வீழ்ச்சி அடைந்துவரும் சீன ஆதன நிறுவனங்களின் வருமானம்

சீன பொருளாதார சந்தையில் அந்நாட்டு அரசு மேற்கொண்டுவரும் கட்டுப்பாடுகள் காரணமாக மிகவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த காணி மற்றும் கட்டட முதலீடு மற்றும் விற்பனைத்துறை தொடர்ச்சியாக வீழ்ச்சி நிலையை சந்தித்து வருவதாக சீன சந்தை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

சீன அரசு விதித்துள்ள சந்தைக் கட்டுப்பாடுகளின் விளைவாக அந்நாட்டின் முதல் நூறு முக்கிய ஆதன அபிவிருத்தி நிறுவனங்கள் படிப்படியான வருமான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. சீனாவின் ஆதன தகவல் நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவல்களின் பிரகாரம் இவ்வீழ்ச்சி நிலை கண்டறியப்பட்டது. செப்டம்பர் மாதம் பொதுவாகவே காணி, கட்டட விற்பனை சந்தைக்கு அதிக வாய்ப்பான காலம் என்றும் இத்துறையினர் மொத்த செப்டம்பர் மாத வருமானம் 118 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் இது கடந்த வருடத்தை விட 36.2 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்திருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஓகஸ்ட் மாத வருமானத்தில் இருந்து 20.7 சதவீத சரிவை செப்டம்பர் சந்தித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

சீனாவின் மிகப்பெரிய ஆதன நிறுவனமான கன்ட்ரி கார்டன் ஹோல்டிங் நிறுவனம் கடந்த மாதம் 50.7 பில்லியன் யுவான்களை வருமானமாகப் பெற்றது. கடந்த ஓகஸ்ட் மாதத்தைவிட 5.2 சதவீத சரிவாக இவ்வருமானம் பதிவாகியுள்ளது. சைனாவங்கே நிறுவனம் கடந்த மாதம் 30.3 சதவீத வீழ்ச்சியையும் சுனாக் சைனா நிறுவனம் 32.7 சத வீத வீழ்ச்சியையும் கடந்த மாதம் சந்தித்தது.