பங்களாதேஷில் மத வன்முறையை எதிர்த்து தலைநகரில் ஆர்ப்பாட்டம்

பங்களாதேஷில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக பதற்றத்தை ஏற்படுத்தி வரும் மத வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும்படி கோரி தலைநகர் டக்காவில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறைகளில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதோடு பலரும் காயமடைந்துள்ளனர்.

ஹிந்துக் கோயிலில் உள்ள சிலை ஒன்றின் காலில் முஸ்லிம்களின் புனித புத்தகமான அல் குர்ஆன் வைக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக ஊடகத்தில் வெளியானதை அடுத்தே இந்தக் கலவரம் வெடித்தது. இதன்போதும் சிறுபான்மை ஹிந்துக்கள் மற்றும் அவர்களின் கோயில்கள் தாக்கப்பட்டன.

இந்த தாக்குதல்கள் பங்களாதேஷ் மக்களிடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் அப்துஸ்ஸமான் கான் சாடினார்.

கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி தென் கிழக்கு மாவட்டமான நோகாலியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறை வெடித்தது. இதன்போது இரு ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் வடக்கு கிராமம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற புதிய வன்முறைகளில் அடையாளம் தெரியாத நபர்களால் 20க்கும் அதிகமான ஹிந்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான தாக்குதல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தபோதும் இன்னும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

வன்முறையை தடுக்கத் தவறியது தொடர்பில் பிரச்சினைக்குரிய பகுதிகளைச் சேர்ந்த ஏழு பொலிஸ் அதிகாரிகளை உள்துறை அமைச்சு கடந்த திங்கட்கிழமை இடம்மாற்றியது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு டாக்காவில் நூற்றுக்கணக்கானவர்கள் கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பிரதான வீதியை இடைமறித்து இந்த ஆர்ப்பாட்டத்தை செய்தனர். இதில் ஹிந்து அமைப்புகளும் இணைந்திருந்தன.