இ.தொ.கா மௌனமாக இல்லை அர்ப்பணிப்புடன் செயற்படும்

Jeevan Thondaman

- எவரும் கவலைப்பட வேண்டாம் என்கிறார் ஜீவன்

அரசுக்கு சொந்தமான காணிகளை பாற்பண்ணை அமைப்பதற்கு தனியாருக்கு வழங்குகையில் நாம் மௌனம் சாதிப்பதாக எதிரணியில் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தத் திட்டத்தால் பிரதேசத்திலுள்ள அனைத்து குடும்பங்களும் பாதுகாக்கப்படும். அதற்காக இ.தொ.கா அர்ப்பணிப்புடன் செயற்படும். இத் திட்டத்தினால் அந்த மக்களின் வாழ்வாதாரம் மேம்படுமென இ.தொ.க பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கூட்டுஒப்பந்தம் இல்லாத நிலையிலே நாம் தொழிலாளர்களின் நலனுக்காக செயற்பட்டு வருகிறோம். கூட்டு ஒப்பந்தம் ஒரு அடிமை சாசனம் என்றார்கள். இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஒரு தரப்பினர் தவறான கருத்தை பரப்பினார்கள். தொழிற்சங்க ரீதியாக நாம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம்.

எல்லா தொழிற்சங்க அங்கத்தவர்களையும் இ.தொ.கா சமமாக நடத்தியது. இனி அந்த நிலை மாறும். இ.தொ.கா அங்கத்தவர்களுக்கே இனி முக்கியத்துவம் வழங்கப்படும். உங்களுக்கு பிரச்சினை இருந்தால் உங்கள் அலுவலகத்திற்கு சென்று பேசலாம். தோட்டப் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் நிமல் சிரிபாலவுடன் பேசியுள்ளோம். ஜே.இ.டி.பி காணி தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

பால் உற்பத்திக்காக இந்த காணிகளை தனியார் துறைக்கு வழங்குவாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கூறியிருந்தார். இது தொடர்பில் இ.தொ.க மௌனம் காப்பதாக சிலர் விமர்சித்தார்கள். எமது நிலைப்பாட்டை நாம் முன்வைத்துள்ளோம். இது தொடர்பில் பேசி அங்குள்ள 1,224 குடும்பங்களையும் பாதுகாக்கப்படுவர். 1,000 ஏக்கரில் பால்பண்ணை திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது.இங்குள்ள காணிகளில் தேயிலை உற்பத்தி குறைவாக உள்ளது. குறைந்தளவு குடும்பங்களே தேயிலை கொழுந்து பறிக்கின்றன. இங்குள்ள குடும்பங்களை இ.தொ.கா பாதுகாக்கும்.இந்த பால்பண்ணை திட்டத்தினால் அங்குள்ள குடும்பங்களுக்கு நன்மை கிட்டும்.

காணிகளை மக்களுக்கு பிரித்து கொடுக்காமல் வேறு நபர்களுக்கு கொடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 2015 – -2019 காலப்பகுதியில் 550 ஏக்கர் காணி தனியாருக்கு வழங்கப்பட்டது. அப்பொழுது அவர்கள் ஏன் மௌனம் காத்தார்கள். அனுமதியின்றி 200 ஏக்கர் காணி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. எமது அரசு வந்ததும் அதனை நிறுத்தியது. 2015 - – 2019 காலப்பகுதியில் இந்திய வீட்டுத் திட்ட உட்கட்டமைப்பு வசதிக்காக 128 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் எமது அரசில் 636 மில்லியன் நாம் செலவிட்டிருக்கிறோம். அமைச்சு மூலமான வீடுகளை தற்காலிக இடங்களில் உள்ளவர்களுக்கே வழங்குகிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிஷாந்தன்