பாடசாலைச் சூழலுக்கு மகிழ்வுடன் மீண்டும் திரும்பும் மாணவர்கள்

நாட்டிலுள்ள பாடசாலைகளில் ஒரு தொகுதிப் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுகின்றன. கடந்த ஒன்றரை வருடங்களாக கொவிட் 19 தொற்று பரவுதல் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் ஒரு தொகுதியே இவ்வாறு திறக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள பாடசாலைகள் திறக்கப்பட உள்ளன. இப்பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் மூன்று இலட்சம் மாணவர்கள் நாளை முதல் பாடசாலைக்கு சமுகமளிக்க இருக்கின்றனர்.

இந்நாட்டில் மொத்தம் 10,162 பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 42 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இம்மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் நடவடிக்கைகளில் 2 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் இந்நாட்டிலுள்ள தனியார் பாடசாலைகளிலும் குறிப்பிடத்தக்களவிலான மாணவர்கள் கல்வி பெறுவதையும் மறந்து விட முடியாது.

இந்நாட்டில் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரையும் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகின்றது. இதற்கென வருடா வருடம் மொத்த தேசிய உற்பத்தியில் பெருந்தொகை நிதி கல்விக்கென செலவிடப்படுகின்றது. இவற்றின் பயனாக தென்னாசியப் பிராந்தியத்தில் சிறந்த கல்வி வழங்கும் நாடு என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளது.

ஆன போதிலும் கடந்த 2020 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் சீனாவில் தோற்றம் பெற்று பரவத் தொடங்கிய கொவிட் 19 தொற்று குறுகிய காலப் பகுதியில் உலகம் முழுவதும் பரவி முழு மனித சமூகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியது. அதனால் இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மக்கள் ஒன்றுகூடுவதையும் ஒன்று சேர்வதையும் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் இத்தொற்றின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்த எல்லா நாடுகளும் பாடசாலைகளையும் இழுத்து மூடின. எமது நாட்டில் கடந்த 2020 மார்ச் மாதம் நடுப்பகுதியில் இத்தொற்று பதிவாகத் தொடங்கியதும் பாடசாலைகளும் மூடப்பட்டன. ஆனாலும் பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியது. எனினும் இத்தொற்று கடந்த ஒன்றரை வருட காலப் பகுதியில் அவ்வப்போது தீவிரமடைந்து மூன்று அலைகளைக் கண்டது. அதன் காரணத்தினால் கடந்த ஒன்றரை வருட காலமாக கல்வி நடவடிக்கைகளுக்காகப் பாடசாலைகளைத் திறக்க முடியாத நிலைமையே நிலவி வந்தது.

ஆனால் தொடரான கடும் கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு நடவடிக்கைகளின் பயனாக இத்தொற்றின் பரவுதல் தற்போது பெருவீழ்ச்சி நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி வழங்குதலும் பெரிதும் பங்களித்திருக்கின்றது. குறிப்பாக நாட்டின் சனத்தொகையில் பெரும் பகுதியினருக்கு இத்தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை முதல் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. 'பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டாலும் தாம் கடமைக்கு திரும்பப் போவதில்லை' எனத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுட்டுள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு கடமைக்கு திரும்புவதாக நேற்றுமுன்தினம் அறிவித்துள்ளனர்.

பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறத்தல், அதிபர்கள், ஆசிரியர்கள் கடமைக்கு திரும்புவதற்கான அறிவிப்பு என்பன மக்கள் மத்தியிலும் குறிப்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப மாணவர்களுக்கு கல்வியைப் பெற்றுக் கொடுப்பதும் இத்தொற்று காரணமாக நாட்டின் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள தாக்கங்களைக் குறைத்து தவிர்ப்பதும் இன்றியமையாத தேவையாக விளங்குகின்றன.

ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை அரசாங்கம் நியாயமானதென ஏற்றுக் கொண்டுள்ளதோடு அதற்கான தீர்வு யோசனைகளை முன்வைக்கவும் தவறவில்லை. இம்முரண்பாடு 1995 இல் முன்வைக்கப்பட்ட டி.சி.பெரேரா அறிக்கையின் ஊடாகத் தோற்றம் பெற்றதாகும். இது கடந்த 26 வருடங்களாக நிலவி வரும் முரண்பாடாக உள்ளது. இருப்பினும் இம்முரண்பாட்டுக்கு தீர்வு கோரி ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ள சூழல் இத்தொற்று பரவுதலின் விளைவாக பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியாகக் காணப்படுகின்றது. அப்படியிருந்தும் ஆசிரியர், அதிபர்களின் கோரிக்கைக்கு தீர்வு யோசனையை முன்வைக்க அரசாங்கம் தவறவில்லை.

ஆகவே கள நிலைமைகளுக்கு ஏற்ப மாணவர்களதும் நாட்டினதும் கல்வியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆசிரியரும் செயற்பட வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும்.