கொரோனாவைக் குணப்படுத்த கைமருந்துகள் கைகொடுக்குமா?

கொரோனாவைக் குணப்படுத்த கைமருந்துகள் கைகொடுக்குமா?-COVID Vaccination

- கொவிட் தொற்று ஏற்படும் போது தடுப்பூசி எவ்வாறு எமக்கு பாதுகாப்பு தருகின்றது?

சுகாதார அறிக்கையிடல் தொடர்பில் விடியல் இணையத்தளம் ஊடகவியலாளர்களுக்கு இணையவழி செயலமர்வை அண்மையில் நடத்தியது. கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்படும் ஹிங்குராகொட ஆதார வைத்தியசாலையின் பதில் பொது மருத்துவ நிபுணர் அஹ்லம் எம். முஸ்தபா இந்த செயலமர்வில் வளவாளராகக் கலந்து கொண்டு கொவிட்-19 தொடர்பாக முன்வைத்த கருத்துக்களின் தொகுப்பு

கேள்வி: கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு எவ்வாறான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன?

பதில்: இந்த வைரஸுக்கு எதிராகச் செயற்படக் கூடிய சரியான ஒரு மருந்து என்று கூறும் அளவுக்கு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான பிரதான காரணம் இந்த வைரஸ் மாறுபடும் பிறழ்வுகளைக் கொண்டுள்ளதாகும். எமது நாட்டில் முதலில் அல்பா, பீற்றா என்று ஆரம்பித்து, தற்போது டெல்டாவாக இது உருமாறியுள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட 80 சதவீதமானவர்களுக்கு சில நோய் அறிகுறிகளும் அல்லது எந்தவித நோய் அறிகுறிகள் இல்லாமலும் இருக்கும். அவ்வாறான தொற்றாளர்களுக்கு தற்போது வீடுகளில் வைத்தே சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு காய்ச்சல் வந்தால் சாதாரண பரசிடமோல் மாத்திரை கொடுப்போம். அதேபோல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடிய விட்டமின் சீ, ஈ போன்ற மாத்திரைகளையும் வழங்குவோம். சரியான முறையில் நீராகாரம் எடுத்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்குவோம்.

இந்நோயின் ஆரம்பம் முதல் 5 அல்லது 6 நாட்கள் வரை எந்தவொரு பிரச்சினையும் காட்டாது. உடல் வலியோடு, சாதாரண காய்ச்சல் அல்லது உடல் சோர்வு நிலையில் காணப்படும். இது சுவாசத்தினுடைய மேற்பகுதி மூக்குத்துவாரம், வாய், தொண்டை போன்ற பகுதிகளில் வைரஸ் தன்னுடைய எண்ணிக்கைகளைக் கூட்டிக் கொள்வதற்காக எடுத்துக் கொள்ளப்படும் காலமாகும். இதன் போது, தடிமன், தலைவலி, உடல்வலி போன்ற நோய் அறிகுறிகள் இருப்பதனால் அவருக்கு பெரிதாக எந்தவொரு மருந்தும் தேவைப்படாது. எனினும் 6 அல்லது 7ஆவது நாளிலே இந்த வைரஸினுடைய தாக்கம் நுரையீரலை அடையும் போது அங்கே சில இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு அவருக்கு ஒட்சிசன் குறையும் நிலை ஏற்படும்.

இந்தக் கட்டத்தில் இருப்பவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு நீர்ச்சக்தி குறைவதுடன், இரத்தம் உறையக் கூடிய நிலையும் ஏற்படும். அத்துடன் சிறுநீரகம் மற்றும் ஈரல் போன்றவற்றிலும் பிரச்சினைகள் ஏற்படும். அதற்கான மருந்துகள் கொடுப்போம். அதேபோன்று அவருக்கு ஒரு வைரஸ் தாக்கம் ஏற்பட்டதன் பிற்பாடு பற்றீரியாவின் தாக்கம் ஏற்படும் சந்தர்ப்பம் அதிகம். அதற்கான பிறபொருளெதிரிகள் வழங்கப்படும்.

மூச்சுப் பிரச்சினைகள் வரும் போது இரசாயனங்கள் கலந்து ஆவி பிடிக்க கொடுப்போம். இதற்கு மேலதிகமாக சுவாசத்தில் வரக் கூடிய கஷ்டங்களைக் குறைப்பதற்காக ஒட்சிசன் போதியளவு நுரையீரலுக்கு கொடுக்கும் போதும் அவருடைய சுவாசப்பிரச்சினை படிப்படியாகக் குறைந்து வைரஸினுடைய தாக்கமும் குறையும். இதனால் 10 ஆவது நாளின் போது அவருக்கு பூரணமாக சுகம் கிடைத்து வைத்தியசாலையை விட்டு வெளியேறக்கூடியதாக இருக்கும்.

கேள்வி: கொரோனா வைரஸின் வீரியம் எத்தனை நாட்களுக்கு இருக்கும்?

பதில்: ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 48 மணித்தியாலயங்களுக்கு அவர் மூலமாக இன்னொருவருக்குப் பரவாது. எனினும் 3 ஆவது, 4 ஆவது, 5ஆவது நாளில்தான் காய்ச்சல், தடிமல், உடல் வலி, உடல் சோர்வு ஏற்படும். அதனைத் தொடர்ந்தே வைரஸை மிகவும் பரப்பக் கூடியவராக அவர் மாறுவார். பின்னர் தொற்றுப் பரவல் குறையும். எவ்வாறாயினும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டால் எங்களில் இருந்து இன்னொருவருக்கு பரவாது.

கேள்வி: கருஞ்சீரகம், கொத்தமல்லி, தேன், பேரீச்சம்பழம் போன்றவற்றின் மூலம் கொரோனா நோயைக் கட்டுப்படுத்தலாம் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. இது எந்தளவு தூரம் உண்மையானது?

பதில்: எங்களுடைய வீடுகளில் எங்களுக்கு ஏற்படுகின்ற எல்லா வகையான நோய்களின் போதும் நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நோயெதிர்ப்புச் சக்தியைச் கூட்டிக் கொள்ளக் கூடிய கைமருந்துகளாக இவை காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் மேற்கூறப்பட்ட மூலிகைகள் அனைத்தும் சாதாரண காய்ச்சல், தடிமன், இருமல் வரும்போது பொதுவாக பாவிக்கக் கூடியதாக இருக்கின்றது. எனினும், கொரோனா நோய்க்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை மேற்குறிப்பட்டவற்றின் ஊடாக அதிகரிக்க முடியுமா என்று ஆராய்ந்து பார்த்தால் அவ்வாறானதொரு விடயம் பதியப்படவில்லை.

இவ்வாறான நிலையில், மேற்குறிப்பிடப்பட்ட கைமருந்துகளின் ஊடாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்தலாம் என்று செய்தி பரப்பப்படுவதனால் எங்களுடைய வீட்டில் உள்ளவர்கள் அதனை அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் பாரிய பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. உதாரணமாக நான் பணியாற்றும் வைத்தியசாலையிலுள்ள ஒரு நீரிழிவு நோயாளிக்கு இன்சுலின் வழங்கப்பட்டும் அது குறையவில்லை. அதற்கான காரணத்தினை தேடிய போது, குறித்த நோயாளிக்கு அவருடைய உறவினர்கள் தேனை அளவுக்கு அதிகமாக வழங்கியதுதான் காரணம் என்று தெரியவந்தது. அளவுக்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சு என்று சொல்வார்கள் அதுவே இங்கு நடந்துள்ளது.

அது போன்று கொத்தமல்லி குடிக்கின்றவர்களும் ஒரு லீற்றர் தண்ணீரில் எத்தனை மில்லிகிராம் கொத்தமல்லி போட்டு அவிக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். ஒரு லீற்றர் தண்ணீரை கொதிக்க வைக்கும் போது அதில் ஒரு லீற்றர் தண்ணீர் கிடைக்காது. அந்த தண்ணீர் ஆவியாகி அதன் செறிவு வித்தியாசப்படுகிறது. அது பற்றி தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு செறிவாக்கப்பட்ட தண்ணீரை எத்தனை தடவை எத்தனை நாளைக்கு குடிக்க வேண்டும் என்ற பொதுவான விடயங்கள் நோயாளிக்குத் தெரியாததன் காரணமாக சில நோயாளிகளுக்கு இதன் பக்கவிளைவாக அல்சர் மற்றும் ஈரல் பிரச்சினை ஏற்படுகிறது.

இது போன்ற இன்னோரன்ன மருந்துகளை அளவுக்கதிமாக உட்கொள்வதனாலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இது பற்றிய போதிய அறிவுள்ளவரிடம் கேட்டு பொதுவாக நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டிக் கொள்ளலாம். ஆனால், கொரோனாவுக்குரிய மருந்து இதுதான் என்று எடுத்துக் கொண்டு போலியான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம்.

கேள்வி: தடுப்பூசி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் காணப்படுகின்றன. இது தொடர்பில் நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: கொரோனாவினுடைய ஒரு பரம்பரை அல்லது அதன் புரோட்டீன் அல்லது அதனுடைய செயலிழக்கப்பட்ட ஒரு வைரஸ்தான் அந்தத் தடுப்பூசியில் காணப்படுகின்றது. அதில் வேறு எந்த பொதுவான மருந்துகளும் சேர்க்கப்படுவதில்லை. கொரோனா வைரஸினுடைய தாக்கத்தை அழிக்கக்கூடிய சக்தி கொண்ட சில மருந்துகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை எங்கள் உடலுக்குள் செலுத்தும் போது எங்கள் உடலானது அந்த வைரஸுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கும். இதன் மூலம் இன்னுமொரு தடவை அந்த வைரஸ் உடலில் உயிராக வரும் போது அதை அழிக்கக் கூடிய சக்தி கொண்ட சில படைகளையும் அதேபோன்று இந்த வைரஸை அடையாளம் காணக் கூடிய, ஞாபகங்களை வைத்திருக்கக் கூடிய கலங்களையும் உருவாக்கும். இந்த தடுப்பூசிகளை உடலுக்குள் செலுத்தும் போது வைரஸுக்கு எதிரான தாக்கம் பாதுகாப்பாக உருவாகி இன்னுமொரு தடவை அந்த வைரஸ் உடலில் தொற்றும் போது அதற்கு எதிராகச் செயற்படும்.

இவ்வாறு முழுமையான செயற்பாடு இடம்பெறுவதற்கு இரண்டு தடுப்பூசி போட்டதன் பிற்பாடு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த வைரஸ் எங்கள் உடலுக்குள் ஊடுருவும் போது அதனைத் தடுக்கக் கூடிய சக்தி அல்லது அதன் வீரியத்தைக் குறைக்கக் கூடிய சக்தி உருவாகும். எங்கள் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான பிறபொருளெதிரிகளை உற்பத்தியாக்கவே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்னொருமுறை கொரோனா வைரஸ் உள்ளே வரும் போதுதான் அந்தப் பாதுகாப்பு அரண் வெளிக்காட்டப்பட்டு, அந்த வைரஸ் அழிக்கப்படுமே தவிர, தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு தடுப்பூசி கொடுக்கப்படவில்லை.

ஆகவே, தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் ஒருவருக்கு தொற்று ஏற்படுமா என்று கேட்டால், தொற்று ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். ஆகவே, எந்தத் தடுப்பூசி முதலாவதாக கிடைக்கிறதோ அந்தத் தடுப்பூசியை எடுத்துக் கொள்வது சிறந்தது. எந்தத் தடுப்பூசி கிடைக்கின்றதோ அதை எடுத்துக் கொள்ளும் போதுதான் தங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களும் முகக்கவசங்கள்; அணிந்து கொள்ளுதல், கை கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற விடயங்களைப் பின்பற்றுவதால் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த முடியும்.

தொகுப்பு:
எம்.எஸ்.எம். ஸாகிர்
சாய்ந்தமருது