அருகி வரும் தாவரங்களை பாதுகாக்கும் அரிய முயற்சி

அருகி வரும் தாவரங்களை பாதுகாக்கும் அரிய முயற்சி-Rare Plant-Agriculture

மூதூர் பிரதேசத்தில் கடந்த கால அசாதாரண சூழலுக்கு முன்னர் நெற்செய்கை, மீன்பிடி, தோட்டச் செய்கை, கால்நடை வளர்ப்பு மற்றும் சிறுகைத்தொழில்கள் என பல்வேறு தொழில் முயற்சிகளில் மக்கள் ஈடுபட்டதுடன் தமது தோட்டக்காணிகளிலும் கனிதரும் மரங்களையும் வளர்த்து வந்தனர்.

ஆனால் மூதூர் பிரதேசத்தில் மாமர இனங்கள் தற்போது அருகி வருகின்றன. எனவே மாமரங்களை அழிவில் இருந்து காப்பாற்றுவதற்காக ஓய்வுநிலை நூலகர் ஏ.எஸ்.முபாரக் ஒட்டு முறையில் உருவாக்கிய 27 இன மாமர வகைகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகின்றார்.

அண்மையில் தினகரனுக்காக அவரை சந்தித்த போது ஓய்வுநிலை நூலகர் முபாரக் தெரிவித்ததாவது:

"நான் பாடசாலையில் 1970 இல் கல்வி கற்கும் காலத்தில் விஞ்ஞான பாடம் என்பது எனது மிக விருப்பமாக இருந்தது. அப்போது விஞ்ஞான பாடத்தில் போதித்த ஆசிரியை குணநாதன் நிர்மலா தாவர இனப்பெருக்க முறை பற்றி மிக விளக்கமாக கற்பித்துத் தந்தார். மூதூர் பிரதேசத்தில் தற்போது அழிந்தும், அருகியும் சென்று கொண்டிருக்கும் மாவின வகைகளை ஒட்டுமுறை மூலம் மீள் உருவாக்கம் செய்ய வேண்டுமென நான் முயற்சித்து 27 வகையான மா ஒட்டுக்களை ஒட்டினேன். தாய்த்தாவரத்தின் குண அம்சங்கள் மாறாமல் இருக்கவும் மீள் உற்பத்தி செய்யவும் இவ்வொட்டு முறைக்கான முயற்சி செய்யப்பட்டுள்ளது.கல்விக்காக எமது மக்கள் பட்ட கஷ்டங்களை இன்று நவீன முறையில் மக்கள் அனுபவிப்பதற்கு இது போன்ற முயற்சிகள் பலனளிக்கும்".

இவ்வாறு அவர் கூறினார்.

அருகி வரும் கருங்காலி முதிரை, மாகோகனி, புளி, புங்கை போன்ற பல இன மரங்களையும் தேடி நடுவதிலும் பாரிய பல கனிதரும் மரங்களை, பாதுகாப்பதிலும் ஓய்வுநிலை நூலகர் ஏ.எஸ்.முபாரக் மேற்கொண்டுள்ள இம்முயற்சியை மூதூர் பிரதேச மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

எஸ். கஸ்ஸாலி
(மூதூர் தினகரன் நிருபர்)