கெரவலப்பிட்டி அனல் மின்நிலைய 40% பங்கு விற்பனையை தடுக்குமாறு மனு

கெரவலப்பிட்டி அனல் மின்நிலைய 40% பங்கு விற்பனையை தடுக்குமாறு மனு-SJB Files FR Petition Against Kerawalapitiya Power Plant Deal

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அரசின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பியினால் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கெரவலப்பிட்டிய யுகதனவி அனல் மின் நிலையத்தின் 40% பங்குகள் அமெரிக்காவின் New Fortress Energy நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

ஐ.ம.ச. கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்டு குறித்த மனுவில், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை, அமைச்சரவை செயலாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் New Fortress Energy நிறுவனம் உள்ளிட்ட 54 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மனுவின் விசாரணை முடியும் வரை யுகதனவி அனல் மின்நிலையத்தை குறித்த அமெரிக்க நிறுவனத்திடம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை தடுத்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.