கொரோனா பேரிடர்: அலட்சிய போக்கே ஆபத்துக்கு வழிவகுக்கும்

கொரோனா பேரிடர்: அலட்சிய போக்கே ஆபத்துக்கு வழிவகுக்கும்-COVID Pandemic-Levity Will Destroy Everything

இன்று நாடு திறக்கப்பட்ட சூழலில் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களு எவ்வாறு செயற்பட வேண்டும் தொடர்பில், சமூக செயற்பாட்டாளரும் இளம் துடிப்புள்ள அரசியல்வாதியும் பஸ்லான் பாரூக் பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் பஸ்லான் பாரூக், தினகரன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி...

கேள்வி: கொரோனாவுடன் புதிய இயல்பு வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட உலக நாடுகளுடன் நமது நாடும் பயணிக்க தகைமை இருக்கிறதா?

பதில்: ஏன் இல்லை. நிச்சயமாக இருக்கிறது. சரியான உத்திகளைக் கையாண்டு செயற்படுதல் வேண்டும். இது மக்கள் கையில் தான் இருக்கின்றது. கொரோனா பற்றிய சுகாதாரக் கல்வியை சரியான முறையில் படித்துக் கொள்ள வேண்டும். அதனை அலட்சியம் செய்யக்கூடாது. அரைகுறையாக படித்தால் தவறுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ஆனால் சரியான முறையில் நேர்த்தியுடன் சுகாதர முறைப்படி இந்நாட்டிலுள்ள எல்லா மக்களும் பொறுப்புணர்வுடன் நடப்பார்களாயின் புதிய மாற்றங்களை உள்வாங்கி உலக நாடுகளைப் போன்று செயற்பட முடியும்.உலக நாடுகள் அந்தச் சவாலைப் போட்டித் தன்மையுடன் ஏற்று வெற்றி நிலையை அடைந்துள்ளனர்.

துரதிருஷ்டவசமாக பல உயிர்களைப் பறிகொடுத்தாலும் இன்று கடினமான காலகட்டத்தை தாண்டி ஓர் உயிரிழப்பில்லாமல் சகல அன்றாட வாழ்க்கையினையும் கொரோனாவுக்கு அச்சமின்றி புத்தெழிச்சியுடன் ஒரு நம்பிக்கை கீற்றாக இயங்க பலர் ஆரம்பித்து விட்டனர். எமது நிலையும் அதே.

எனினும் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஏதோ ஒரு வகையில் முன்னணியில் இக்கின்றோமோ என்ற சந்தேக நிலைமை இருக்கிறது. எமது நாட்டை விட பின்தங்கிய நாடுகள் கூட சரியான முறையில் முகாமைத்துவப்படுத்தி சீர் செய்து கொண்டார்கள். இந்த கொரோனா விடயத்தில் இன்னும் அலட்சியமாக இருப்பது வேதனைக்குரியது.

இறுதியாக ஜுன் மாத கால கட்டத்தில் நாட்டை முடக்கி மீண்டும் திறந்தார்கள். அவ்வாறு திறந்து ஒரு 40 நாட்களுக்குள் மீண்டும் ஒரு 41 நாள் நாடு முழுக்க முடக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டோம். இதற்கு பெரும்பாலும் மக்களுடைய அலட்சியம் தான் முக்கிய காரணம்.

கேள்வி: பொது மக்களின் அலட்சியமான நிலை அவர்களுக்கே ஆபத்தாக வந்தமையாதா?

பதில்: நிச்சயமாக நடக்கலாம். இன்று நாட்டை திறக்கும் பட்சத்தில் மீளத் திரும்பவும் அரசு கொரோனா சுகாதார வழிகாட்டலை கடுமையாகப் பின்பற்றுதல் அவசியம். இவற்றில் கவனம் செலுத்தவில்லை எனில் மீளத் திரும்பவும் நாட்டை முடக்கும் நிலைக்குச் செல்லலாம். அவ்வாறு சென்றால் அதனால் ஏற்படும் பாதிப்பு மிகப் பெரியளவில் இருக்கும். கடந்த காலங்களை விட மிகவும் ஆபத்தானதாகவும் மிகப் பயங்கரமானதாகவும் அமையலாம்

ஏனென்றால் இப்போது வியாபாரத் துறையைப் பொறுத்தவரையில் இதற்குப் பின்னர் மீண்டும் முறை ஒரு முடக்க நிலையை எதிர்நோக்கினால் சிறியளவிலான வர்த்தகர்களும் மத்திய தர வர்த்தகர்களும் பாரியளவில் பாதிக்கப்படுவார்கள். ஒன்றரை வருட காலத்தில் அவர்கள் ஒரு பொருளாதார சவாலுக்கு முகம் கொடுத்து தப்பி இருக்கின்றார்கள்.இதற்குப் பின்னர் நமது நாடு முடக்கப்படுமாயின் அவர்கள் எழும்ப முடியாமல் விழுந்து விடுவார்கள் என்பது தெட்டத் தெளிவான உண்மையாகும்.

ஒரு வியாபாரி விழுந்து விட்டால் பல குடும்பம் விழுந்தமைக்குச் சமன். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் நாடு மீண்டும் முடக்கப்பட்டால் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளின் அன்றாட வாழ்க்கை நிலைமை மேலும் மோசமடையும் அறிகுறிகள் அதிகரித்து காணப்படுகின்றன. அவர்களுடைய பொருளாதர நிலைமையானது ஒரு நிச்சமயற்ற தன்மையே காணப்படுகிறது.

கொரோனா சுகாதார வழிமுறைகள் இருக்கிறது. ஆனால் மக்கள் அதனை மீறி நடக்கின்றனர். இது நாட்டு மக்களுக்கான நல்லதொரு ஆரோக்கியமான சூழல்ல.

முடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இனிமேலும் முடக்க நிலைக்கு உள்ளாக முடியாத என்ற மனோ நிலையில் வெளியே இறங்கி மக்கள் உளாவித் திரிவதை நாம் இதற்கு முன்னர் அவதானித்துள்ளோம்.அவர்கள் கொரோனா சுகாதார விதிமுறைகளை பின்பற்றியதாக தெரியவில்லை. அதனால் மக்கள் சுகாதார விதி முறைகளைசரியாகப் பேணி நடப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ் விடயத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் நாட்டைப் பாதுகாப்பதோடு எமது குடும்பத்தையும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ள வியாபாரிகளையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும்.

இந்த கொரோனாவால் எத்தனையோ பிரபல்யமான சமூகப் பணியாளர்கள், துறைசாந்த வள்ளுனர்கள், வைத்தியர் என நாங்கள் பல பேரை இழுந்து விட்டோம். விலை மதிக்க முடியாத பெரும் பொக்கிசங்களை இழந்து விட்டு நிற்கின்றோம். எத்தனையோ வைத்தியர்கள் தங்களுடைய உயிர்களை தியாகம் செய்து விட்டார்கள். அவர்கள் இந்த நோயாளிகளைப் பாதுகாப்பதற்காகத்தான் தம் உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள்.

இன்று சுகாதாரப் பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர் விடுமுறையின்றி நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க பணி செய்து கொண்டிருக்கின்றார்கள்.இவர்கள் குடும்பத்தை விட்டுப்பிரிந்து உயிரையும் பயணம் வைத்து மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக அரச கடமைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்த காலத்தில் பொது மக்கள் அலட்சியமாக செயற்படக் கூடாது.இதனால் நாட்டுக்கொரு ஆரோக்கியமான சூழல் உருவாகாது.

நாம் எமது பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் தன்னுடைய பொறுப்பு என்ன என்பதை உணர வேண்டும். இந்த நோயில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தன்னில் இருந்து அடுத்தவர்களுக்கு காவிச் செல்லாமல் சுகாதார வழிமுறைகளை கடைபிடிப்பார்களாயின் எதிர்வரும் காலங்களில் நாட்டை முடக்க வேண்டிய அவசியமிருக்காது.நாட்டில் அநேகமானோர் இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளனர். தற்போது சாதாரண இயல்பு நிலைமை வந்து விட்டது. பாடசாலைகள் திறப்பதற்கான ஆயத்தங்களும் உள்ளன. நோய் வந்து வலுவிழந்து விட்டது என்று மட்டும் கருதி விட முடியாது. இது பற்றி மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.நோயுடன் சாதாரண வாழ்க்கை நிலைக்கு வர வேண்டுமே தவிர இந்த நோய் இல்லாமற் போய் விட்டது என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது.

அலட்சியமாக நாம் செயற்பட முனைவோமாயின் பாரிய விளைவுகளுக்கு நாம் முகம் கொடுக்க நேரிடலாம்.

சில உலக நாடுகளில் முகக் கவசங்கள் அணியாமல் வெளியே செல்வதற்கான நிலைமை தற்போது ஏட்பட்டுள்ளது. இத்தகைய இயல்பு நிலைமைக்கு அவர்கள் திரும்பியுள்ளார்கள். இது தானாக நடக்கவில்லை. அந் நாட்டின் சுகாதார சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நாட்டு மக்கள் கட்டுப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுமிக்கவர்களாக நடந்து கொண்டார்கள.இது தான் பிரதான காரணம் ஆகும்.

கேள்வி: தற்போதைய சூழலில் வியாபாரிகளது உண்மையான நிலைமை தொடர்பில்?

பதில்: வியாபாரிகளின் நிலமை மிக மோசமானதாக இருக்கிறது. சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு யாருமே கைகொடுத்து உதவும் நிலைமை இல்லை. அவர்களுடைய சேமிப்பிலும் பணம் இல்லை. அரசாங்கத்தினால் வழங்கப்படும் சலுகைகள் எல்லாம் மிக குறைவாகவே இருக்கிறது. மொத்த வியாபாரிகள் கூட அவர்களுக்கு கடன் சலுகைகள் வழங்கத் தயார் இல்லை.

உடன் கைப்பணம் வழங்கினால் மட்டும்தான் பொருட்களை கொள்முதல் செய்ய முடியும்.

அவர்கள் இலாபத்தை செலவு செய்வதை விட முதலீட்டையே செலவு செய்கின்றனர்.இவர்கள் தொடர்பில் அரசாங்கம் கரிசனை காட்ட வேண்டும்.அவர்களுக்கு ஊக்குவிப்பு உதவிகளைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அரசாங்கம் முன்வருதல் வேண்டும்.வியாபார சங்கங்களும் இது தொடர்பில் கவனம் செலுத்துவதில் குறைபாடுகள் உள்ளன.

கேள்வி: கொரோனாவில் பாதுகாப்பு பெற நீங்கள் முன் வைக்கின்ற ஆலோசனைகள்?

பதில்: ஓவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய சமய ஸ்தலங்களில் சுகாதார விடயத்தில் கரிசனை செலுத்த வேண்டும்.எல்லா மத ஸ்தலங்களில் இன்றைய சூழலை மையமாக வைத்து பிரசாரம் இடம்பெற வேண்டும். காலத்திற்கு தேவையான அறிவூட்டல்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் கிராமத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இவற்றை சுகாதாரப் பிரிவினர்களுக்கு மட்டும் பொறுப்பென விட்டு விட கூடாது. பொதுவாக ஒரு சுகாதாரப் பிரிவில் குறைந்தளவிலான சுகாதார ஊழியர்களே உள்ளனர். அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்ட எல்லை பெரிய பரப்பளவை கொண்டவை. அதை முழுமையாக கண்காணிப்பதில் சிரமங்கள் இருப்பதன் காரணமாக ஒவ்வொரு ஊரிலுள்ள மத ஸ்தலங்கள் இவர்களுடன் சேர்ந்து ஊரைப் பாதுகாப்பதிலும் கண்காணிப்பதிலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். ஒவ்வொரு மத ஸ்தலங்களிலும் கொவிட் பாதுகாப்பு செயலணி ஒன்றை உருவாக்கி அப்பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அலுவலத்துடன் இணைந்து இயங்குவார்களாயின் ஊர் கண்காணிக்கப்படும்.கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இருப்பார்களாயின் அவரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலாம்

தற்போதைய சூழலில் யாரும் யாரையும் அடையாளம் காணப் போவதில்லை. ஒருவர் ஊருக்குள் இருந்தால் அவர் பலபேருடன் பேசிப் பழகி எல்லோருக்கும் பரப்பி விட்டு பின்னரே அவர் சுய தனிமைப்படுத்தலுக்குச் அனுப்பி வைக்கப்படுவார்.

ஓவ்வொரு தனிமனிதனுடைய கவனயீனமும் மீளவும் நாட்டை முடக்கும் நிலைமைக்கு ஆளாக்கக் கூடாது.

கேள்வி: கொரோனா கால கட்டத்தில் பஸ்லான் பாரூக் பவுண்டேசனின் பணிகள் தொடர்பாக?

பதில்: பஸ்லான் பாரூக் பவுண்டேசன் அமைப்பின் ஊடாக நிறைய உலருணவுப் பொதிகள் வழங்கியுள்ளேன். ஆரம்ப காலத்தில் நிறைய நிறுவனங்கள் உலருணவுப் பொதிகள் வழங்கியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதில் பல நிறுவனங்கள், தனிநபர்கள் ஈடுபட்டார்கள் முதலாவது அலை இரண்டாவது அலை மூன்றாவது அலை இறுதியாக நான்காவது அலை என வரும் போது குறைந்தளவிலான சமூகப் பணியாளர்களே களத்தில் தொண்டுப் பணிகளை ஆற்றக் கூடியதாக இருந்தது.

ஆரம்பத்தில் நிறைய அமைப்புக்கள் முன்வந்து மனிதாபிமான உதவிகள் செய்தார்கள். ஆனால் இம்முறை நாடு முடக்கப்பட்ட கால கட்டத்தில் உலருணப் பொதிகள் பகிர்ந்தளிப்பதற்கு பொருளாதார நெருக்கடி நிலைமை காணப்பட்டதால் சில அமைப்புக்கள் மௌனம் சாதித்தார்கள். இப்படியான நிலை தொடர்ந்து நீடிக்குமாயின் அடுத்த முறை சமூகப் பணி செய்வதற்கோ அல்லது கொடைகளை அள்ளிக் கொடுப்பதற்கோ நாட்டில் ஆட்கள் இல்லாமற் போய் விடும் என்ற ஒரு ஆபத்தான் நிலை இருக்கிறது.

எனவே மீளவும் ஒரு முடக்க நிலைக்குச் செல்லாமல் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கடந்த கொரோனா காலங்களில் நாங்கள் அனுபவித்த துயரங்களை உணர்ந்து கொள்ள வேண்டும்.

என்னுடைய அமைப்பின் ஊடாக இயன்றளவு இம்முறை கண்டி மாவட்ட முழுவதிலும் உலருணப் பொதிகள் வழங்கி வைப்பதற்குப் பங்களிப்புச் செய்துள்ளேன்.

இந்த உலருணவுப் பொதிகள் சிங்கள, தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ என அனைத்து மக்களுக்கும் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேள்வி: இன்று முதலாம் திகதி நாடு திறக்கப்படுவது தொடர்பில் உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: கட்டாயம் நாடு திறக்கப்பட வேண்டும்.ஆனால் கொரோனா அழிந்து விட்டது என்ற நோக்கத்தில் அல்ல. இந்த நோயுடன் தான் வாழப் போகின்றோம். இந்த நோயுடன் நமது அன்றாட வாழ்க்கையை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றி தற்போதைக்கு ஒரு குடும்பத் தலைவன் முன்னெச்சரிக்கையுடன் சிந்தித்து செயற்படக் கூடிய ஒரு காலட்டமாக பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு குடும்பத் தலைவன் கொரோனாவில் இருந்து தன்னுடைய குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை தன் கையில் எடுத்தல் வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடப்பாடு இருக்கிறது. அதனையும் மீறி தற்போதைய இக்கெட்டான சூழ்நிலையில் சற்று அலட்சியமாக நடப்பாராயின் முழு நாட்டையும் முடக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்படும். அவ்வாறு மீண்டும் இந்த நாட்டை முடக்குவது என்பது ஏழைகளின் ஒரு ஜீவ மரணப் போராட்டமாகத் தான் இருக்கும். ஒரு துன்பம் நிறைந்த வாழ்க்கையாகத் தான் சந்திக்க நேரிடும்.

நாடு மீளவும் முடக்குவதற்கு இடமளிக்கக் கூடாது. அத்துடன் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில் நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையும் கரிசனை காட்ட வேண்டும்.நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இந்நாட்டில் சகல இன மக்களுடைய கூட்டுப் பொறுப்பாகும். இதற்கான உறுதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

கேள்வி: எவ்வாறான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என நீங்கள் நினைகிறீர்கள்?

பதில்: அன்றாட வாழ்வில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினை அமைத்துக் கொள்ள முடியும். இதனை ஒவ்வொரு தனி மனிதனும் பொறுப்பாக எடுத்து நடத்தல் வேண்டும்.மக்களின் அலட்சியப் போக்கை இல்லாமற் செய்வதற்கான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் அடிக்கடி நடத்தப்படல் வேண்டும். ஊரிலுள்ள சிவில் அமைப்புக்கள், பெரியார்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.தனிமைப்படுத்தல் சட்டம் இருந்த சந்தர்ப்பத்தில் சில மதுபான சாலைகளுக்கு முன்னால் சனம் அலை மோதியது. அந்த நிலைமை வந்திடாமல் முன்னெச்சிரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியைப் பேணி நடக்க வேண்டும்.கடுமையான சட்டநடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

கேள்வி: உங்கள் அமைப்பின் ஊடாக வேறு சமூகப் பணிகள் செய்கின்றீர்கள்?

பதில்: கல்வியினால் மட்டும் தான் சமூகத்தின் முன்னேற்றமும் சமூக மாற்றங்களைக் கொண்டு வர முடியும். கல்வி பற்றிய முயற்சிகளுக்குத்தான் எப்பொழுமே முன்னுரிமைக கொடுக்கப்படல வேண்டும் என்ற கொள்கையுடன் செயற்பட்டு வருகின்றேன.அந்த அடிப்படையில் அதிகளவு கரிசனை செலுத்தி கல்விப் பணி செய்கின்றோம். இப்பணி பரந்து பட்டது, ஒவ்வொரு வருடமும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வலுவூட்டல்கள் பல தரப்பட்ட சேவைகளை செய்து வருகின்றேன்.

யுவதிகள் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி முறைகளை வெற்றிகரமான முன்னெடுத்து வருகின்றோம்.

கொரோனா வலுவிழந்து விட்டது என்று மட்டும் கருதி விட முடியாது. கொரோனாவுடன் சாதாரண வாழ்க்கை நிலைக்கு வர வேண்டுமே தவிர இந்த நோய் இல்லாமற் போய் விட்டது என்று அலட்சியமாக இருந்து விடக் கூடாது.

நேர்காணல்
இக்பால் அலி