அட்டாளைச்சேனை சிறகுகள் அமைப்பு ஏற்பாடு செய்த இரத்ததான முகாம்

அட்டாளைச்சேனை சிறகுகள் அமைப்பு ஏற்பாடு செய்த இரத்ததான முகாம்-Addalaichenai-Siraguhal-Blood Donation Camp

நாட்டில் கொவிட்-19 தொற்று தீவிரமடைந்ததன் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த முடக்கநிலை காலப் பகுதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் குருதிக்கான பற்றாக்குறை நிலவியது. வைத்தியசாலைகளில் குருதிக்கு ஏற்பட்டிருந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக நாட்டிலுள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தமது பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகளுடன் இணைந்து இரத்ததானம் வழங்கும் நிகழ்வுகளை நடத்தியிருந்தன.

இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் வந்து இரத்த தானம் செய்ததையும் காண முடிந்தது. கொவிட் தொற்று தீவிரமடைந்திருந்து முடக்க நிலை காலப் பகுதியிலும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றியவாறு இரத்ததான முகாம்கள் நடந்தேறின.

நாட்டிலுள் அநேகமான வைத்தியசாலைகளில் நிலவிய இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு கொவிட் அச்சுறுத்தல் காலத்திலும் தன்னார்வத்துடன் முன்வந்து பல இளைஞர்கள் குருதிக் கொடை வழங்கினர். இதன் காரணமாக நோயாளர்கள் பலர் பயன் பெற்றனர். மனிதநேயத்தை உணர்த்துவதாகவே இவ்வாறான குருதிக் கொடை நிகழ்வுகள் அமைந்திருந்தன.

அந்த வகையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவில் நிலவிய குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு அட்டாளைச்சேனை சிறகுகள் அமைப்பினால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு சில தினங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அட்டாளைச்சேனை சிறகுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கி பொறுப்பதிகாரி மருத்துவர் துல்கிப்லி தலைமையில்இடம்பெற்றது. மேற்படி இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் அதிகளவான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதியை கொடையாக வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தாதியர் பொறுப்பதிகாரி எம்.ஏ.ஆப்தீன், ஆதார வைத்தியசாலை தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரும் சிறகுகள் அமைப்பினால் மாபெரும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வுஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் மத்திய விசேட நிருபர் - றிசாத் ஏ காதர்