெரிந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் விடயத்தை சர்வதேசம் கண்டு கொள்ளாத் தவறி விட்டது. இந்த விடயத்திலும் சர்வதேசமும் தொடர்ந்தும் பிழைகளையே செய்து வருகின்றது.

அவர்கள் தமது சொந்த வீடுகளை மீளக்கட்டியெழுப்ப முடியாதளவு தடைகளும், பிரச்சினைகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. வடக்கு முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. அவர்களின் மீள்குடியேற்ற விடயத்தில் தடைகளே தொடர்கின்றன.

இவ்வாறு யுத்தத்தால் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இன்றுவரை பல்வேறுபட்ட மேடு பள்ளங்களை கடந்து தமது வாழ்வை முன்னெடுக்க வேண்டிய நிலையிலேயே இருந்து வருகின்றனர். தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல்வாதிகள் தமது வாக்கு வேட்டைக்காக அந்த மக்களின் முன்வந்து ‘உங்களை நாம் ஆட்சிக்கு வந்தால் மீள்குடியேற்றுவோம்’ என்று கூறுவது வழமையாகும். ஆனால் அந்த உறுதிமொழி நிறைவேறுவதில்லை.

பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கல்வி, சுகாதாரம், தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல தேவைப்பாடுகளுடன் காணப்படுவதுடன் இவ்விடயங்களில் முஸ்லிம்கள் பின்நோக்கிய நிலையில் இருப்பதும் தெரிந்த விடயமாகும். இந்த மக்கள் பூரணமான மீள் குடியேற்றத்தையே விரும்புகின்றனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் வடமாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்ற வேண்டியது அவசியமாகும்.

சத்தார் எம். ஜாவித்