வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை வீசி சோதனை

வட கொரியா நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புவியீர்ப்பு ஏவுகணையைச் சோதித்திருப்பதாக உறுதிசெய்துள்ளது.

புதிய வகை ஏவுகணை பாய்ச்சப்பட்டதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்தது. 2016இல் சோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புதிய சோதனை மேற்கொள்ளப்பட்டதாய் அது குறிப்பிட்டது.

இதற்கு முன்னதாகப் பாய்ச்சப்பட்ட ஏவுகணைகளைக் காட்டிலும் புதிய வகை மெல்லியதாக இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, இன்னும் கூடுதலான, குறுகிய இலக்கு கொண்ட ஏவுகணைகளை ஒரே நீர்மூழ்கிக் கப்பலில் வைத்திருக்கும் வசதி செய்யப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் ஏவுகணைச் சோதனையில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களில் வட கொரியா அடுத்தடுத்து பல ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் ஹைபர் சோனிக் மற்றும் தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் அடங்கும் என வட கொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் இந்த சோதனைகளில் சில, கடுமையான சர்வதேச தடைகளை மீறுவதாக உள்ளது.

வட கொரியா ஏவுகணை சோதனைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை ஐ.நா தடை செய்துள்ளது.

இதில் தற்போது சோதிக்கப்பட்டிருக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மிக ஆபத்தான ஒன்றாக ஐ.நா கருதுகிறது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தொலைதூரம் இலக்கு வைக்க முடியும், வேகமாக செல்ல முடியும் மற்றும் அதிக சுமைகளை எடுத்துச் செல்ல முடியும். வட கொரியா பொதுவாக தனது நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கும் சின்போ துறைமுகத்திலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்தது. இந்த சின்போ துறைமுகம் வட கொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ளது. மேலும் அந்த ஏவுகணை `ஜப்பானின் கடற்கரை` என்ற பகுதியில் விழுந்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனையை அடுத்து அது பற்றி பேசுவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை நேற்று அவசரக் கூட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.