கொவிட்-19 தொற்று காலப் பகுதியில் சுகாதாரத்துறைக்கு உதவும் அன்பர்கள்

கொவிட்-19 தொற்று காலப் பகுதியில் சுகாதாரத்துறைக்கு உதவும் அன்பர்கள்-Medical Equipment Donation

கொவிட் 19 சூழ்நிலையில் சுகாதாரத்துறையின் அல்லது வைத்தியசாலைகளின் தேவையறிந்து பலர் முடியுமான உதவிகள், மனிதாபிமான பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர். அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள், பொதுஅமைப்புக்கள், தனவந்தர்கள், வர்த்தகர்கள், பரோபகாரிகள், புலம்பெயர் உறவுகள் என அனைத்துத் தரப்பினரும் உதவிகள் வழங்கி வருகின்றனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் டொக்டர் நிமாஷா, ஜேர்மனியில் வசிக்கும் தனது நண்பி ஊடாக வைத்தியசாலைப் பாவனைக்கென ஆறு சக்கர நாற்காலிகளை அன்பளிப்பாக அண்மையில் பெற்றுக் கொடுத்தார்.

அதேபோன்று, வைத்தியசாலை கொரோனா விடுதியில் கடமையாற்றும் டொக்டர் பினுஜ் உபேயரத்ன தனது மரணித்த தந்தையின் ஒராண்டு நினைவாக பெறுமதியான ஒட்சிசன் குவிப்பான் உபகரணத்தை வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எச்.எம்.அசாத் தலைமையிலான குழுவினர் அந்த அன்பளிப்புகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், அன்பளிப்புச் செய்தவர்கள், அன்பளிப்புக்களுக்குக் காரணமானவர்களுக்கு நன்றிகளை பதிவு செய்துகொண்டனர்.​ை

இதேபோன்று, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு, வெளிநாடுகளில் வதியும் கல்முனைப் பிரதேச உறவுகள் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்புச் செய்துள்ளனர். கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் தலைமையிலான குழுவினர் இவ்வுபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறு வைத்தியசாலைகளுக்கு நலன்விரும்பிகள் ஏராளமான உதவிகளை வழங்கி வருகின்றனர். இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் வழங்கப்படும் இவ்வாறான மனிதாபிமான உதவிகளை வெறுமனே உதவிகளாக மாத்திரம் கொள்ளக் கூடாது. இக்கட்டான சூழலில் தேவை, நேரமறிந்த மேற்கொள்ளப்படும் இவ்வுதவிகள் சமூகத்திற்கு நல்ல படிப்பினையாகவும், எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளன.

சுகாதாரத்துறைக்கு அல்லது வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும்அன்பளிப்புக்கள், மனிதாபிமான உதவிகள் எத்தனையோ நோயாளர்கள் உயிர் பிழைப்பதற்கு காரணமாய் அமையலாம் என்பதில் சந்தேகமில்லை. கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதிலும், தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்து உயிர் காப்பாற்றுவதிலும் சுகாதாரத் துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறானவர்களுக்கு எங்களால் முடிந்தளவு உதவி, ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியது அவசியமாகும்.

சுகாதாரத் துறையைப் பொறுத்தளவில், உதவிகளின் பெறுமதியையோ அல்லது உதவுபவர்களையோ யாரும் பார்ப்பதில்லை. ஆனால், அவ்வுதவியினால், அடையும் பயனே பெறுமதியாகப் பார்க்கப்படுகின்றது. வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சுகமடையும் போது, பலரது உள்ளம் பூரிப்படைகின்றது. அதுவே உதவி வழங்கியவர்களின் எதிர்பார்ப்பும் ஆத்ம திருப்தியுமாகும்.

ஐ.எல்.எம். றிஸான் - அட்டாளைச்சேனை மத்திய நிருபர்