சமையல் எரிவாயு போட்டியாளராக பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்த நிறுவனம்

சமையல் எரிவாயு போட்டியாளராக பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைந்த நிறுவனம்-CPC-LP Gas Business-11 Cabinet Decisions

- காலியில் 200 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
- ஆபாசப் பேச்சுக்களை தடை செய்தல் சட்டமூலம் பாராளுமன்றுக்கு
- வெகுசன உயர்கல்வி கற்கைகள், பயிற்சி நிறுவனத்தை தாபித்தல்
- பாகப்பிரிப்பு வழக்குச் சட்டத்தில் திருத்தம்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 11 முடிவுகள்

நேற்று (06) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 11 தீர்மானங்கள் எடுக்கப்பட்டள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு 70 தொடக்கம் 90 மெற்றிக்தொன் திரவப் பெற்றோலிய வாயு (LP Gas) உற்பத்தி செய்யப்படுவதுடன், அது நாட்டின் கேள்வியின் 5% சதவீதமாகும்.

அவ்வாறே, நாளொன்றுக்கு 10,000 பெரல்கள் இயலளவுடன் கூடிய புதிய சுத்திகரிப்ப நிலையத்தை அமைப்பதற்கும், தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கும் சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், குறித்த அபிவிருத்தி கருத்திட்டத்தை துரிதமாக மேற்கொள்வதற்குத் தேவையான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது, மூன்றாவது போட்டியாளராக எரிவாயு சந்தைக்கு பிரவேசிப்பதன் முக்கியத்துவம் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி திரவப் பெற்றோலிய வாயு (LP Gas) கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில் குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த கம்பனியொன்றை உருவாக்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2.  ஆபாசப் பேச்சுக்களை தடை செய்தல் தொடர்பான சட்டமூலம்
தகவல் தொழிநுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3.  'இலங்கை பட்டய ஊடகவியலாளர் கற்கைகள் நிறுவனம்' எனும் பெயரிலான வெகுசன உயர்கல்வி கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தை தாபித்தல்
வெகுசன ஊடகத்துறையில் காணப்படும் பிரச்சினைகளை இனங்கண்டு உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியான கற்கைகளின் தரநியமங்களுக்கமைய வெகுசன ஊடகக் கல்வி மேம்பாடு மற்றும் உயர் தரநியமங்களைப் பாதுகாப்பதற்காகவும், அரச அனுசரணையுடன் கூடிய நிறுவனமொன்றை தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாடசாலைகளில் வெகுசன ஊடகவியல் தொடர்பான பாடவிதானத்தைப் பயில்கின்ற குறிப்பிடத்தக்களவிலான மாணவர்கள் இருக்கின்ற போதிலும், அவர்களுக்கான உயர்ந்த தரநியமங்களுடன் கூடிய போதுமானளவு கற்கை நிறுவனங்கள் இதுவரை தாபிக்கப்படவில்லை.

பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் வெகுசன தொடர்பாடல் பட்டப்படிப்புக் கற்கைகள் சில காணப்பட்டாலும், குறித்த கற்கைகள் மூலம் தொழில்வாண்மை ரீதியான ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்குப் போதியவாறான பிரயோக ரீதியானதும் தொழிநுட்ப ரீதியானதுமான அறிவு வழங்கப்படுவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனால், தற்போது வெகுசன ஊடகத்துறையில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கும், ஊடக முகாமையாளர்களுக்கும் அதேபோல் ஊடகத்துறையில் பிரவேசிப்பதற்கு எதிர்பார்க்கும் பாடசாலை மாணவர்களுக்கும் வெகுசனத் தொடர்பாடல் பாடவிதானத்தை கற்பதற்கும் இது உதவியாக அமையும்.

அவர்களுக்கு தேவையான பிரயோக ரீதியான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அவர்களுடைய இயலளவு விருத்தியை ஏற்படுத்தி தொழில்வாண்மையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கும், விழுமியம்மிக்க சுயகட்டுப்பாட்டுடன் கூடிய ஊடகக் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான ஊடகவியலாளர்களை உருவாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு இதனை தாபிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெகுசன ஊடகவியல் தொடர்பான சான்றிதழ் பாடநெறி தொடக்கம் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்பு வரைக்குமான கற்கை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இயலுமான வகையில் வெகுசன உயர்கல்விக் கற்கைகள் மற்றும் பயிற்சி நிறுவனமாக ''இலங்கை பட்டய ஊடகவியலாளர் கற்கைகள் நிறுவனம்' எனும் பெயரிலான நிறுவனமொன்றை தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4.  அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கான புவிசார் வளங்களைப் பயன்படுத்தல்
அரச அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்காக எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குத் தேவையான கருங்கல், மணல், மண், செம்மண் மற்றும் களிமண் அளவுகளை மதிப்பிடல், குறித்த கருத்திட்டங்களுக்காக புவிசார் வளங்களை விநியோகிப்பதற்கான பொறிமுறையை அறிமுகப்படுத்தல், கட்டுமானத் துறையில் ஏனைய கருத்திட்டங்கள் மற்றும் சிறிய வாழ்வாதார நடவடிக்கைகளுக்குத் தேவையான புவிசார் வளப் பயன்பாட்டில் பின்பற்றப்படுகின்ற அனுமதிப்பத்திர முறைமையை இலகுபடுத்தல், பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தக் கூடிய காணிகளை அடையாளங் காணல் போன்ற நோக்கங்களுடன் கூடியதாக புவிசார் வளங்கள் தொடர்பான ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் துறைக்குத் தேவையான கருங்கல், மணல், மண்ஃசெம்மண் மற்றும் களிமண் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளும் போது பின்பற்றப்படும் அகழ்வு அனுமதிப்பத்திரப் பொறிமுறையை பொதுமக்களுக்கும், சேவை வழங்குநர்களுக்கும் இலகுபடுத்துவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அடிப்படை அறிக்கை குறித்த செயலணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிந்துரைகளைக்கருத்தில் கொண்டு அப்பொறிமுறைகளை இலகுபடுத்துவதற்காக, இச்செயன்முறையுடன் தொடர்புபட்ட அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் தேவையான கட்டளைகளுடன் கூடிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கும், கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் கனிமப்பொருட்களின் அகழ்வு, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் தொடர்பான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் போது அரச நிறுவனங்கள் மூலம் பின்பற்ற வேண்டிய பொறிமுறைகள் தொடர்பான நடவடிக்கைக்கோவையை வெளியிடுவதற்காகவும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5.  ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நியூசிலாந்து மெஸ்ஸி (Massey University of New Zealand) பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான ஒப்பந்தம்
இருதரப்பினருக்கும் இடையே உயர்கல்வித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களுக்காக ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நியூசிலாந்து மெஸ்ஸி பல்கலைக்கழகத்திற்கும் இடையே 05 வருடங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2012 ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி எட்டப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதி முடிவடைந்த பின்னர், அப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருதரப்பினருக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய 2021 ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் மீண்டும் ஐந்து (05) வருடங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீடிப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6.  'கிராமத்திற்கு தொடர்பாடல்' தேசிய கருத்திட்டம்
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்திய 'கிராமத்திற்குத் தொடர்பாடல்' கருத்திட்டத்தின் மூலம் அதிவேக இணைய வலையமைப்புக்களின் குறைபாடுகள் தொடர்பான ஆய்வொன்று, 25 மாவட்டங்களில் 14,000 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக நடாத்தப்பட்டது. குறித்த கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் குறித்த ஆணைக்குழுவின் மூலம் தொலைத்தொடர்புகள் சேவை வழங்குநர்களுடன் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்தில் அதிவேக இணைய வலையமைப்பை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டம் 2021 ஒக்ரோபர் மாதம் நிறைவு பெறவுள்ளது.

டிஜிட்டல் மயப்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அதிவேக இணைய வலையமைப்புச் சேவையை தற்போது நாடு தழுவிய வகையில் குறித்த கருத்திட்டத்தை தேசிய கருத்திட்டமாக விரிவாக்கம் செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்குத் தேவையான நிதியை தொலைத்தொடர்புகள் அபிவிருத்தி நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7.  கொழும்பு தாமரைக் கோபுர கருத்திட்டத் தொகுதிக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவுக்கு காணி எடுத்தல்
தாமரைக் கோபுர கருத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது பூர்த்தியடைந்து வருவதுடன், குறித்த வர்த்தகமயப்படுத்தல் மற்றும் தொழிற்பாடுகளைத் திட்டமிடுவதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அக்கோபுரத்திற்கு அண்மையிலுள்ள பேரவாவியை அண்டிய பகுதியில் நவீன நீர் அலங்காரக் காட்சிப் பூங்காவை நிர்மாணித்தல், உணவு விற்பனை நிலையங்களை அமைத்தல், குறித்த கோபுரத்தில் பணியில் அமர்த்துவதற்கு எதிர்பார்க்கும் பணியாளர்களுக்கான அலுவலகம், தங்குமிடம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை குறித்த தொகுதியில் நிர்மாணித்தல், தற்போது திட்டமிடப்பட்டுள்ள வாகனத்தரிப்பிடத்தை மேலும் விரிவாக்கம் செய்தல் போன்ற அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கருத்திட்டத் தொகுதியை சுற்றியுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான 04 ஏக்கர் 03 ரூட் மற்றும் 24.47 பேர்ச்சர்ஸ் காணியை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குவதற்காக தொழிநுட்ப அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8.  ஏற்றுமதி சந்தைக்கான மென்பொருள் அபிவிருத்தியை மேற்கொள்ளும் போது தகவல் தொழிநுட்பங்கள் தொடர்பான சேவைகள் வழங்கும் கருத்திட்டம், HCL டெக்னொலோஜிஸ் லங்கா (தனியார்) கம்பனி - மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டமாக அடையாளங் காணல்
HCL டெக்னொலோஜிஸ் லங்கா (தனியார்) கம்பனி இந்தியாவிலுள்ள HCL டெக்னொலோஜிஸ் நிறுவனத்தின் முழுமையான கூட்டிணைக்கப்பட்ட கம்பனியாகும். குறித்த கம்பனி 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் கூடிய 2,450 இலங்கையர்கள் மற்றும் 1,050 வெளிநாட்டவர்கள் அடங்கலாக 3,500 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி மென்பொருள் அபிவிருத்தி மற்றும் தகவல் தொழிநுட்பம் தொடர்பான சேவைகள் வழங்குவதற்கான கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக, 2020 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தின் வர்த்தக ரீதியான நடவடிக்கைகள் 2020 ஒக்ரோபர் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி கருத்திட்டம் மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்ட சட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் கருத்திட்டமாக கருதி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குறித்த கம்பனி கோரியுள்ளதுடன், அதற்கு முதலீட்டுச் சபை உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய HCL டெக்னொலோஜிஸ் லங்கா (தனியார்) கம்பனியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள மேற்படி கருத்திட்டம் 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க மூலோபாய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் கருத்திட்டமாக அடையாளப்படுத்துவதற்காக பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9.  இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் காலி மாவட்டத்தில் 200 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் (Smart Classroom) மற்றும் நவீன கணனி ஆய்வுகூடங்களை நிர்மாணித்தல்
நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் டிஜிட்டல் தொழிநுட்பத்தில் காணப்படும் இடைவெளிகளைக் குறைப்பதற்காகவும் நவீன தொழிநுட்பங்களுடன் கூடிய தரப்பண்பான கல்வி வாய்ப்புக்களை அடையாளங் கண்டு, பிள்ளைகளுக்கு நியாயமான அணுகுமுறைகளை வழங்க வேண்டிய காலத்தின் தேவையை அறிந்துகொண்டு, 'அதிக விளைவு வெளியீடுகளுடன் கூடிய சமூகமட்டக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்' தொடர்பாக கையொப்பமிட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழிகாட்டலுக்கமைய காலி மாவட்டத்திலுள்ள 200 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் (Smart Classroom) மற்றும் நவீன கணனி ஆய்வுகூடங்களை நிர்மாணிப்பதற்காக 300 மில்லியன் இலங்கை ரூபாய்கள் நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த நிதி வழங்கலுக்கான இந்தியக் குடியரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10.  பாகப்பிரிப்பு வழக்குச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
காணியொன்றின் யாதொரு உரிமையாளர்களின் உரித்தைப் பாதுகாத்து தேவையற்ற தாமதங்களையும் சிக்கல்களையும் தடுக்கும் வகையில் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் பாகப்பிரிப்பு வழக்குத் திருத்தம் செய்வதற்காக பாகப்பிரிப்புச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக ஏற்புடைய பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட பாகப்பிரிப்பு வழக்கு சட்டம் தொடர்பான ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போது காணப்படும் பாகப்பிரிப்பு வழக்குச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11.  ஸ்மார்ட் இலங்கையின் முன்முனைவுகள் - டிஜிட்டல்மயப்படுத்தல் (Digitalization) ப்ளொக்செயின் தொழிநுட்பம் , (Blockchain Technology) க்ரிப்ரோகரன்சி மயினிங் (Cryptocurrency Mining) மற்றும் இலங்கைக்குத் தேவையான சேவைகளை வழங்கல்
டிஜிட்டல் மயமான வர்த்தக சூழலை ஏற்படுத்துவதற்கு வசதியளிப்பதற்காக டிஜிட்டல் வங்கி முறைமை, ப்ளொக்செயின் தொழிநுட்பம்  (Blockchain technology), க்ரிப்ரோகரன்சி மயினிங் (Cryptocurrency Mining)   மற்றும் தேவையான இதர சேவைகளை வழங்குதல் போன்ற துறைகள் உள்ளிட்ட கூட்டிணைந்த தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

தெற்காசியவில் அதிகமான நாடுகள் குறித்த துறைகளை மதிப்பிடல் மற்றும் அபிவிருத்தி செய்வதை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், குறித்த நாடுகளுடன் போட்டித்தன்மையில் செயற்படுவதற்கு இயலுமான வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் துரித கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய, குறித்த துறைகளில் செயற்படும் கம்பனிகளின் முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்குத் தேவையான கட்டளைச் சட்டங்கள், சட்ட ஒழுங்குகள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அவசியமான விடயங்களை அறிக்கைப்படுத்துவதற்கும், அரச மற்றும் தனியார் துறைகளில் நிபுணத்துவமான தொழில்வாண்மையாளர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும், 1978 ஆம் ஆண்டும் 04 ஆம் இலக்க முதலீட்டுச் சபைச் சட்டம் மற்றும் அதற்கு ஏற்புடைய திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கமைய, க்ரிப்ரோகரன்சி மயினிங் (Cryptocurrency Mining)  கம்பனிகளுக்கு இலங்கையில் முதலிடுவதற்கு அனுமதி வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அபிவிருத்தி முன்மொழிவுகள் மற்றும் கண்காணிப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.