இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி நுழைந்த 23 தமிழ் நாட்டு மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி நுழைந்த 23 தமிழ் நாட்டு மீனவர்கள் கைது-Navy Seizes 2 Indian Fishing Vessels Whilst Poaching in Sri Lankan Waters-23 Fishermen Arrested

இலங்கையின் வடக்கு கடற்பரப்பிற்குள் நேற்றைய தினம் புதன்கிழமை (13) அத்துமீறி இரு படகுகளில் நுழைந்த இந்திய மீனவர்கள் 23பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பருத்தித்துறை மற்றும் வெத்திலைக்கேணி பிரதேசத்திற்கு கிழக்காக உள்ள கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் கொவிட் பரிசோதனையின் பின்னர் காரைநகரில் உள்ள இடைத்தங்கல் முகாமில் 14 நாட்களிள் தடுத்து வைக்கப்படு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்  எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கோப்பாய் குறூப் நிருபர்


இந்திய எதிரொலி

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 700இற்கும் மேற்பட்ட மீனவர்கள் 75இற்கும் மேற்பட்ட படகுகளில் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்த வேளையில், கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 23 பேரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், 23 மீனவர்கள் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்ந்து, மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டுமென, இந்தியாவின் தமிழ் நாட்டில் செயற்படும் கட்சிகளில் ஒன்றான பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி. எம்.கே. ஷாகுல் ஹமீது


நேற்றையதினம் இந்திய - இலங்கை மீனவர்கள் மோதல்

இதேவேளை, நேற்று (13) புதன்கிழமை வடமராட்சிக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுடன் ஏற்பட்ட மோதலில் பருத்தித்துறை முனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் இந்திய மீனவப் படகுகளால், பருத்தித்துறை மீனவர்களின் வலைகள் அறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மீனவர்கள் தாக்குதலுக்கு தயாராக கற்கள் உட்பட்ட பொருள்களை எடுத்து வந்திருந்தாகவும் பருத்தித்துறை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கரவெட்டி தினகரன் நிருபர்