பேச்சுத் திணறல் (திக்குவாய்) சிக்கலுக்கு பரிகாரம் என்ன?

பேச்சுத் திணறல் ஒருவரின் இயல்பு வாழ்க்கையில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. அதனை பேச்சுத் திணறல் அல்லது ‘பேச்சு கொன்னல்’ என்பார்கள். இதற்கு சிகிச்சை அவசியமென கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளரும், மட்/போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தைநல வைத்திய நிபுணருமான மருத்துவ கலாநிதி விஜி திருக்குமார் தெரிவித்தார்.

சிறுவர்களிடையே பரவலாக காணப்படும் திக்குவாய் அல்லது கொன்னல் (பேச்சுத் திணறல்) தொடர்பாக அவர் விளக்கமளித்தார்.

கேள்வி: திக்குவாய் பிரச்சினை என்றால் என்ன?

பதில்: திக்குவாய் என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படும் பேச்சுத் திணறல் நிலைமை சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்படுவதுண்டு. அதாவது கோர்வையாக தொடர்ந்து பேசுவதில் சிரமம் ஏற்படுதலே பேச்சுத் திணறல் ஆகும். ஒரு சொல்லின் உச்சரிப்பை அல்லது ஒரு சொல்லை திரும்பத் திரும்பக் கூறுதல்/ பேச ஆரம்பிக்கும் போது அல்லது பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் வசனம் தடைப்படல்/ ஒரு உச்சரிப்பை நீட்டி உச்சரித்தல் இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

கேள்வி: இது ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் எவை?

பதில்:
1. நரம்பு கலங்கள் விருத்தி அடையும் போது ஏற்படும் தாமதம் அல்லது மாறுபாடு இதற்கான காரணம் ஆகும்.பொதுவாக 2- 4 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படும்.
2. ஏதாவது ஒரு நோய் நிலைமை ஏற்பட்டதன் காரணமாக பேச்சுத் திணறல் ஏற்படல். இதனை சிறியவர், பெரியவர் இருவரிலும் பொதுவாக அவதானிக்கலாம்.
3. மனரீதியான அழுத்தங்களினால் ஏற்படுதல் அதாவது திடீரென நிகழ்ந்த அதிர்ச்சியான அல்லது சோகமான ஒரு சம்பவத்தின் பின்னர் பேச்சுத் திணறல் ஏற்படல். இது சிறியவர், பெரியவர் இருவரிலும் நிகழலாம்.

இந்த உபாதைக்கான அறிகுறிகள்;
சிறுவர்கள் தமக்கு பேச்சுத் திணறல் பிரச்சினை உள்ளதென்பதை உணர முன்னர் தொடர்பாடல்களை மேற்கொள்வதில் சிரமங்களைச் சந்திப்பார்கள். பேச்சுத் திணறல் ஏற்படும் பேது உடல் ரீதியாகவும் சில செயற்பாடுகளை வெளிப்படுத்துவார்கள். உதாரணமாக கண்களை அதிகமாக சிமட்டல், கைகளை உதறல், அடித்தல்.

தனது பேச்சு தடுமாற்றத்தைத் தெரிந்து கொண்டதன் பின்னர் தங்களை பிறரிடம் இருந்து தனிப்படுத்திக் கொள்வார்கள். மற்றவர்களுடன் உரையாட தயங்குவார்கள், பயப்படுவார்கள். உளரீதியான அழுத்தங்களும் அதிகரிக்கும். மேலும் பாடசாலையில் ஆசிரியர், சக மாணவர்களுடன் உரையாடத் தயங்குவார்கள். மேடைப் பேச்சுக்கள் மற்றும் கலைவிழாக்களில் ஈடுபட மாட்டார்கள். தெரிந்தவர்களுடன் உரையாடும் போது கூட கண்களைப் பார்க்காமல், அவதானிக்காமல் பேசி முடிப்பார்கள். பெரியவர்கள் தங்களது பேச்சுப் பிரச்சினையை மறைக்க அதிகமாக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துவார்கள்.

எந்த உச்சரிப்பில் திக்கு ஏற்படுகின்றதோ அதற்குப் பதிலாக வேறு இலகுவான செற்களை பாவித்து பேச முயற்சிப்பார்கள். பிறருக்கு தங்களை அறிமுகப்படுத்துவதிலும், நேர்காணலை தொடர்வதிலும் அதிக அளவில் சிரமப்படுவார்கள். மனரீதியான அழுத்தம் உடையவர்களாகவும் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.சிறுவர் தனக்கு பேச்சுத்திணறல் இருக்கின்றது என்பதை உணர்ந்தால் பல விடயங்களில் தாழ்வுமனப்பான்மையுடன் அனைத்துக்கும் தயங்குவார்கள்.

கேள்வி: இதற்குச் சிகிச்சை இருக்கின்றதா?

பதில்: பேச்சுத் திணறல் பிரச்சினை ஏற்படும் போது உரிய நேரத்தில் வைத்தியரை நாடி அவற்றுக்கான காரணங்கள், வகைகளைக் கண்டறிந்து சிகிச்சை முறைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இவற்றின் மூலமாக சிறந்த முன்னேற்றகரமான விருத்தியை அவதானித்தலுடன் மனஅழுத்ததையும் குறைக்கலாம்.

வி.ரி. சகாதேவராஜா - காரைதீவு குறூப் நிருபர்