கடமை நேரத்தில் பாதிக்கப்படும் பொலிசாரை பாதுகாக்க நடவடிக்கை

கடமை நேரத்தில் பாதிக்கப்படும் பொலிசாரை பாதுகாக்க நடவடிக்கை-Sarath Weerasekera

கடமை நேரத்தில் பாதிக்கப்படும் பொலிஸாரை பாதுகாக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அண்மையில் கண்டி பொல்கொல்லையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ​ அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2011ஆம் ஆண்டு பொலிஸாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்னும் விசாரணைக்கு வராத நிலையில் காணப்படுகின்றன.

பொலிஸார் தமது கடமையைச் செய்ய முற்பட்ட வேளைகளில் தான் இப்படியான குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. மனித உரிமை மீறல் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டால் பொலிஸார் சார்பாக பெருமளவு பணம் விரயம் செய்ய வேண்டி ஏற்படுகிறது.

எனவே இப்படியான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உட்பட பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம்.

கடமை நேரத்தில் இடம்பெறும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொலிஸார் மீது தாக்கல் செய்யப்படும் வழக்குகளை 6 மாத காலத்தில் நிறைவு செய்ய வேண்டும், அப்படி அல்லாத பட்சத்தில் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

பொலிஸ் போக்குவரத்து துறையில் பணியாற்றும் அதிகாரிகள் 230 பேருக்கும் அதிகமானோர் விபத்துக்களில் சிக்கி அல்லது சாரதிகளின் கவயீனம் காரணமாக இதுவரையில் மரணித்துள்ளனர்.

அதே போல் திட்டமிட்ட குற்றச் செயல் புரிபவர்களை அல்லது பாதாள உலகக் குழுவினரைக் கைது செய்யப் போகும் போதும் பொலிஸார் மரணித்த சம்பவங்களும் உண்டு.

கொவிட் 19 பரவல் காலத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு த​டை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை அடக்குவதற்கு பொலிஸார் நடந்துகொண்ட விதம் காரணமாக பல மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் பொலிஸார் மீது திணிக்கப்படுகின்றன.

எனவே கடமை நேரத்தில் பாதிக்கப்படும் பொலிஸாரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பது எமது பொறுப்பு என அவர் தெரிவித்தார்.

(எம்.ஏ. அமீனுல்லா, அக்குறணை குறூப் நிருபர்)