தீர்வுகள் ஊடாகவே எதிர்பாரக்கும் இலக்குகளை இலகுவாக அடையலாம்

தீர்வுகள் ஊடாகவே எதிர்பாரக்கும் இலக்குகளை இலகுவாக அடையலாம்

- விவசாயிகள் முகங்கொடுக்கும் அசௌகரியம் குறித்து ஜனாதிபதி கருத்து

விவசாயிகள் முகம்கொடுக்கும் அசௌகரிங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம், எதிர்பார்க்கும் இலக்கை நோக்கிப் பயணிக்க முடியுமென்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சரியானதைச் செய்வது பாரிய சவாலாகும். அதற்கு ஒன்றிணைந்து முகம்கொடுப்பதுடன், முன்னோக்கிப் பயணிப்பதன் மூலம், எதிர்பார்க்கும் இலக்கை அடைந்துகொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.

கமநலச் சேவைகள் உத்தியோகத்தர்களுடன் (21) வீடியோ தொழில்நுட்பத்தினூடாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுற்றாடலையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பதுடன், அதிக இலாபத்தை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும். ஒரு போகம், இரு போகத்துக்கு மாத்திரமன்றி, பல சந்ததியினர் பயன்பெறச் செய்வதே பசுமை விவசாயத்தின் இலக்காகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விவசாயிகள் முகம்கொடுக்கும் பிரதான பிரச்சினையை அடையாளம் கண்டு, அது தொடர்பாக அரசாங்கத்தை அறிவுறுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகுமென்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அப்போது அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் குறிப்பிட்டார்.

“தவறான விடயமொன்றை செய்யுமாறு எவரிடமும் எப்போதும் கூறமாட்டேன்” என்றும், உத்தியோகத்தர்கள் முன்னிலையில் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

பசுமை விவசாயத்தில் ஈடுபடுவதால், பயிரிடப்படும் நில அளவைக் குறைக்க இடமளிக்க முடியாது. சேதனப் பசளையைப் பயன்பாட்டுடன் முன்னோக்கிப் பயணிப்பதற்கான விவசாயிகளை ஊக்கப்படுத்துவது, நாட்டுக்கான அனைவரதும் பொறுப்பாகுமென்றும் விவசாயிகளைச் சந்தித்து விடயங்களைத் தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமென்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். உலகம் ஏற்றுக்கொண்டுள்ள உயர் சுற்றாடல் பாதுகாப்புடன் கூடிய உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, நைட்ரஜன் உரத்துடன் திரவ நைட்ரஜனைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. நெனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட இந்தத் திரவ உரத்திலுள்ள நைட்ரஜன் கூறு, இலைகளின் மூலம் நேரடியாக உள்ளீர்க்கப்படும். அந்தத் திரவ நைட்ரஜனை எதிர்காலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.

விளைச்சல் குறைவடைதல் தொடர்பாக விவசாயிகளுக்குத் தேவையற்ற அச்ச நிலை ஏற்பட்டிருப்பதோடு, உரிய நேரத்துக்கு உரத்தை விவசாயிகளின் கைகளுக்கு வழங்குவதன் மூலமும் சரியான தெளிவூட்டல்களை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதன் மூலமும், விவசாயிகளுக்குள் இருக்கும் பயம் மற்றும் பின்வாங்கும் தன்மையை நிவர்த்தி செய்துகொள்ள முடியுமென்று குறிப்பிட்ட கமநலச் சேவை உத்தியோகத்தர்கள், விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற சேதனப் பசளையின் தரம் மற்றும் சிறப்பு தன்மையை பரீட்சிக்கும் வசதிகள் போதுமானளவில் இல்லையென்பதால், அவ்வசதிகளை விரிவுபடுத்தித் தருமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள ஊக்கக் கொடுப்பனவுகள், அடிப்படைக் கொடுப்பனவுகள் என்பன தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்கால போகங்களின் போது, சேதனப் பசளை உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகத் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோருடன், கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், 08 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாவட்ட உதவி மற்றும் பிரதி கமநலச் சேவை ஆணையாளர்கள், பிரதேச கமநல சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர், இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.