இரசாயன உரத் தடை: உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

இரசாயன உர இறக்குமதி மற்றும் பாவனையை தடை செய்வதற்கு அமைச்சரவை கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார, ஐக்கிய விவசாய முன்னணியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார மற்றும் விவசாய முன்னணியின் செயலாளர் ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளனர்.

இம்மனுவில் பிரதிவாதிகளாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, விவசாய அமைச்சின் செயலாளர் உதித் கே விஜேசிங்க, தேசிய உர செயலகம், விவசாய திணைக்களம் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இரசாயன உர இறக்குமதி மற்றும் பாவனையை தடை செய்யும் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய, நடவடிக்கை எடுக்கப்பட்டமையால் விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ள இலட்சக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பயிர்செய்கைக்கான செலவு அதிகரித்துள்ளதாகவும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர். மனுக்களை பரிசீலித்து இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை அமைச்சரவையின் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுத்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறும், அமைச்சரவையின் குறித்த தீர்மானத்தினால் நாட்டின் விவசாயிகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.