பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியை போற்றும் வழிபாடு நவராத்திரி இந்து சமய தத்துவங்கள் யாவும் விஞ்ஞானம் கலந்த ஆன்மீகக் கலவை

அறியாமை எனும் இருளைப் போக்கி, ஞானஒளியை உள்ளமெங்கும் பரவச் செய்யும் பூஜை யாக நவராத்திரி காணப்படுகிறது.

'அவனின்றி அணுவும் அசையாது. அவளின்றி அவன் அசையான்' என சிவத்தில் பாதி யாக விளங்கும் சக்தியினை நோக்கி ஒன்பது இராத்திரிகள் அனுஷ்டிக்கப்படும் விரதமே நவராத்திரி ஆகும்.

தேவி வழிபாட்டின் தொன்மைக்கு நவராத்திரி வழிபாடே சான்றாகும். இவ்வழிபாடு எப்பொழுது தோன்றியதென்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. மிகத் தொன்மை வாய்ந்தது. இச்சக்தி வழிபாடு சிறிது பெயர் மாற்றங்களுடன் உலகம் முழுவதும் பரவியி இருந்திருக்கிறது.

சக்திக்கு ஒன்பது இராத்திரி; சிவனுக்கு ஒரு இராத்திரி; அது சிவராத்திரி. இதிலிருந்தே சக்தி வழிபாட்டின் மேன்மை விளங்குகிறது.

சித்திரையில் வருவது 'வசந்த நவராத்திரி' எனவும் புரட்டாதியில் வருவது 'சாரதா நவராத்திரி' எனவும் அழைக்கப்படுகின்றது. இவ்விரண்டு காலங்களிலும் கோடை, குளிர் என இரு பருவகாலமும் மாறும் போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியை பூஜிக்க வேண்டும் என்பதால் இவ்விழா நடத்தப்படுகிறது.

அதிலும் காலச்சுழற்சியில் வசந்த நவராத்திரி விழா கொண்டாடும் முறை வழக்கொழிந்து விட்டது. சாரதா நவராத்திரி விழா இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை சிறப்பாகும்.

நவராத்திரியின் சிறப்பு, அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கும் பலன்கள் பற்றி தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் நிசும்பன், சும்பன் என இரு அசுரர்கள் இருந்துள்ளனர். அவர்கள் கடவுளிடம் பல வரங்களைப் பெற்று தங்களை அழிக்க யாரும் இல்லை என்ற ஆணவத்தோடு ஆட்சி செய்த காலத்தில் மக்கள் பெரும் துன்பத்தில் ஆழ்ந்தார்கள். இந்த அசுரர்களின் ஆணவத்தை அடக்கத் திண்ணம் கொண்டு மகாவிஷ்ணுவிடமும் சிவனிடமும் முறையிட்டனர்.

அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு இந்த அசுரர்களை அழிக்கும் சக்தி அன்னை ஆதிசக்தியிடமே உண்டு என்பதை அறிந்து தேவியை பூலோகத்துக்கு அழைத்தனர்.

மும்மூர்த்திகளும் தாங்கள் சக்திகளையெல்லாம் ஒன்றாக்கி தேவிக்கு அளித்து விட்டு சிலையென நிற்கவே, இந்திரன் மற்றும் அட்டத்திக்கு பாலகரும் தங்கள் ஆயுதங்களையெல்லாம் தேவிக்கு அழித்து விட்டு சிலையாகவே காட்சி தந்தார்கள். இவர்கள் இப்படி சிலையாக நிற்கும் காட்சியே கொலு வைக்கும் மரபாக வந்தாக அறிய முடிகின்றது.

இவ்வாறாக போர்கோலம் பூண்ட தேவி நிசும்பன், சும்பன் எனும் இரு அசுரர்களையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமியாகும். போர் ஒன்பது நாட்கள் விடாது நடைபெற்றது. ஆனாலும் அக்கால போர் சட்டதிட்டங்களின் படி, மாலை நேரம் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் போர் புரிவதை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் ஒய்வெடுக்கும் நேரத்தில் அன்னையின் படைக்கு உந்துதல் கொடுக்கும் வகையில் அன்னையை குறித்து ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதையும் அறிய முடிகின்றது. எனவே இரவில் இந்நிகழ்வு நடைபெறுவதாலே நவராத்திரி எனவும் கொள்ள முடியும்.

மேலும் இந்த விரதத்தை தெய்வங்கள் முதல் தேவர்களும் கடைப்பிடித்து பயனடைந்துள்ளதையும் அறிய முடிகிறது. உதாரணமாக இராமர் இராவணனிடமிருந்து சீதையை மீட்டது, பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றமை ஆகியனவாகும். இதனுடாக அறியப்படுவது தீய சக்திகள் மேலோங்குகையில் அம்பாள் காத்து அருள் புரிவாள் என்பதாகும்.

இதில் அறிவியல் காரணமும் இருக்கிறது. இந்த ஒக்டோபர் மாதம் என்பது மழை பெய்யும் காலம். இந்தக் காலங்களில் இரவு நேரம் குறைவாக இருக்கும். எனவே சீதோஷ்ண நிலைக்கு நம் உடலை மாற்றும் வகையிலேயே நவராத்திரி பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த ஒன்பது நாட்களிலுமே பூஜை செய்யப்பட்டு சுண்டல் போன்ற புரதம் அடங்கிய உணவுகள் உண்பதால் உடலும் தெம்பு பெறும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

நவராத்திரியில் ஒன்பது நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதமிருத்தல் வேண்டும். தசமி தினத்தில் வதம் செய்து வாகை சூடியதால் ஆணவம் சக்தியாலும், வறுமை செல்வத்தாலும், அறியாமை ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட நாள் என்பதால் முப்பெரும் தேவியை வணங்கி எல்லாக் காரியங்களும் எளிதில் வசமாகவும் அன்றைய தினம் புனிதமான காரியங்களை தொடங்கி இந்த ஜென்மத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து பிறவிப் பயனாகிய பேரின்ப நிலையை அடைவோமாக!

 

இந்துசமய கலாசார அலுவல்கள்

திணைக்களத்தின் நவராத்திரி விழா:

இது இவ்விதமிருக்க, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும், சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடத்தும் நவராத்திரி விழா காரைதீவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் நடைபெற்று வரும் இவ்விழா தினமும் ஒரு பிரதேச செயலாளர் தலைமையில், தினமும் ஒரு விசேட சொற்பொழிவாளருடன் ,அறநெறி மாணவரின் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது.

இந்துசமய கலாசாரத் திணைக்கள பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரனின் வழிகாட்டலில், திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஒழுங்கமைப்பில் இவ்விழா சுகாதார நடைமுறை விதிக்கமைய ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. தினமும் ஒரு அறநெறி பாடசாலையின் மாணவர்கள் மாத்திரம் கலந்து கொள்ளும் வகையில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த வளாகத்தின் மாணவர்களது மிருதங்க சமர்ப்பணம், வீணாகானம், பண்ணிசை வயலின் கச்சேரி போன்ற கலைக்கதம்பங்களும் இடம்பெற்றன. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் மற்றும் இந்தியாவிலிருக்கும் உலகப் புகழ் பெற்ற ஆன்மீக ஓவியர் க.பத்மவாசன் ஆகியோர் மெய்நிகரில் வந்து விழாவுக்கு அணிசேர்த்தனர்.

காரைதீவில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண நவராத்திரிவிழாவில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் சொற்பொழிவாற்றினார்.

சிறப்பு சொற்பொழிவினை ஆசிரியை திருமதி அருந்தவவாணி சசிக்குமார் நிகழ்த்தினார். இந்து கலாசார உத்தியோகதத்தர் கே.பிரதாப் நிகழ்ச்சிகளை தொகுத்து நெறிப்படுத்தி வழங்கினார். மேடையில் கலை நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

 

-வி.ரி.சகாதேவராஜா...?

(காரைதீவு குறூப் நிருபர்)