இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதியுடன் சந்திப்பு-Indian-Army-Commander General Manoj Mukund Naravane-Meets Kamal Gunaratne

- இருதரப்பு உறவுகளை மேம்படுத்தல், இராணுவ பயிற்சி நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடல்

நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே தலைமையிலான உயர் மட்ட தூதுக்குழு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான  ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரை இன்று (13) சந்தித்து கலந்துரையாடினர்.

அக்குரேகொடை பாதுகாப்புத் தலைமையகத்திலுள்ள பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

விஷேட வாகன அணிவகுப்பின் மூலம் அக்குரேகொடை பாதுகாப்புத் தலைமையகத்திலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத் தளபதியை மேஜர் ஜெனரல் சன்ஜே வணசிங்க வரவேற்றதுடன்  விஷேட மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு நாட்டு இராணுவ தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றதுடன் இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியுடன் இந்திய இராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே சந்திப்பு-Indian-Army-Commander General Manoj Mukund Naravane-Meet Gotabaya Rajapaksa

இராணுவத் தலைமையகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களையும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்பு தலைமையகத்தின் மாதிரியையும் பார்வையிட்டார். அத்துடன் இரு நாட்டு தலைவர்களும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சுக்கு வருகைதந்த இந்திய இராணுவத் தளபதி, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவுடன் விஷேட கலந்துரையாடலில் ஈடுப்பட்டார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கை குறித்து சினேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டார்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இந்திய இராணுவ தளபதி ஆகியோரின் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் விஷேட அழைப்பின் பேரில் இலங்கை வருகை தந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானேவுடன் அவரது பாரியார் வீணா நரவானே, இந்திய இராணுவ தலைமையக பயிற்சி பிரிவின் உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் ரஜீவ் தாப்பர், இராணுவ உதவியாளர் மேஜர் ஜெனரல் விக்ராந்த் நாயக், மற்றும் கேர்ணல் மந்தீப் சிங் தில்லன் ஆகியோர் அடங்கிய குழுவினரே வருகை தந்துள்ளனர்.

ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய இராணுவத் தளபதி  ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினர்.

ஸ்ரீ ஜயவர்தனபுராவில் உள்ள இந்திய அமைதிகாக்கும் படைவீரர்களின் நினைவிடத்திற்கு இன்று முற்பகல் விஜயம் செய்த இந்திய இராணுவத் தளபதி நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்