பெண்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் ஆண்மை அழிய வேண்டுமா?

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள் ஈந்ததும் இந்நாடே – எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும் இந்நாடே – அவர் கன்னியராகி நிலவினிலாடிக் களித்ததும் இந்நாடே – அவர் மங்கைய ராயவர் இல்லறம் நன்கு வளர்த்ததும் இந்நாடே – அவர் தங்க மழலைகள் ஈன்று அமுதூட்டித் தழுவியதும் இந்நாடே”

பாரதியின் வரிகளில் இழையோடும் பெண்ணின் பெருமைப்படுத்தும் சிந்தனைகள் பின்னாளில் பலருக்குள்ளும் மாற்றத்தை ஏற்படுத்திய விதையாக அமைந்தது.

பெண் தன் இயல்பு மீட்டெடுக்க குரல் கொடுத்த ஆண்கள் என்றவரிசையில் மேலைத்தேயத்தை தாண்டி தமிழ்பேசும் நல் உலகில் பாரதி மட்டுமல்ல அவரைதவிர இன்னும் பலர் ஆதரவளித்தனர். அந்த வரிசையில் தந்தை பெரியாரின் பங்களிப்பும் முக்கியமானது.

பெரியாரைப்பற்றிய சிந்தனைகளும் விருப்பு வெறுப்புக்களும் ஒருபக்கம் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கின்றது. அது ஒருபுறமிருக்க அவர் பெண்ணுக்காய் எழுப்பிய குரல் கவனிக்கப்பட வேண்டியது. பெண் கல்வி, பெண் விடுதலை, கைம்மை ஒழிப்பு எனப் பெண்களுக்கும் உரிய உரிமைகளை சுட்டிக்காட்டியவர். அதற்காய் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர்.

பெரியார் வாழ்ந்த காலத்தில் பிராமண ஆதிக்கம் நிறைந்தே இருந்தது. தமிழ்நாட்டு சூழலில் சாதிய அடக்குமுறைகளும் தலைவிரித்தாடிய காலம். தமிழ்நாட்டில் நிலவிய தேவதாசி முறை அதாவது பெற்றோர்கள் தமது பெண்குழந்தைகளை கோவிலுக்கு என்று பொட்டுக்கட்டி விட்டனர். இதனால் அவர்கள் மீண்டும் மீண்டும் அடிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பெரியாரை பொறுத்தவரையில் பெண்ணுக்கென்று தனித்த ஒன்றில்லை. ஆண்களுக்கு உரிமையுடைய அனைத்தும் பெண்ணுக்கும் உரியது. "கும்மி கோலாட்டங்களை மறந்துவிட்டு, ஆண்களைப் போல சகல விளையாட்டுகளிலும் பெண்கள் ஈடுபட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தார். அதன்மூலம் அவர்களுக்கு பலமும், தைரியமும் உருவாகும் என்றார்.

பெரியாரின் சுயமரியாதை கழகத்தின் முக்கியமான பேசுபொருளாகவும், பிரசாரபொருளாகவும் அமைந்தது பெண் உரிமை சார்ந்த விடயங்கள் ஆகும். அவரது வீரியமிக்க எழுத்துக்களிலும் அதனை வெளிப்படுத்தினார். பெரியாரின் சிந்தனைகளுக்கு உரமாகவும் காந்திய மற்றும் இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிரானதாகவும் வெளிவந்த ‘மதர் இந்தியா’ என்ற நூல் அமெரிக்க பத்திரிகையாளரான கேத்தரீன் மேயோ எழுதியிருந்தார். புராணங்கள், இதிகாசங்கள் பெண்களை எப்படி சுரண்டுகின்றன? எப்படி அடிமைப்படுத்துகின்றன என்பதனை இந்த நூல் விபரித்தது.

குழந்தைத் திருமணம், பாலியல் நோய்கள், விதவைகள் நடத்தப்படும் விதம் குறித்த பல புள்ளிவிவரங்கள் இந்நூலில் முன்வைக்கப்பட்டிருந்தது. பதினான்கு வயதுக்கு முன்பாக பெண்கள் திருமணம் செய்துகொடுக்கப்படும் பாரம்பரியத்தை அரசு ஏற்பது குறித்தும் அவர் தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டினார். இந்த நூல் பெரியாரிடம் பெண்ணிய சிந்தனை மேலோங்க காரணமாக அமைந்தது.

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை"

"தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்" இந்த குறள்களில் பெணகள் ஆண்களை தொழவேண்டும் என்ற கருத்தியல் கேள்வி எழுப்பினார். இதனால் மீளவும் அவர்களின் கோபம் பெரியாரிடம் திரும்பியது.

பெரியார் நெறிமுறைகளற்ற வாழ்க்கை முறையை, ஒழுக்கக்கேட்டை ஊக்குவிப்பதாக அக்காலத்தில் வெளிவந்த தமிழ் இதழ்கள் குறிப்பிட தொடங்கின.பெரியாரை பொறுத்தவரையில் மனைவி, கணவனை மதிக்க வேண்டும் என்றால் ஏன் கணவன், மனைவியை மதிக்கக் கூடாது? மனைவிதான் புகுந்த வீட்டின் உறவுகளை மதிக்க வேண்டுமென்றால் ஏன் மனைவி வீட்டு உறவுகளை, கணவன் மதிக்கக் கூடாது? மனைவி, கணவனுக்குச் செய்வதை கணவன், மனைவிக்குத் திருப்பிச் செய்ய முடியாது என்றால் பெண் என்பவள் வீட்டு வேலைக்கும், உடல் சுகத்துக்கும் மட்டுமே ஆனவள் என்று ஆகவில்லையா? இப்படிப்பட்ட திருமணங்கள் நாட்டில் அரை நொடிகூட நீடித்திருக்க அனுமதிக்கக் கூடாது". என்பதை மிக தெளிவாக எடுத்துரைத்தார்.

அதேவேளை பெரியார் பெண்களுக்கு விடுதலை வேண்டுமென்றால் ஆண்மை அழிய வேண்டுமென ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். 'எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா?நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா?பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதார்களுக்கு சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும்.

அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விடயங்களில் விடுதலை உண்டாகி விட்டாலும் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம் என்றார் பெரியார்.

ஆனால் பெரியார் ஒன்றை மறந்துவிட்டார். அவரும் ஒரு ஆண்மகன். அவர் பேசுவதும் பெண்விடுதலை என்பதை அவர் மறந்துவிட்டார். ஆங்காங்கே எழுந்த பெண்சார்பான ஆண்குரல்களில் பெரியாரும் கவனிக்கப்பட வேண்டியவர்.

1948ல் பெரியார் தன்னைவிட வயதில் மிக இளைய பெண்ணை - மணியம்மையை - திருமணம் செய்தபோது அவருடைய ஆதரவுதளம் வெகுவாகக் குறைந்தது.

பவதாரணி ராஜசிங்கம்