கலேவல-மாத்தளை நெடுஞ்சாலை அபிவிருத்தி கனவு நிறைவேறுகிறது

கலேவல-மாத்தளை நெடுஞ்சாலை அபிவிருத்தி கனவு நிறைவேறுகிறது-Galewela-Matala Highway

பல வருட காலம் தேர்தல் வாக்குறுதியோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கலேவல-மாத்தளை பிரதான நெடுஞ்சாலை அபிவிருத்திக்கான கனவு நிறைவேற்றப்படவுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனகபண்டார தென்னக்கோனின் முயற்சியினால் இந்த நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டத்தின் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலேவல-மாத்தளை பிரதான நெடுஞ்சாலைத் அபிவிருத்தித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு பல்லேபொல நகரில் இடம்பெற்றது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டன. மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திலின பண்டார தென்னக்கோன் உள்ளிட்ட ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

“கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி முறையாக செயலாக்கம் பெறவில்லை. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திகளைக் கூட அவர்களால் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. கண்டி- தம்புள்ள நெடுஞ்சாலையை அமைப்பதாகச் சொன்னார்கள். ஒன்றும் நடைபெறவில்லை. அவர்களின் ஆட்சியில் வீதி அபிவிருத்தி இல்லை. நாம் மாத்தளை மாவட்டத்தில் 670 வீதி அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொண்டுள்ளோம்” என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இந்நிகழ்வில் உரையாற்றுகையிலதெரிவித்தார்.

கலேவல -மாத்தளை நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“எமக்கு ஏற்பட்ட பல்வேறு சவால்களுக்கும் பொருளாதார நிலைமைக்கும் முகம் கொடுத்து நாட்டை அபிவிருத்தி செய்வோம். மக்கள் எதிர்பார்த்த தேசத்தை உருவாக்குவோம்” எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கலேவல- மாத்தளை வரையிலான மேலும் பல்வேறு வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. பல்லேபொல நகரை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலின பண்டார தென்னக்கோனின் ஏற்பாட்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வீதிகளின் அபிவிருத்தி மற்றும் பல்லேபொல நகர அபிவிருத்தி தொடர்பான விஷேட கலந்துரையாடல் கூட்டம் அமைச்சரின் தலைமையில் யாபாகமவில் அண்மையில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், மாகாண வீதி அபிவிருத்தி பணிப்பாளர் மற்றும் துறைசார் பொறியியலாளர்களும் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம். முன்தஸிர் - பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)