கல்லான இதயத்தையும் கனிவான இதயமாக மாற்றக்கூடிய ஆற்றல் கொண்ட செபமாலை

கல்லான இதயத்தையும் கனிவான இதயமாக மாற்றக்கூடிய ஆற்றல் கொண்ட செபமாலை-Jepa Maalai

- ஒக்டோபர் புனித செபமாலை மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம்

கத்தோலிக்கத் திருச்சபையில் செபமாலை செபிக்கும் பழக்கம் என்பது ஒரு உன்னதமான பண்பாகும். தொடக்க கால கிறிஸ்தவர்கள் இயேசு கற்றுத் தந்த இறைவேண்டலையும் அன்னை மரியாவை வானதூதர் வாழ்த்திய "அருள் நிறைந்த மரியே" என்ற வாழ்த்து செபத்தையும் மிகச்சிறந்த உன்னதமான செபமாக பயன்படுத்தி வந்தனர்.

இன்றைய காலத்தில் நாம் செபிக்கும் செபமாலையானது 1214 ஆம் ஆண்டுதான் வழக்கத்திற்கு வந்தது என்பதை திருச்சபையின் மரபு வழியாக அறிய முடிகின்றது.

செபமாலையானது ஆல்பிஜென்சியன் என்ற தப்பறைக் கொள்கையை எதிர்த்துப் போராடுவதற்காக அன்னை மரியாவால் புனித டொமினிக்குக்கு வழங்கப்பட்டது.

திருச்சபையின் மற்றொரு மரபுப்படி மத்திய காலங்களில் துறவிகள் தினந்தோறும் 150 திருப்பாடல்களை செபிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

படிப்பறிவில்லாத சாதாரண பொதுநிலை மக்களுக்கு இது சாத்தியமற்றதாக இருந்தது. எனவே துறவிகளைப் போல அவர்களும் செபமாலை செபிக்கும் வகையில் 150 "அருள்நிறைந்த மரியே" செபத்தை எண்ணிக்கையாகக் கொண்ட செபமாலை உருவாக்கப்பட்டது. இவைதான் செபமாலை உருவானதற்கு அடிப்படையாக இருந்தன.

செபமாலை என்பது ஒரு ஆற்றல் வாய்ந்த ஆயுதமாகும்.

திருச்சபையில் பல்வேறு புனிதர்கள் செபமாலையின் வல்லமையை சான்று பகர்ந்துள்ளனர். புனித இரண்டாம் ஜோன்போல் "நான் செபித்த செபங்களில் செபமாலை தான் மிகச்சிறந்த செபம்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன் வாழ்நாள் முழுவதும் செபமாலை செபித்து தான் புனித வாழ்வு வாழ முயற்சி செய்துள்ளார்.

அன்னை மரியின் வழியாக வளர்ந்த புனிதத்தின் முலமாகத்தான் அவர் திருச்சபையில் மிகச்சிறந்த புனிதராக உயர்ந்துள்ளார்."என்னுடைய மறையுரையை விட நான் செபிக்கும் செபமாலையால்தான் பல ஆன்மாக்களை மனமாற்றம் அடைய செய்துள்ளேன்" என்று புனித பெர்னார்ட் கூறியுள்ளார். கல்லான இதயத்தைக்கூட கனிவான இதயமாக மாற்றக்கூடிய ஆற்றல் செபமாலைக்கு உள்ளது.

திருச்சபையில் அங்கீகாரம் பெற்ற பக்தி முயற்சிகளில் ஒன்றான செபமாலை ஜெபிப்பதன் வழியாக எண்ணற்ற வல்ல செயல்கள் நடந்துள்ளன. பெரும்பாலானவர்கள் கண்ணீருடன் செபமாலை ஜெபித்து தங்கள் வாழ்வில் வெற்றியடைந்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது. இவ்வாறாக செபமாலையின் வல்லமை எண்ணற்ற புதுமைகளைச் செய்துள்ளது.

எனவேதான் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் "திருஅவையில் அங்கீகாரம் பெற்ற பக்தி முயற்சிகளில் செபமாலையைப் போல் இவ்வளவு அதிக அற்புதங்களை வேறு எந்த பக்தி முயற்சியும் நிகழ்த்தவில்லை" என்று கூறியுள்ளார். மேலும் புனித பியோ "செபமாலை நம்முடைய ஆயுதம்" என்றும் கூறியுள்ளார். எனவே செபமாலை செபிப்பது வழியாக அன்னை மரியாவின் வழிகாட்டுதலை பெறுவோம். செபமாலை நற்செய்தியின் சுருக்கமாக இருக்கின்றது. இயேசுவின் பிறப்பு முதல் விண்ணேற்பு வரை மறை உண்மையின் வழியாக தியானித்து ஜெபமாலை செபிக்கப்படுகின்றது.

எனவேதான் கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு "செபமாலை நற்செய்தியின் சுருக்கம்" என சுட்டிக்காட்டுகின்றது.

செபமாலையை நாம் ஒவ்வொரு நாளும் செபிக்கும் பொழுது நம் உள்ளத்தில் அமைதியைப் பெறுகின்றோம். அன்னை மரியாவின் பரிந்துரையை உணர்கின்றோம். நம்முடைய மனதை ஒருமுகப்படுத்தி தியானிக்கிறோம். இப்பேறுப்பெற்ற செபமாலையை நாம் கொடையாக பெற்றிருப்பது அன்னை மரியாள் நம்மீது கொண்ட அன்பின் காரணமாகும். செபமாலை செபிப்பதன் வழியாக அன்னை மரியாள் தொடர்ந்து நமக்கு பரிந்துரை செய்து வருகிறார். புது வாழ்வையும் புது மாற்றத்தையும் நமக்கு வழங்கி வருகின்றார். எனவே செபமாலை செபிக்கும் மக்களாக மாறி புதுவாழ்வைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அருளை வேண்டுவோம்.

திருத்தொண்டர்
குழந்தை இயேசு பாபு