சமூகப் பணியை என்றும் தொடரும் மருதமுனை என்.எம். இஸ்மாயில்

சமூகப் பணியை என்றும் தொடரும் மருதமுனை என்.எம். இஸ்மாயில்-Maruthamunai NM Ismail

மருதமுனையின் சமூகசேவைப் பரப்பில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சமூக சேவை ஆளுமை நாகூரான் முகம்மது இஸ்மாயில்(ஹம்தூன் ஜி.எஸ்) ஆவார். இவர் பயிர்ச் செய்கை உத்தியோகத்தராகவும்,கிராம உத்தியோகத்ராகவும், ஹாதி நீதிபதியாகவும் 39 வருடங்கள் அரசபணியாற்றி ஓய்வு நிலையில் உள்ளார்.

1949.07.22 ஆம் திகதி மருதமுனையில் பிறந்த இவர் 1978.06.01ஆம் திகதி முதல் விவசாயத் திணைக்களத்தில் பயிர்ச்செய்கை உத்தியோகத்தராக நியமனம் பெற்றார். இப்பதவியில் இருந்தவர்களை அரசு கிராம உத்தியோகத்தர்களாக நியமித்ததையடுத்து இவர் 1989.07-01ஆம் திகதி முதல் கிராம உத்தயோகத்தராகப் பதவியேற்று கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் பல கிராமங்களில் சிறப்பாகக் கடமையாற்றி 2009.07-.01ஆம் திகதியுடன் தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றார்.அதன் பின்னர் 2013.01-01ஆம் திகதி முதல் கரைவாகுப்பற்று ஹாதி நீதிபதியாகப் பதவியேற்று பல குடும்பங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்து 2016.02.21ஆம் திகதி ஓய்வு பெற்றார்.

1963.04.14ஆம் திகதி முதல் பத்து வருடங்கள் மருதமுனை ஈஸ்ட் லங்கா விளையாட்டுக் கழகத்தின் பொருளாளராக கடமையாற்றியுள்ளார்.அதே போன்று மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜும்ஆ பள்ளிவாசலின் உதவிப் பொருளாளராகவும், கரைவாகு வடக்கு பிரஜைகள் குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளதுடன் மருதமுனை சமாதான சபையின் உறுப்பினராகவும்,கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினராகவும்,உப தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் அம்பாறை மாவட்ட கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவராக பத்து வருடங்கள் பணிபுரிந்ததுடன் அகில இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் உப தலைவராகவும் பதவி வகித்துள்ளார். ஜனசக்தி திட்டத்தின் மூலம் மருதமுனையில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி செயற்பட்டவர். அத்துடன் பல சமூக சேவை அமைப்புக்களிலும் இணைந்து சமூகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்த்தின் பின்னர், பிரதேச செயலாளராகவிருந்த ஏ.எச்.எம்.அன்சார் அவர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டுள்ளார்.அதே போன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹரீட்டாஸ் எஹட் நிறுவனத்தின் மூலமாக மருதமுனைப் பிரதேசத்தில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மானித்துக் கொடுப்பதில் அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டுள்ளார்.

தற்பொழுது தன்னால் முடிந்த வரை ஏழைகளுக்கு உதவுவதிலும், பாடசாலைகள். பள்ளிவாசல்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கும் உதவுவதிலும் அக்கறை காட்டி வருகின்றார். அத்துடன் சமயக் கடமைகளில் அதிக ஈடுபாட்டுடன் செயற்படுகின்றார். இவரது சமூக சேவைப் பணிக்காக தேசகீர்த்தி,தேசமானிய,சாமஸ்ரீ உள்ளிட்ட பல பட்டங்களும், பல விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

பி.எம்.எம்.ஏ. காதர்
(மருதமுனை தினகரன் நிருபர்)