கிராமிய வறிய மாணவரும் கல்வி பெறும் வாய்ப்பை வழங்கியவர் அமரர் கன்னங்கரா

கிராமிய வறிய மாணவரும் கல்வி பெறும் வாய்ப்பை வழங்கியவர் அமரர் கன்னங்கரா-CWW Kannangara

தேசத்தின் இலவசக் கல்வியின் தந்தையும், முன்னாள் கல்வி அமைச்சருமான மறைந்த சி.டபிள்யு. டபிள்யு. கன்னங்கராவின் 137ஆவது பிறந்த தின நிகழ்வு கல்வி அமைச்சரும், சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன தலைமையில் மத்துகமவில் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டது.

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவில் இத்தெபான லூல்பத்துவவில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலை மற்றும் அன்னாரின் அஸ்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதிக்கு இந்நிகழ்வின் போது மலரஞ்சலி செலுத்தப்பட்டது. களுத்துறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அநுபா பஸ்குவால் உள்ளிட்ட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக தேரர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார மஹா நாயக்கர் உள்ளிட்ட தேரர்கள், கலாநிதி சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா ஞாபகார்த்த மன்றப் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இலங்கையின் சுதந்திரத்துக்கு முற்பட்ட 1931-1947 காலப் பகுதியில் கல்வி அமைச்சராகப் பணியாற்றிய அன்னார் இலவசக் கல்விக்கான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார். தேசத்தின் கல்வித் துறையில் மத்திய மகா வித்தியாலயங்களை நிறுவிய பெறுமைக்குரியவராகவும் இவர் விளங்குகிறார்.

தேசத்தின் பிள்ளைகள் ஆரம்ப பாடசாலைக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழக கல்வி வரையில் இலவச கல்வி வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கில் அன்னாரினால் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தையென இன்றும் அன்னார் புகழப்படுகின்றார்.

இலங்கையில் மத்திய மகா வித்தியாலயங்களை உருவாக்கிய பெருமைக்குரியவராகவும் அன்னார் விளங்குகிறார். இலங்கையின் முதலாவது மத்திய மகா வித்தியாலயம் களுத்துறை மாவட்டத்திலுள்ள மத்துகம தொகுதியில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அன்று நகர்ப்புற மக்கள் மாத்திரம் பெற்று வந்த கல்வி வசதிகளை கிராமிய மக்களுக்கும் கிடைக்கச் செய்த பெருமையும் அன்னாருக்கே உரித்தாகும்.

அமரர் கன்னங்கராவின் சமூகப் பணிகள் குறித்து இந்நிகழ்வில் பங்கேற்ற பலரும் புகழாரம் சூட்டினர்.

எம்.எஸ்.எம். முன்தஸிர்