- விமான நிலையத்தில் உகண்டா பெண் கைது
100 கொக்கைன் போதைப் பொருள் உருண்டையை வயிற்றில் விழுங்கி நாட்டுக்கு கடத்தி வந்துள்ள 45 வயது உகண்டா பிரஜையான பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேற்படி பெண் உகண்டாவின் என்டபே விமான நிலையத்திலிருந்து பல விமான நிலையங்களுக்கு மாறி மாறிச் சென்று இறுதியில் கட்டார் டோஹா விமான நிலையத்திலிருந்து கட்டார் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான QR 664 இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிச்செல்லும் வாயிலில் வைத்து சந்தேகத்தின் பேரில் அவரை சோதனை செய்துள்ள சுங்க அதிகாரிகள் ஸ்கேன் மூலம் அவரது வயிற்றுக்குள் இருந்த 100 உருண்டை கொக்கேய்ன் போதைப் பொருளை கண்டுபிடித்துள்ளனர்.
மேற்படி கொக்கேய்ன் உருண்டைகளை பொலித்தீனில் சுற்றி மிக சூட்சுமமாக அவர் கடத்தி வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த உகண்டா பிரஜையான பெண்ணை மேற்படி அதிகாரிகள் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைத்துள்ள நிலையில் அதனையடுத்து அவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரால் விழுங்கப்பட்டிருந்த கொக்கேய்ன் உருண்டைகள் வயிற்றிலிருந்து மருத்துவர்களால் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்