“கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்”

நற்செய்தியின் வழியாக கொடுப்பவர்களுக்குக் கடவுள் தவறாது கைம்மாறு பரிசு தருவார் என்ற உண்மையை ஆணித்தரமாக இயேசு நமக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கற்பித்தார்.

மீட்பின் வரலாற்றிலே கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் கடவுள் தவறாது ஆசீர்வதித்திருக்கின்றார்.

ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் கொஞ்சி விளையாட பிஞ்சு மழலை ஒன்று அந்த வீட்டில் பிறக்கவில்லை .

ஒரு நாள் கவலையால் கலங்கி நின்ற ஆபிரகாம் மூன்று மனிதர்களைக் கண்டார். கூடாரத்தை விட்டு வெளியே சென்று அந்த மூன்று மனிதர்களையும் கூடாரத்திற்கு அழைத்து வந்தார். அவர்களது களைப்பு நீங்க அவர்களுக்கு விருந்து படைத்தார். அந்த மனிதர்கள் மூவரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள். தங்கள் மீது அன்பைப் பொழிந்த ஆபிரகாமைப் பார்த்து ஆண் ட வரால் ஆகாதது எதுவும் உண்டோ? சாராவுக்கு ஒரு மகன் பிறப்பான் என்றார்கள். கடவுளால் வாக்களிக்கப்பட்ட படியே ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஈசாக்கு பிறந்தார் (தொநூ 21:1-8).

ஆம். கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும்..

1 அர 17:8-16 : ஊரெல்லாம் நாடெல்லாம் பஞ்சம் . அப்போது இறைவாக்கினர் எலியா ஒரு கைம்பெண்ணிடம் கொஞ்சம் அப்பமும் தண்ணீரும் கேட்டார். அந்தக் கைம்பெண்ணோ வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை. என்னிடம் அப்பம் ஏதும் இல்லை : பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே உள்ளன.

இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு நானும் என் மகனும் சாப்பிடுவோம்.

அதன்பின் சாகத்தான் வேண்டும் என்றாள். ஆனால் எலியாவோ கொடு, உனக்குக் கொடுக்கப்படும் என்றார். அவள் கொடுத்தாள். பானையிலிருந்த மாவும் தீரவில்லை. கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை. ஆம், கொடுப்பவர்களுக்குக் கொடுக்கப்படும். (1அர.17:8-16)

கானாவூர் திருமண வீட்டார் இயேசுவிடம் தண்ணீரைக் கொடுத்தார்கள். அவர்களுக்குத் திராட்சை இரசம் கிடைத்தது. (யோவான் 6:1-13)

கூட்டத்திலிருந்த சிறுவன் ஒருவன் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தான். கூட்டத்திலிருந்த எல்லோருக்கும் உணவு கிடைத்தது. ஆம். கொடுப்பவர்களுக்கு கொடுக்கப்படும். கொடுக்கப்படாதவை அனைத்தும் அழிந்து போகும்; அழிந்து போனவை கொடுக்காதவர்களின் உயிருக்கு உலை வைக்கும். நமது கடவுள் எடுக்கின்ற கடவுள் அல்ல; கொடுக்கின்ற கடவுள். தனது ஒரே மகனையே உலகுக்குக் கொடுத்தவர் நம் கடவுள். (யோவா 3:16).

தமது ஆவியை அனைவர் மீதும் பொழிந்தவர் நம் கடவுள். சுயநலவாதிக்கும் சொர்க்கத்திற்கும் எந்தசம்பந்தமும்கிடையாது.

“கொடுப்பதூம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடிஉண் டாயினும் இல்” (குறள் : 1005).

பிறருக்கு வழங்கவும் தாம் நுகர்வதும் ஆகிய செல்வத்தின் இரு பயன்பாடும் இல்லாதவரிடம் கோடிக்கணக்கில் பொருள் குவிந்திருந்தாலும் அவை செல்வமாக மதிக்கப்படாமல் போகும்.

ஆயர் பேரருட்திரு
எப்.அந்தோனிசாமி