இவ்வருட டிசம்பர் இறுதி வரை அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும்

இவ்வருட டிசம்பர் இறுதி வரை அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும்-Travelling During COVID19

- சுகாதாரப் பிரிவு அறிவுரை

டிசம்பர் இறுதி வரை அத்தியாவசியமற்ற பயணங்களை குறைந்த பட்சம் கட்டுப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலா குணவர்தன தெரிவித்துள்ளார்.

அன்றாடம் சுமார் 700 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருவதாகவும், எனவே இது போன்ற சூழ்நிலைகளில், அத்தியாவசியமற்ற பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

உறவினர்களைப் பார்க்கவோ அல்லது சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடவோ ஒரு காலம் அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை நாட்டில் வழமையான செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுப்பதற்காக நேற்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் அவற்றில் ஒரு சில விடயங்களில் கட்டுப்பாடு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

 • மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி வரை அமுலாகிறது.நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 04 மணி வரை விதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடையும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 • பொது மக்கள் ஒன்றுகூடுவது, வைபவங்கள் மறு அறிவித்தல் வரை அனுமதி இல்லை.
 • தொழில், சுகாதார தேவைகள் மற்றும் பொருட்கொள்வனவிற்காக வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியேற முடியும்.
 • பல்பொருள் அங்காடிகள், சுப்பர் மார்க்கெட்கள், மருந்தகங்களில் 20 வீதமானவர்கள் மாத்திரமே குறிப்பிட்ட நேரத்திற்குள் கொள்வனவில் ஈடுபட முடியும்.
 • பயிற்சி பட்டறைகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் இணையத்தளத்தினூடாக மாத்திரமே இடம்பெற வேண்டும் நேரடியாக இடம்பெறுமாயின் 25 வீதமானவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும். ஒரு தடவையில் 50 பேர் மாத்திரமே ஒன்றுகூட முடியும்.
 • திருமணங்களில் அதிகபட்சம் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்
 • பண்டிகைகள், களியாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்த முடியாது. வீடுகளுக்குள் இடம்பெறக்கூடிய நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 • பொருளாதார மத்திய நிலையங்களில் மொத்த விற்பனை மாத்திரமே இடம்பெற முடியும்
 • உணவு விடுதிகளில் 30 வீதமானவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட முடியும். வெளியரங்க இருக்கை வசதி வரவேற்கப்படுகின்றது.
 • உணவு விடுதிகளுக்குள் மது அருந்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு ஏற்ப மாத்திரமே பயணிகள் பயணிக்க முடியும்.
 • சிகையலங்கார நிலையங்கள், அழகு நிலையங்களுக்கு முன்னறிவித்தலின் பின்னரே வாடிக்கையாளர்கள் செல்ல முடியும்.
 • ஆரம்ப பாடசாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் 50 வீதமான மாணவர்களுடனேயே இயங்க முடியும்.
 • எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் ஒரு காட்சிக்காக 25 வீதமான பார்வையாளர்களை உள்வாங்க முடியும்.