உறுதிமொழிகள் வழங்கிய பின்னரும் தொடரும் தொழிற்சங்க நடவடிக்ைக!

ஆசிரியர்களும் அதிபர்களும் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கை இரு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இதேவேளை கொவிட் 19 தொற்று பரவுதல் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள போதிலும் மாணவர்களின் கல்வி நலன்களைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட 'மெய்நிகர்' ஊடான கல்வி நடவடிக்கைகளும் இத்தொழிற்சங்க நடவடிக்கையினால் பல வாரங்களாக இடைநிறுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் மாணவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைச்சின் செயலாளர், அமைச்சர் என்றபடி பல மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் தொழிற்சங்கங்களுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவர்களது கோரிக்கையை அரசாங்கம் நியாயமானதென ஏற்றுக் கொண்டுள்ளது. விஷேட குழுவொன்றை நியமித்து அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்குவதற்கான சிபாரிசுகளும் பெறப்பட்டுள்ளன.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் வரையும் செப்டம்பர், ஒக்டோபர் ஆகிய இரு மாதங்களும் கடமையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் இத்தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதன் விளைவாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விஷேட பேச்சுவார்த்தையொன்று நேற்றுமுன்தினம் அலரிமாளிகையில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான யோசனையைப் பிரதமர் முன்வைத்துள்ளார்.

இதேவேளை அமைச்சரவைப் பேச்சாளரான வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அலகப்பெரும, 'ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு 2022 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தீர்வு வழங்கப்படும்' என்றும் 'இத்தீர்வு திட்டத்தை நிதியமைச்சர் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தின் போது அறிவிப்பார்' என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

'ஆசிரியர், அதிபர்களின் கோரிக்கை நியாயமானதென ஏற்றுக் கொண்டுள்ள நிதியமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ, இம்முரண்பாட்டுக்கான தீர்வை ஜனாதிபதியின் பதவிக் காலத்திற்குள் பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தியுள்ளார். குறிப்பாக இம்முரண்பாட்டுக்கான தீர்வை மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்த அவர் எதிர்பார்த்துள்ளார்.

இவ்வாறு ஆசிரியர், அதிபர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்ததாக இல்லை. அதிலும் ஆசிரியர், அதிபர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 31 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பிரதமருடன் நேற்றுமுன்தினம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக தொழிற்சங்கங்கள் நேற்று அறிவித்திருக்கின்றன.

இந்த அறிவிப்பு பெற்றோரையும் மாணவர்களையும் பெரிதும் கவலை கொள்ளச் செய்துள்ளது. கொவிட் 19 தொற்று பரவுதல் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் ஏற்கனவே பல மாதங்களாக மூப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் குறைக்கும் வகையில் 'மெய்நிகர்' வழியாக முன்னெடுக்கப்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகளை தொழிற்சங்க நடவடிக்கைகையைக் காரணம் காட்டி பல வாரங்களாக ஆசிரியர்கள் கைவிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் மாணவர்களின் கல்வி நலன்களுக்கு முன்னுரிமை அளித்து ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தீர்வு காண முன்னெடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளையும் நிராகரிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்பது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை நோக்காகக் கொண்டு இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவ்வாறான கேள்வி மக்கள் மத்தியில் ஏற்படுவது ஆசிரியர், அதிபர்களுக்கு நல்லதல்ல.

கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் பெரும் பகுதியினருக்கு தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும் சூழலில் பாடசாலைகளை விரைவாக மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நலன்களுக்கு முன்னுரிமை அளித்து ஆசிரியர்கள், அதிபர்கள் செயற்பட வேண்டும். தம் கோரிக்கையை அடைந்து கொள்வதற்காக மாணவர்களின் கல்வியைப் பயணம் வைத்து செயற்படுவதற்கான உசிதமான நேரமல்ல இது என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்வது இன்றியமையாததாகும்.

ஆகவே எதிர்கால சந்ததியினரை கல்வியின் ஊடாக நெறிப்படுத்தி வளப்படுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கும் ஆசிரியர்களும் அதிபர்களும் மாணவர்களின் கல்வி நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தவறக் கூடாது. அதுவே எல்லா மட்டத்தினரதும் எதிர்பார்ப்பாகும்.