21ஆம் திகதி பாடசாலை செல்லும் தீர்மானமில்லை

ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  நேற்று முன்தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ள நிலையில் நேற்றைய தினம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அதற்கு முன்னர் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆசிரியர்கள், அதிபர்கள் அன்றைய தினம் பாடசாலைக்கு செல்வதா இல்லையா என்பது தொடர்பில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணைந்து தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அதேவேளை ஒன்லைன் மூலமான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்:

நாம் நேற்று வரை 94 தினங்கள் தொழிற்சங்க போராட்டத்தை நடத்தி வருகின்றோம். எமது தொழிற்சங்க நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளோம். பேச்சு வார்த்தைகளுக்கான சந்தர்ப்பம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால் இந்த ஒன்லைன் மூலமான கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் தீர்வைப் பெற்றிருக்க முடியும். அமைச்சரவை உப குழுவின் யோசனைகள் கடந்த ஆகஸ்ட் 30ம் திகதியே அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று விட்டது.

நாம் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளுக்கு சந்தர்ப்பம் கோரியபோதும் காலம் கடந்தே அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் காரணமாகவே இந்த நிலைமை தொடர்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்