கல்வித்துறையை வீழ்ச்சியிலிருந்து மீட்க அனைவரும் கைகொடுப்போம்!

நாட்டில் இருநூறுக்கும் குறைவான எண்ணிக்கையுள்ள மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் நேற்று 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மாத்திரமன்றி, நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்களின் நலன் மீது அக்கறை கொண்டுள்ள அனைவருக்குமே மகிழ்ச்சியும், நிம்மதியும் தருகின்ற செய்தி இதுவாகும்.

நாட்டில் கொவிட் தொற்று படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து அவ்வப்போது மூடப்பட்ட பாடசாலைகள், பின்னர் நீண்ட காலமாக தொடர்ச்சியாகவே மூடப்பட்டு இயங்காத நிலைமையில் இருந்தன. இலங்கையில் கொவிட் தொற்று பரவுகின்ற வேகத்தில் தற்போது வீழ்ச்சி நிலைமை படிப்படியாக ஏற்பட்டு வருவதனால் பாடசாலைகளையும் படிப்படியாக ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் முதற் கட்டமாகவே நாட்டில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஏனைய பாடசாலைகளையும் மீண்டும் படிப்படியாக ஆரம்பிப்பதே கல்வியமைச்சின் திட்டமாகும். இந்த விடயத்தில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகிய அனைவரதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகின்றது.

கொவிட் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் ஆசிரியர்களில் ஒரு தொகுதியினர் மாணவர்களின் நலன் கருதி ‘ஒன்லைன்’ ஊடாக வகுப்புகளை நடத்தி வந்தனர். அவர்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்களாவர். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வீழ்ச்சியடையாமல் மாணவர்களுடன் தொடர்பைப் பேணியவாறு கற்பித்தலை மேற்கொண்ட அவ்வாறான ஆசிரியர்களின் சேவை நன்றிக்குரியதாகும்.

அதேசமயம் ஆசிரியர்களில் மற்றொரு தொகுதியினர் ‘ஒன்லைன்’ ஊடாகவேனும் மாணவர்களுக்கு கற்பிக்கவில்லையென்பதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். அவ்வாறான ஆசிரியர்கள் கடந்த ஒன்றரை வருடத்துக்கு மேற்பட்ட காலத்தில் மாணவர்களின் கல்விக்காக சற்றேனும் பணியில் ஈடுபடவில்லையென்ற மனக்குறையை பெற்றோர் வெளிப்படையாகவே கூறுகின்றனர். அதாவது ஒரு தொகுதி ஆசிரியர்கள் மனசாட்சிக்கு விரோதமின்றி ‘ஒன்லைன்’ ஊடாகவேனும் கற்பித்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், மற்றொரு தொகுதி ஆசிரியர்கள் வீட்டிலேயே முடங்கியபடி இருந்தனர்.

ஆசிரிய சேவையின் அர்ப்பணிப்பான பணியை செவ்வனே முன்னெடுத்துச் சென்ற ஆசிரியர்களை அனைத்து தரப்பினருமே பாராட்டுவது முக்கியம். அதேவேளை 200 இற்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதனால், மாணவர்களின் கல்வி நடவடிக்கையை துரித கதியில் முன்னெடுத்துச் செல்வதற்காக அனைத்து ஆசிரியர்களும் அர்ப்பணிப்பான சேவையை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகின்றது. மாணவர்களின் கல்வியில் பெருவீழ்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளதனால் அவர்களை மீண்டும் கைதூக்கி விடும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கொவிட் பெருந்தொற்று நாட்டில் நிலவிய காலப் பகுதியிலும் மாணவர்களுக்கான பிரதான பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கல்வியமைச்சினதும், பரீட்சைகள் திணைக்களத்தினதும் பணிகளை மாத்திரமன்றி, அதற்கான பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களாவர். க.பொ.த சாதாரணதரப் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை, தரம்-5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியனவே வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

பாடசாலை ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் ‘ஒன்லைன்’ ஊடாகக் கற்பிப்பதில் நாட்டம் காட்டாத போதிலும், அவர்கள் டியூசன் வகுப்புகளை ‘ஒன்லைன்’ ஊடாக மிகுந்த ஈடுபாட்டுடன் கற்பித்து வந்தனரென்பது பலருக்கும் தெரிந்த விடயமாகும். இவ்வாறான டியூசன் ஆசிரியர்கள் தங்களது கட்டணத்தை சிறிதளவும் குறைத்துக் கொள்ளவில்லை. கொவிட் தொற்று காலப் பகுதியில் பெருமளவான குடும்பங்கள் தங்களது வருமானத்தை இழந்திருந்த போதிலும், டியூசன் கட்டணத்தை ஆசிரியர்கள் குறைத்துக் கொள்ளவேயில்லை.

கொவிட் முடக்க காலத்தில் மாணவர்கள் பொதுப்பரீட்சைக்குத் தோற்றியதில் டியூசன் கல்வியே பெரிதும் கைகொடுத்தது என்பதே உண்மை. ஆனால் அதேசமயம், வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோருக்கு கொவிட் முடக்க காலத்தில் வருமானம் எதுவும் இருக்கவில்லை. வறிய பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு டியூசன் கட்டணத்தை செலுத்த முடியாதவர்களாக இருந்தனர். அவ்வாறான வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டதும் கவலைக்குரியதாகும்.

கொவிட் காலப் பகுதியில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் வறுமையும் தாக்கம் செலுத்தியுள்ளமை பரிதாபத்துடன் நோக்கப்பட வேண்டியதாகும். கொவிட் முடக்க காலப் பகுதியிலேயே பாடசாலைக் கல்வியின் முக்கியத்துவம் பெற்றோரால் நன்கு உணரப்பட்டது. வறிய மாணவர்களைப் பொறுத்த வரை அவர்கள் இலவசக் கல்வியிலேயே தங்கியிருக்கின்றனரென்பதை கொரோனா முடக்க காலப் பகுதி நன்றாகவே உணர்த்தியுள்ளது.

கொவிட் பெருந்தொற்று உலகளவில் வீழ்ச்சி நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் இன்றைய காலப் பகுதியில் இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளை படிப்படியாகத் திறக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. மாணவர்களை கல்விப் புலத்துக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு அனைத்து தரப்பினரும் தோள் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.