மொரட்டுவை பல்கலை மருத்துவ பீட நிர்மாணத்திற்கு குவைத் நிதியத்தினால் நிதி

மொரட்டுவை பல்கலை மருத்துவ பீட நிர்மாணத்திற்கு குவைத் நிதியத்தினால் நிதி-Kuwait Fund for Arab Economic Development-Agreed to Provide Fund for Medical Faculty-University of Moratuwa-10 Cabinet Decisions

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 11 தீர்மானங்கள்

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அவசியமான நிதியை வழங்க, அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் இணங்கியுள்ளது.

அதற்கமைய, குறித்த திட்டத்திற்கு 10 மில்லியன் குவைட் தினார்களை (அண்ணளவாக 33.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை) பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கு. இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நேற்றைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு

2. ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஒஃப் பயோடெக்னொலோஜி (பிறைவெட்) லிமிட்டட் நிறுவனத்திற்கு ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் காணித்துண்டொன்று வழங்கல்
விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் ஹோமாகம, பிட்டிபன, மாஹேனவத்த பிரதேசத்தில் 220 ஏக்கர் காணி எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த காணியில் பல்வேறு கருத்திட்டங்களுக்காக காணித்துண்டுகள் ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளதுடன், உயிரியல் தொழிநுட்ப புத்தாக்கப் பூங்கா அமைப்பதற்காக அப்போதிருந்த விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் அமைச்சுக்கு குறித்த காணியில் 13 ஏக்கர்கள் ஒதுக்கி வழங்கப்பட்டிருந்தாலும், குறித்த பூங்காவின் கட்டுமானப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில் முயற்சிகள் தொடர்பான இராஜாங்க அமைச்சின் கீழ் காணப்படும் முழுமையான அரச கம்பனியான ஸ்ரீலங்கா இன்ஸ்ரிரியூட் ஒஃப் பயோடெக்னொலோஜி (பிறைவெட்) லிமிட்டட் நிறுவனம் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப புத்தாக்கப் பூங்காவை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், குறித்த பணிகளுக்கு மேற்குறிப்பிட்ட காணித் துண்டை ஒதுக்கி வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. ‘No New Coal’ உலகளாவிய எரிசக்தி ஒப்பந்தம்/ உலகளாவிய தூய எரிசக்தி நிலைமாற்றம் தொடர்பான பிரகடனம் 
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான சாசனத்தின் தரப்பினர்களின் 26ஆவது மாநாடு 2021 ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்கள் தொடர்பான சாசனம் மற்றும் பரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கும், குறித்த உடன்பாடுகளை மேலும் விருத்தி செய்து கொள்வதற்கும், அமுல்படுத்துவதற்கும் தேவையான தீர்மானங்களை எட்டுவதற்கும் இம்மாநாட்டின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இம்மாநாட்டின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் ஐக்கிய இராச்சியம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அங்கத்துவ நாடுகள் சில இணைந்து, அரசாங்கங்கள் தூய எரிசக்தி நிகழ்ச்சி நிரலுக்கு அர்ப்பணிக்கும் வகையில் நிலக்கரிகளிலிருந்து விடுபட்ட தூய எரிசக்தி உடன்படிக்கையை முன்மொழிவதற்குத் திட்டமிட்டுள்ளது.

குறித்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட அரசாங்கங்களுக்கு, சுற்றாடல் மாசடைவதைக் குறைப்பதற்கும் மற்றும்/ அல்லது அதன் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறைப்பதற்கு பொறிமுறையற்ற நிலக்கரி மின் உற்பத்தி கருத்திட்டங்களுக்குப் புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை உடனடியாக நிறுத்துவதற்கும், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்னுற்பத்தி செய்யப்படும் புதிய கருத்திட்டங்களின் கட்டுமானங்களை வருட இறுதியில் நிறுத்துவதற்குமான பொறுப்புண்டு. அதற்கமைய, குறித்த உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

4. SPMC லோட்டஸ் மருந்துகள் உற்பத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
ஹொரணை, மில்லாவ பிரதேசங்களில் மருந்துகள் உற்பத்தி வலயமொன்றை அமைப்பதற்காக 2021 மார்ச் மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 65 ஏக்கர் காணித்துண்டொன்றை ஒதுக்கி வழங்குவதற்கும், கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக குழுவொன்றை நியமிப்பதற்கும், 2021 ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் முன்மொழியப்பட்டுள்ள மருந்துகள் உற்பத்தி வலயத்தின் பெயர் ‘எஸ் பீ எம் சீ லோட்டஸ் மருந்துகள் கருத்திட்டம்’ (SPMC Lotus Pharma Project)  எனப் பெயரிடுவதற்கும், சர்வதேச போட்டி விலைமனு முறையைப் பின்பற்றி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான ஆலோசனை நிறுவனத்தை தெரிவு செய்வதற்கும், விருப்புக் கோரல்களைப் பெற்று, முறிவு மற்றும் நரம்புச் சிகிச்சை உபகரணங்கள், புற்றுநோய் தடுப்பு மருந்துகள் மற்றும் வாய் மூலம் உட்கொள்ளும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான 03 தொழிற்சாலைகளை துரிதமாக நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

5. பொருட்கள் அடங்கிய கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை கெரவலப்பிட்டியில் அமைத்தல்
இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தற்போது பொருட்கள் அடங்கிய கொள்கலன்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஒருகொடவத்த மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் துறைக்குச் சொந்தமான 03 வளாகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த நிறுவனங்களில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதிகள் மற்றும் ஏனைய மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளால் அப்பணிகளில் ஈடுபடும் சுங்க அதிகாரிகள் மற்றும் வருகை தரும் சேவை பெறுநர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

அதே போல், குறித்த வளாகங்களுக்கு கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் போது கொழும்புப் பிரதேசத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. குறித்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, பு;மென்டல், பேலியகொடை மற்றும் கெரவலப்பிட்டி போன்ற மாற்று இடங்களில் மிகவும் பொருத்தமான இடத்தை அடையாளங் காண்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழிநுட்ப உதவியின் கீழ் சாத்தியவள ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கமைய மிகவும் பொருத்தமான இடமாக, கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை இடமாறலுக்கு அண்மையில் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 19 ஏக்கர்கள் மற்றும் 9.26 பேர்ச்சர்ஸ் காணியில், முன்மொழியப்பட்டுள்ள பரிசோதனை நிலையத்தை அமைத்தல் மிகவும் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த காணியை அப்பணிக்காக ஒதுக்குவதற்கும், கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

6. 'சிலோன் தேயிலை' இற்கான புவியியல் குறிகாட்டியை (Geographical Indication பெற்றுக் கொள்ளல்
வணிகப் புலமைச்சொத்து உரிமை பற்றிய ஒப்பந்தத்திற்கமைய அங்கத்துவ நாடுகளின் தேச எல்லைக்குள் அல்லது குறித்த தேச எல்லைகளில் வலயப் பிரதேசத்தின் உற்பத்திப் பொருளை அடையாளங் காணும் அளவுகோல் புவியியல் குறிகாட்டி என அழைக்கப்படும்.

புவியியல் குறிகாட்டி மூலம் குறித்த உற்பத்தியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தல் அல்லது வியாபாரப் பதிவுப் பெயரைப் பிரதிமை செய்வதிலிருந்து பாதுகாப்பதுடன். உற்பத்தியின் உண்மையான பூர்வீகத்தை நுகர்வோருக்கு உறுதிப்படுத்துவதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்புப் பெறுவர்.

அதற்கமைய. 'சிலோன் தேயிலை' இற்கான புவியியல் குறிகாட்டியைப் பதிவு செய்வதற்கு ஏற்புடைய செயன்முறையை இலகுபடுத்துவதற்காக Centre de cooperation International en Recherche Agronomique pour le Development (CIRAD மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு (UNIDO) போன்ற நிறுவனங்கள் ஊடாக பிரான்ஸ் அரசாங்கத்தின் Agency Francaise de Development (AFD)  இலங்கை தேயிலை சபைக்கு தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய. குறித்த பணிக்காக AFD நிறுவனம். CIRAD நிறுவனம் மற்றும் இலங்கை தேயிலை சபைக்கும் இடையிலான முத்தரப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கான டயர் விலைமனுக் கோரல்
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு 21,600 புதிய டயர்களின் தேவைக்கான பெறுகைக்காக திறந்த போட்டி விலைமனுக் கோரப்பட்டுள்ளதுடன். அதற்காக 02 போட்டி விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய குறித்த பெறுகைக் கோரலுக்கு விபரமாக பதிலளிக்கப்பட்டுள்ள போட்டி விலை மனுதாரரான சியெட் - களனி இன்டர்நெசனல் தனியார் டயர் கம்பனிக்கு வழங்குவதற்காக போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வடமத்திய மஹஎல கருத்திட்டத்தை துரிதமாகப் பூர்த்தி செய்தல்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பத்து ஆண்டுகள் நிதியனுசரணை வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 'மகாவலி நீர்ப் பாதுகாப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம்' அரசாங்கத்தின் நடுத்தரகால அபிவிருத்தி அணுகுமுறையின் கீழ் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் துறையில் பிரதான முதலீடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

966 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறித்த திட்டத்திற்காக முதலிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் கீழ் வடக்கு. வடமத்திய. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக குடிநீர் மற்றும் நீர்ப்பாசன நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடமத்திய மஹஎல. வயம்ப மஹஎல. மினிப்பே மஹஎல மற்றும் மீகஹகிருல. மஹகித்துல போன்ற தேக்கி வைக்கும் நீர்த்தேக்கத் தொகுதிகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கமைய.

கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வரும் வடமத்திய மாகாண மஹஎல கட்டம் 1 மற்றும் கட்டம் 2 இனை நிர்மாணிப்பதன் மூலம் மொரகஹகந்த களுகங்கை நீர்த்தேக்கங்கள் தேக்கி வைக்கப்படும் மேலதிக நீர். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இரண்டு போகங்கள் பயிரிடுவதற்கு இயலுமை கொண்ட 73.800 ஹெக்ரயார் நீர்ப்பாசன நிலங்களுக்குப் பயன்படுத்தவும். 250.000 குடும்பங்களுக்கான குடிநீரை விநியோகிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கொள்கை ரீதியான தீர்மானத்திற்கமைய 06 வருடங்களில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த குறித்த கட்டுமானப் பணிகளை 04 வருடங்களில் அதாவது 2025 ஆம் ஆண்டாகும் போது பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு இசைவாக குறித்த ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்து குறித்த நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் வழங்கல்
2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 1,137,500 + 10/- 5%  பீப்பாய்கள் மற்றும் டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 0.001) 262,500 + 10/- 5% பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட விலை மனுத்தாரர்களிடம் போட்டி விலை மனு கோரப்பட்டுள்ளது.
அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த பெறுகையை சிங்கப்பூர் M/s Vitol Asia Pte. Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான பெற்றோல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் வழங்கல்
2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாத காலத்திற்கான பெற்றோல் (92 Unl) 1,341,000 + 10/- 5%  பீப்பாய்கள் மற்றும் பெற்றோல்; (95 Unl) 459,000 + 10/- 5%  பீப்பாய்களை இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பெற்றோலியக் கூட்டுதாபனத்தில் பதிவு செய்யப்பட்ட விலை மனுத்தாரர்களிடம் போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த பெறுகையை சிங்கப்பூர் M/s Vitol Asia Pte. Ltd  நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. கடன் இணக்க கட்டளைச் சட்டம் திருத்தம் செய்தல்
கடன் இணக்க சபை. கடன் சுமையால் அதிக அழுத்தங்களுக்கு ஆளாகிய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் பணிகளை மிகவும் பயனுள்ள வகையில் மேற்கொள்வதற்கு இயலுமான வகையில், கடன் மானியக் கட்டளைச் சட்டத்தை சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்காக, நீதி அமைச்சர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள கடன் மானியச் சட்டம் திருத்தம் செய்வதற்கான ஆலோசனைக் குழுவால் அடிப்படை சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த அடிப்படை சட்டமூலத்திற்கமைய, கடன் மானிய கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும்.

அதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும். நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.