சீனாவில் மின்சக்தி நெருக்கடி உலோக கைத்தொழில்துறை பாதிப்பு

சீனாவில் மின்சக்தி விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அது இருபது சதவீதமான அதிகரிப்பாக இருக்குமெனவும் சீன அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இம் முடிவையடுத்து நாட்டில் மின்சக்தியை அதிக அளவில் உபயோகிக்கும் உலோக தயாரிப்புத்துறை பாதிப்பு அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அத்துறை சார்ந்தோர் ஆருடம் கூறியுள்ளனர்.

இந்நாட்டில் பெருமளவிலான மின்சக்தி நிலையங்கள் நிலக்கரியால் இயங்குபவையாக இருப்பதால் நிலக்கரி பாவனையைக் குறைத்து கார்பன் வெளியேற்றத்தை படிப்படியாகக் குறைக்கும் சீன அரசின் திட்டத்தின் காரணமாக நிலக்கரி விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் சில பகுதிகளில் மின்சக்தி தட்டுப்பாடு நிலவுகிறது. மின்சார விலையேற்றமும் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன் விளைவாக உலோகங்களைப் பயன்படுத்தி பொருட்களைத் தயாரிக்கும் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தாமிரம், அலுமினியம், துத்தநாகம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளின் தயாரிப்பு மந்த நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிக்கல் மற்றம் துத்தநாக தொழிற்சாலைகளின் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்திருப்பதால் அவை தமது உற்பத்தியைக் குறைத்திருப்பதாகவும் தெரிகிறது. உலோக பொருட்களின் விலை அதிகரிப்பு உலோகம் சார்ந்த ஏனைய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம் என்று உலோக தயாரிப்பு வட்டாரங்கள் எதிர்வுகூறியுள்ளன.

சீனாவின் வருடாந்த அலுமினியத் தேவை 40 மில்லியன் தொன்கள் என்றும் கடந்த மாத மதிப்பீட்டில் மூன்று மில்லியன் தொன்கள் குறைவடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உலோக பொருட்களின் தயாரிப்பில் சீனா முதலிடம் வகிப்பதோடு அந்நாடே அதிக அளவில் உலோகங்களை பயன்படுத்தவும் செய்கிறது.