கொவிட்-19: உலகில் 180,000 சுகாதார ஊழியர்கள் பலி

கொவிட்-19 நோய்ப்பரவலால், சுகாதாரத்துறை ஊழியர்கள் பல்லாயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நோய்ப்பரவல் ஆரம்பித்ததில் இருந்து இவ்வாண்டு மே மாதம் வரையில் 80,000 முதல் 180,000 பேர் வரை பலியாகி இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்படுவதாக அது குறிப்பிட்டது.

உலக அளவில் தடுப்பூசிகள் சமமான முறையில் விநியோகிக்கப்படாததே அதற்குக் காரணம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் சாடினார்.

தடுப்பூசி போடுவதில், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

119 நாடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து சராசரியாக, ஐந்தில் 2 சுகாதாரத்துறை ஊழியர்கள் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக கெப்ரியேஸஸ் குறிப்பிட்டார். இவ்வாண்டு இறுதியில், 80க்கும் மேற்பட்ட நாடுகளின் மக்கள்தொகையில், 40 வீதத்தினர் தடுப்பூசி போட்டிருக்க மாட்டார்கள் என்று அவர் எச்சரித்தார். தடுப்பு மருந்துப் பற்றாக்குறையே அதற்குக் காரணமாகும்.