லட்சத்தீவுகளில் மீட்கப்பட்டவை புலிகள் அமைப்பினரது ஆயுதங்களே!

இந்தியா தேசிய புலனாய்வு பிரிவு அறிவிப்பு

இந்தியாவிற்கு சொந்தமான லட்சத்தீவுகளை அண்மித்த பகுதியில் கடந்த வருடம் இலங்கை மீன்பிடி படகில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்கள் என்பன தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவை என இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட தமிழக சந்தேகநபர்கள் இருவரும் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகம், இலங்கை மற்றும் வேறு சில நாடுகளில் உள்ள தலைவர்களின் வழிகாட்டலில் விடுதலை புலிகளின் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இவர்கள் இரகசியமாக செயற்பட்டு வந்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

பெறப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது. இலங்கையின் மீன்பிடி படகு கடந்த வருடம் மார்ச் 18 ஆம் திகதி அரபிக் கடலில் இந்திய கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. இந்த படகில் இருந்து பெருமளவு போதைப்பொருள், துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டிருந்தன. இதன்போது, இலங்கையர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.