மழை நின்ற பின்னரும் தொடருகின்ற தூறல்!

Multi-System Inflammatory Syndrome in Children (MIS-C)

குழந்தைகளில் பெரும்பாலும் கொவிட்-19 நோய்த் தொற்று தீவிரம் குறைந்ததாகவே காணப்பட்டது. இதுவரை இந்த நோயினால் நேரடியாக மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை விட, அரிய வகையான Multi-System Inflammatory Syndrome in Children (MIS-C) காரணமாக பாதிக்கப்பட்டவர்களே அதிகம். அதிதீவிர சிக்கல் நிலைமைகள் உருவாவதும், அதிதீவிர சிகிச்சை தேவைப்படுவதும் இந்த MIS-C நிலைமையில் ஆகும் என்று விளக்கம் தருகின்றார் சிறுவர் நல வைத்திய நிபுணர் அர்சாத் அஹமட்.

“கொவிட்-19 இற்கு  பிந்திய காலகட்டத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலமே நாம் எங்கள் பாதுகாப்பையும், எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். மழை நின்ற பின்னரும்  தொடரும் தூறல் போன்றது இந்தப் பாதிப்பு MIS-C ஆகும்” என்று விளக்குகிறார்   டொக்டர் அர்சாத் அஹமட்.

நாட்டில் கொவிட் தொற்று படிப்படியாகக் குறைவடையத் தொடங்கி இருக்கிறது. நாடு முழுவதும் சுமார் எல்லோருக்கும் இந்தத் தொற்று முழுதாகவோ அல்லது பகுதியாகவோ வந்து போயிருக்கிறது. அது போல அரைவாசி மக்கள் தொகைக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது.  இவை  இரண்டின் காரணமாக உருவான நோய் எதிர்ப்பாற்றல் காரணமாக கொவிட் தொற்று குறைவடையத் தொடங்கி இருக்கிறது.

இருந்தாலும், உலகம் முழுவதும் இவ்வாறான தொற்று அலைகளின் முடிவில் சிறுவர்களிடம் 'பல்வேறு உடல்உறுப்புகளின் அழற்சி நிலை' (Multisystem Infalmmatory Syndrome in Children - MIS-C) எனும் புதிய வகைநோய் உருவாவது அவதானிக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நமது நாட்டிலும் ஒரு சில உயிரிழப்புகள்ஏற்பட்டிருக்கின்றன என்கிறார் டொக்டர் அர்சாத் அஹமட்.

MIS-C என்பது கொவிட்- 19 நோய்த் தொற்றின் பின்னர் ஏற்படும் ஒரு தீவிர நோயாகக்  கருதப்படுகின்றது. பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் கொவிட்- 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக, அல்லது கொவிட்- 19  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாக இருப்பது இந்தநோய் கொவிட் தொற்று மூலம் ஏற்படுகிறது என்பதை  நிரூபிக்கப் போதுமானதாக இருக்கின்றது.

பெரும்பாலும் குழந்தைகளில் கொவிட்- 19 நோய்த் தொற்று தீவிரம் குறைந்ததாகவே காணப்பட்டது. இதுவரை இந்த நோயினால் நேரடியாக மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை விட இந்த அரிதான MIS-C காரணமாக பாதிக்கப்பட்டவர்களே அதிகம். அதிதீவிர சிக்கல் நிலைமைகள் உருவாவதும் அதி தீவிர சிகிச்சைதேவைப்படுவதும் இந்த MIS-C நிலமையில்தான்.

இந்த நோய் நிலைமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், தோல் மற்றும் சமிபாட்டுத் தொகுதி போன்ற எல்லா உடல் உறுப்புக்களும் அழற்சிக்கு உள்ளாகின்றன.

இதுவே இதை ‘பல்வேறு உடல் உறுப்புகளின் அழற்சி நிலை’ Multisystem Infalmmatory Syndrome in Children - (MIS-C) என அழைக்கப்படக் காரணமாயிற்று.

கொவிட் தொற்று ஏற்பட்டு 2-6 வாரங்களில் உடலின் நிர்ப்பீடணத் தொகுதியால்(immune system) நடத்தப்படும்  காலதாமதமானதொரு போராட்டமே  Multisystem Inflammatory Syndrome in Children. அதாவது, கொரோனா தொற்று ஏற்படும் போது, வைரசுகளில் காணப்படும் அன்டிஜனை இனங்கண்ட உடலின் பாதுகாப்பு பொறிமுறை, அதற்கெதிரான பதார்த்தங்களை (Antibody) உற்பத்தி செய்ய ஆரம்பித்து விடும். இவ்வாறு உற்பத்தியான அன்டிபொடிகள் நோய்த் தொற்றுக்கு எதிரான தாக்குதல்கள் முடிந்த பின்னர், தமது சொந்த உடல் உறுப்புக்களையும் அதையொத்த வைரஸ் அன்டிஜன் என்று நினைத்து  தாக்குதல் நடத்த ஆரம்பிப்பதால் ஏற்படும் விளைவுதான் இந்த MIS-C

சில குழந்தைகளில் கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருந்தாலும் நோயின் எந்தவொரு அறிகுறிகளையும் வெளிக்காட்டாத நிலையில் சில  வாரங்களின் பின், பல உடல் உறுப்பு அழற்சி நிலையினால் (MIS-C)  நேரடியாக பாதிக்கப்படலாம் என்பது தான் இங்கே உள்ள திருப்பம் .

ஆகவே, MIS-C அறிகுறிகளை பெற்றோர்களும், ஏனைய சுகாதார பணியாளர்களும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. இது நோயை  ஆரம்ப நிலையில் கண்டறிய உதவி புரியும். அது போல தீவிர நோய் முற்றிய நிலைக்கு முன்னர் உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள உதவி புரியும்.

அதிக காய்ச்சல், கடுமையான வயிற்றுவலி, வயிற்றோட்டம், கழுத்துவலி, தோலில் ஏற்படும் மாற்றங்கள், இரண்டுகண்களும் சிவத்தல், வழக்கத்திற்கு மாறாக உடல் சோர்வு மற்றும் களைப்பு ஏற்படல் போன்றன ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

அது போல கீழ்வரும் நோய் அறிகுறிகள் அதிதீவிர நிலைக்கான எச்சரிக்கைகளாக இருக்கின்றன.
சுவாசிப்பதில் சிரமம் ,மார்புப் பகுதியில் இறுக்கும் உணர்வு, நித்திரையில் இருந்து விழிக்க முடியாமை, அல்லது தொடர்ந்து விழிப்பாகவிருக்க இயலாமை, வெளிறிய தோல்,கடுமையான வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மிகவும் அவதானம் அவசியம்.

ஏனெனில் காலம் தாமதிக்க தாமதிக்க இது மிகத் தீவிரமான ஒரு நோய் நிலையாக மாறும். ஐ.சி.யூ அவசர சிகிச்சை தேவைப்படும். இறுதியில் Multi organ dysfunction (MOD) எனும் உடற் தொழிற்பாடுகள் மெதுவாக செயலிழந்து உயிராபத்து ஏற்படும் நிலை உருவாகும்.

ஆகவே, இது போன்ற மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

தாமதிக்கக் கூடாது. கொவிட் இற்கு பிந்திய காலகட்டத்திலும் விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலமே நாம் எங்கள் பாதுகாப்பையும், எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். இவ்வாறு விளக்கம் தருகின்றார் சிறுவர் நல வைத்திய நிபுணர் அர்சாத் அஹமட்.

றிசாத் ஏ. காதர்
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)