மாணவர்களின் உளவியல் பிரச்சினைக்கு பேராதனை பல்கலைக்கழகத்தால் உதவி

மாணவர்களின் உளவியல் பிரச்சினைக்கு பேராதனை பல்கலைக்கழகத்தால் உதவி-University of Peradeniya Will Help Psychological Problems of Students

மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளுக்கு பேராதனைப் பல்கலைக்கழக மானிட வளத்தைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்தார்.

பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பாக கண்டிலுள்ள ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களது பாதுகாப்பு மட்டுமின்றி அவர்களது மனநிலை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக உளவியல் காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

எனவே இதுவிடயமாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அங்குள்ள மானிட வளங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பேராதனைப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் கலாநிதி டப்ளியு.டி. மதுஜித், பேராசிரியை பவசரி கினிகே உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அக்குறணை குறூப் நிருபர்