தீங்கிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பு பெறுவதாயின் விண்ணப்பிப்பது எவ்வாறு?

தீங்கிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பு பெறுவதாயின் விண்ணப்பிப்பது எவ்வாறு?

‘குற்றத்தினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டம்’ 2015 இல் றைவேற்றப்பட்டது. எனினும் இந்தச் சட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு உள்ள உரிமைகள் உரித்துகள் மற்றும் அவற்றை எவ்வாறு கோருவது என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் உதவிகளை வழங்குவது இந்தச் சட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்த உரிமைகள் மற்றும் உரித்துகளின் தன்மையானது குறிப்பாக பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் (SGBV- Sexual & Gender Based Violence) பாதிக்கப்பட்டவர்களால் அணுகப்படக் கூடிய பயனுள்ள கருவியாக அமைகிறது.

பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், பாதுகாப்பாக குற்றங்களை முறையிட முடியும் என உணர்வது, இவ்வாறான வன்முறைகளின் சிக்கலைக் கையாள்வதில் இன்றியமையாத பகுதியாகும்.

இந்தச் சட்டம், 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ‘குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் மற்றும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையை’ உருவாக்கியுள்ளது. இந்த அதிகார சபைக்கு சட்டத்தின் நோக்கங்களை செயற்படுத்த பரந்த அதிகாரங்கள் உள்ளன.

ஒரு குற்றம் அல்லது ஒரு அடிப்படை உரிமையை மீறுவது தொடர்பான புலனாய்வில் அல்லது விசாரணையில் பங்கேற்பதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தீங்கு ஏற்படும் என்று எதிர்பார்ப்பதற்கு நியாயமான காரணங்கள் இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பாதுகாப்பிற்கு விண்ணப்பிக்கலாம். நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரும் இந்தப் பாதுகாப்பை நாடலாம். இந்தப் பாதுகாப்பிற்கான கோரிக்கையை அதிகாரசபையிடமும், எந்தவொரு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட பொலிஸ் பிரிவு அல்லது நீதிமன்றத்திற்கும் அனுப்பலாம்.

பாதிக்கப்பட்டவருக்கு அவர்கள் சந்தித்த உளவியல் தீங்கு உட்பட மருத்துவ ரீதியாக சிகிச்சையளிப்பதற்கான உரிமையையும் இச்சட்டம் அங்கீகரிக்கிறது. இதனை வழங்கத் தேவையான வளங்கள் அரசிடம் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அத்தகைய சேவைகளைப் பெறுவதற்கான நிதி உதவிக்கு அதிகாரசபையிடம் விண்ணப்பிக்கலாம். ஒரு அடிப்படை உரிமையின் குற்றம் அல்லது மீறல் தொடர்பான எந்தவொரு நீதித்துறை அல்லது நீதித்துறையை ஒத்த நடவடிக்கைகளில் பங்கேற்பதில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றத்தின் விளைவாக சந்தித்த எந்தவொரு தீங்கு அல்லது சொத்து இழப்பிற்கும் நஷ்டஈடு வழங்கப்படலாம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகளுக்கு மேலதிகமாக, தகவல்களை வழங்கும்போதோ அல்லது சாட்சியமளிக்கும்போதோ தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்று கருதும் சாட்சிகளுக்கும், குற்றம் அல்லது தமது பணியிடத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது குறித்து முறைப்பாடு அளிக்கும் நபர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆகவே, பாதிக்கப்பட்டவரைத் தவிர வேறு நபர்கள் கூட ஒரு குற்றத்தைப் பற்றி அச்சமின்றி முறைப்பாடளிப்பதை அனுமதிக்க சட்டம் முயல்கிறது. அவர்களும் அவ்வாறு முறைப்பாடளித்தால் பாதுகாப்பைப் பெற உரிமை உண்டு.

அதிகார சபையை தொடர்பு கொள்வது எப்படி?

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் அதிகார சபையை அதன் துரித அழைப்பு இலக்கமான 1985 அல்லது 0112866452 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாகத் தொடர்பு கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்கள் முதலாம் மாடி, 428/11, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல என்ற முகவரியில் அமைந்துள்ள அதிகார சபைக்கு நேரில் செல்லலாம். அதிகார சபை தொடர்பான மேலதிகத் தகவல்களை www.napvcw.gov.lk எனும் அதிகார சபையின் மும்மொழி இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு மேலதிகமாக பொலிஸ் திணைக்களத்தின் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கான உதவிப் பிரிவை 0112326314 ஊடாக தொடர்பு கொள்ளலாம் அல்லது இல 09, மிஹிந்து மாவத்தை, கொழும்பு 12 எனும் முகவரிக்கு விஜயம் செய்யலாம்.

பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது சாட்சியாளர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) அல்லது இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) என்பவற்றிடம் உதவி அல்லது பாதுகாப்புக்காகக் கோரிக்கை விடுக்கலாம். இவை அனைத்தும் பொது நிறுவனங்கள் என்ற வகையில் இவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட தரப்பினர் நேரடியாக உதவியை நாடலாம்.