வழக்கொழிந்து செல்லும் புத்தக வாசிப்புக்கு புத்துயிர் அளிப்போம்!

வழக்கொழிந்து செல்லும் புத்தக வாசிப்புக்கு புத்துயிர் அளிப்போம்!-Month of Reading

- நூலகம் இல்லாத இல்லம் இருள் சூழ்ந்த இருப்பிடம்

ஒவ்வொருவர் வீட்டிலும் சிறு நூலகமாவது இருப்பது அவசியம். கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று கூறுவார்கள். அதே போலவே நூலகம் இல்லாத இடம் பறவைகள் அற்ற ஒரு மரத்திற்கு சமனாக ஒப்பிடப்படும்.

சுவாமி விவேகானந்தர் கூறியிருப்பதாவது 'ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன'.

அவ்வாறே ஒருவர் மகாத்மா காந்தியிடம் உங்களுக்கு ஒரு கோடி ருபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்ட போது அவர் சிறிதும் தயங்காமல் ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று கூறினாராம். இக்கருத்திலிருந்தே நூலகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

அதே போல அப்துல் கலாமிடம் உங்களிடம் ஒரு பத்து ரூபா இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்க ‘நான் உடனடியாக ஒரு புத்தகம் வாங்குவேன்' என்றுரைத்தாராம்.

கிரேக்க அறிஞர் பிளேட்டோ கூட 'புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத அறை போன்றது. எந்த வீட்டில் நூலகம் இருக்கிறதோ அந்த வீட்டில் ஆன்மா இருக்கின்றது' என கூறியுள்ளார்.

லெனின் கூட 'நூலகம் இல்லாத ஊரை நான் ஒரு ஊராக மதிப்பதே இல்லை' எனக் கூறியிருக்கின்றார். மேலும் சிசரோ 'புத்தகம் இல்லாத ஒரு அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது' என கூறியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் ‘ ஒரு நூலகம் திறந்தால் புத்திசாலிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி, ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் நம்மைப் படைத்த கடவுளுக்கே மகிழ்ச்சி' என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கட்டுரை, கவிதை, கதை, பொன்மொழிகள், கலை, மருத்துவம் சார்ந்த நூல்கள் என பல்வேறு வகையான நூல்கள் நூலகத்தில் குவிந்து கிடக்கின்றன. அவரவர் தமது விருப்பத்திற்கேற்ப நூல்களை தெரிவு செய்து வாசிக்க முடியும். ஜோசப் அடிசன் கருத்து யாதெனில் 'படித்தல் என்பது ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை கருவியாகும். கல்வியின் நிறைவு ஒழுக்கம். இதுவே வாழ்க்கைக்கான அத்திவாரம்’.

நெல்சன் மண்டேலா கூட ‘வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம், சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். ஏனெனில் அவரது 30 ஆண்டுகள் சிறைவாழ்வில் அவரது ஒரே புகலிடமாய் இருந்தவை புத்தகங்களேயாகும்.

உலகத்தின் முதல் தத்துவஞானியான சோக்ரடீஸ் கூட சொல்லியிருக்கின்றார். 'எனக்கு வயது 85, எனக்கு எல்லாம் தெரியுமென்று நினைத்திருந்தேன் ஆனால் அதிகம் படிக்க, படிக்க எனக்குத் தெரிந்தது கொஞ்சம் என்பதை உணர்ந்து கொள்கின்றேன்'.

மகாத்மா காந்தியின் 'சத்தியசோதனை' புத்தகம் கொண்டுள்ள கருத்துக்கள் எண்ணிலடங்காதவை. தற்கொலைக்கு முயற்சி செய்த ஒருவர் இந்த சத்தியசோதனை புத்தகத்தை வாசித்த பின்னர் தற்கொலை என்ற எண்ணத்தையே முற்றாக அழித்ததாகக் கூறப்படுகின்றது.

'எப்போதும் வசந்தகாலம் தான் ஒரு புத்தகத்தோடு வாழ்பவனுக்கு' என சீனப்பழமொழி கூறுகின்றது. இதே போலவே 'ஓதுவது ஒழியேல்' என்று தமிழில் கூறப்படுகின்றது.

மேலும் சிக்மண்ட் ப்ராய்ட் கூட உடலிற்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோலவே மனதிற்கு பயிற்சி புத்தக வாசிப்பு என்று கூறியுள்ளார். ஜோர்ஜ் பெர்னாட் ஷா கூட ‘நல்ல புத்தகமே சிறந்த நண்பன். உதவி தேவையான போதெல்லாம் நாம் நண்பர்களை நாடிச் செல்வது போல துணை வேண்டும் போதெல்லாம் புத்தகங்களை நாடிச் செல்ல வேண்டும்’ என்று கூறியிருக்கின்றார்.

'நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்' என்று ஆபிரகாம் லிங்கன் கூறியிருக்கின்றார்.

‘புத்தகங்கள் உள்ளத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை. தனிமை தரும் அற்புத சுககங்களிலொன்று புத்தகம் வாசிப்பது தான்’ என ஹெரால்ட் ப்ளூம் கூறியுள்ளார்.

ஜவஹர்லால் நேரு 'நான் மட்டுமே வாழ வேண்டும் எனும் நிர்பந்தத்தோடு தனி தீவுக்கு அனுப்பினாலும் போவதற்கு நான் தயார், புத்தகங்களோடு போக அனுமதித்தால்' என்றார்.

எந்த ஒரு விடயத்தையும் ஆணித்தரமாக விளங்கப்படுத்துவதற்கு நூல் ஆதாரங்கள் மிக அவசியமாகின்றன.

திருமுலர் தனது திருமந்திரத்தில் கூறியிருப்பதாவது,

'மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்து அறிந்து ஓதிடின்

ஞாலத் தலைபவனை நண்ணுவர் அன்றே'.

ஜுலியஸ் சீசர் கூறியிருப்பதாவது, 'ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி'. பேரறிஞர் அண்ணா கூறியிருப்பதாவது 'நேரம் வீணாகிறதே என்று பதற்ற ப்பட வேண்டிய அவசியம் அற்றவர்கள் புத்தகங்களை வாசிப்பவர்கள் மட்டுமே'.

வளர்ந்து வரும் இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஓடிக் கொண்டிருக்கின்றோம். எவரிடம் கேட்டாலும் நேரமில்லை என்றே கூறுகின்றனர். மறுக்க முடியாத உண்மைதான். ஆனால் நேரத்தை ஒதுக்குவது கூட எமது தலையாய கடமையாகும். அந்நேர ஒதுக்கீடு நித்திரைக்காக அல்ல. அதனை புத்தகங்கள் வாசிப்பு மூலம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் வாசிப்பால் ஒரு மனிதன் வாழ்வில் பூரணத்துவம் அடைகின்றான் என்பது மறுக்க முடியாத உண்மை. வாசிப்பின் பயனாக மனம் ஒருநிலைப்படும். மனஅழுத்தம் குறையும். பொது அறிவு, பகுத்தறிவு கூடும். நினைவாற்றல் கூடும். மொழிவளம் அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும்.

சிறந்த புத்தகங்கள் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை தன்னகத்தே தாங்கியுள்ள எல்லையற்ற சமுத்திரங்கள். ஆதலால்தான் மற்றவர்களுக்கு கொடுக்கும் பரிசில்களில் மிகச் சிறந்த பரிசு புத்தகங்கள்தான் என்றால் மிகையாகாது.

இன்றைய காலகட்டத்தில் இளம்பராயத்திலேயே புத்தகங்கள் வாசிப்பை ஊக்குவிக்க வேண்டியது ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், கற்றவர்கள், பத்திரிகையாளர்கள், இளைஞர்கள் மாத்திரமன்றி எமது அனைவரினதும் தலையாய கடமையாகும். நாம் அனைவரும் புத்தக வாசிப்பில் சிறந்த முன்னுதாரணங்களாக விளங்கினால் மாத்திரமே எமது இளம் சமுதாயத்தை பாதுகாத்து வருங்காலத்தை சிறப்பான பாதையில் முன்னெடுக்க முடியும்.

வைத்திய கலாநிதி செல்வி வினோதா சண்முகராஜா
சிரேஷ்ட விரிவுரையாளர்,
சித்த மருத்துவ அலகு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

கலாநிதி திருமதி கௌரி ராஜ்குமார்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
தாவரவியல் துறை, விஞ்ஞான பீடம்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்