மாகாண சபைகள் இயங்காது போனமைக்கு காரணம் TNA

மாகாண சபைகள் இன்று மூன்றரை வருடங்களாக காணாமல்போய் இருப்பதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' என்னும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' வீடமைப்பு திட்டத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதல்கட்ட நிதிவழங்கும் நடவடிக்கை நேற்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக தெரிவுசெய்யப்பட்ட 33பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதி இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”எனது முதலாவது பாராளுமன்ற உரையின்போது அதிகார பகிர்வு விடயத்தில் மாகாணசபை முறைமை மட்டுமே எமது கைகளில் உள்ளது, அதனை பலப்படுத்தியெடுக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.

2017ஆம் ஆண்டு மாகாணசபை முறைமையில் வந்த சட்டத்தை சரியாக நடத்தி முடித்திருந்தால் நல்லாட்சி அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இழைத்த தவறுதான் மாகாணசபை தேர்தல் தாமதமடைந்ததற்குக் காரணமாகும். ஐம்பதிற்கு ஐம்பது,வட்டாரமுறை என்றெல்லாம் கொண்டுவந்து குழப்பியடித்து எல்லாவற்றையும் குழப்பிவட்டனர்.

அதிகார விடயத்திலும் மாகாணசபை முறைமையிலிருந்து தான் ஆரம்பிக்க முடியுமென்று நாங்கள் 2007ஆம் ஆண்டிலிருந்தே சொல்லி வந்திருக்கின்றோம். 2008ஆம் ஆண்டு தேர்தலில் எங்களால் போட்டியிட முடியாது எனவும் வடக்கு கிழக்கு இணையாத மாகாணத்தில் போட்டியிட முடியாதென்று பேசியவர்கள் இன்று தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே போட்டியாளர்களை தெரிவு செய்து களத்தில் குதித்திருக்கின்ற நிலைமையை பார்த்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.