தமிழ் தலைமைகளால் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

தமிழ் தலைமைகளால் பிரச்சினையை மாத்திரம் தான் சொல்ல முடியும். 72 வருடங்கள் அல்ல, 700 வருடங்கள் சென்றாலும் எமது மக்களுக்கான பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க இவர்களால் முடியாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தினூடாக ஆயித்தியமலை மணிபுரம் தணிகாச்சலம் வீதியினை கொங்கிறீட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (19) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சிபார்சில் 2.2 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள 875 மீற்றர் வீதிக்கான வேலைத்திட்டத்தினை இராஜாங்க அமைச்சர் ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழ் தேசியம் என்பது தடம் மாறலாம் தமிழ் தேசியம் தடம் புரள கூடாது இதுதான் யதார்த்தம். 1983 இற்கு அகிம்சை வழி சாத்வீகப் போராட்டம் அதுதான் தமிழ் தேசியம். 1983 முதல் ஆயுதம் தூக்காத போராட்டம் அதுதான் தமிழ் தேசியத்தின் பாதை.  1983ஆம் ஆண்டிற்கு பிற்பாடு விடுதலை புலிகள் ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். அகிம்சையில் இருந்து ஆயுதப் போராட்டம். 2009 மே மாதத்திற்கு பிறகு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட போராட்டமாக மாறியது. வுரலாற்றில் தமிழ் தேசியம் தடம் மாறி வந்திருக்கின்றது ஆனால் தடம் புரள கூடாது காலம் சூழ்நிலைக்கேற்றவாறு நாம் சிந்திக்க வேண்டும்.

விடிய விடிய போராடினாலும் அம்பாறையில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்ள முடியாது. இன்று முஸ்லிம் சமூகம் அங்கு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கின்றார்கள். அதேபோல விடிய விடிய முயற்சித்தாலும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை மாத்திரமே திருகோணமலையில் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோன்று இன்னும் பத்து வருடங்களின் பின்பு அந்த ஒருவர் கூட வர முடியுமா என்ற சந்தேகம் இருக்கின்றது. எங்கே போய்க் கொண்டிருக்கின்றது இந்த மாகாணம். நான் இனவாதம் பேசவில்லை என் சார்ந்த சமூகத்தின் நிலைமை தொடர்பிலேயே பேசிக்கொண்டிருக்கின்றேன் என்றார்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்