யுகதனவி விவகாரம்: பகிரங்க கூட்டம் நடத்த 10 கட்சிகளினதும் தலைவர்கள் தீர்மானம்

யுகதனவி விவகாரம்: பகிரங்க கூட்டம் நடத்த 10 கட்சிகளினதும் தலைவர்கள் தீர்மானம்

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் நூற்றுக்கு 40 வீத பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பகிரங்க கூட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

மக்கள் சபை என்ற பெயரில் மேற்படி பகிரங்க கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பில் நடத்தப்படவுள்ளதாக அந்தக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் மேற்கொண்டுள்ள மேற்படி தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் கூடி பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்தன தேரர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஏ. எல். எம்.அதாவுல்லா, அசங்க நவரட்ன, டிரான் அலஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்களே மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிராக மேற்படி கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு ஒன்றிணைந்த கூட்டறிக்கை ஒன்றை ஓரிரு தினங்களில் வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்