வெள்ளைப்பூடு மோசடி; CID யினர் ஊடகவியலாளர்களை அழைத்தமை தொடர்பில் விசாரிக்க உத்தரவு

வெள்ளைப்பூடு மோசடி; CID யினர் ஊடகவியலாளர்களை அழைத்தமை தொடர்பில் விசாரிக்க உத்தரவு-Garlic scam-Sarath Weerasekera Orders IGP to Inquire Into the-CID Questioned Media Persons Despite Instructions

- வெள்ளைப்பூடு விசாரணையை CID யிடம் ஒப்படைக்கவும் பணிப்பு

வெள்ளைப்பூடு மோசடி செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களிடம் விசாரணை செய்ய வேண்டாமென அறிவித்த போதிலும் CID அதிகாரிகள் அவ்வாறு செயற்படாமை குறித்து விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்களை விசாரிக்க வேண்டாமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அவ்வாறு செயற்படாமை தொடர்பில் உடனடியாக விசாரணை செய்யுமாறு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெள்ளைப்பூடு சம்பவம் தொடர்பில் பேலியகொடை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை, CID யிடம் ஒப்படைத்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், அமைச்சர் பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ச.தொ.ச வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்க மேற்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியிருந்தார் என்பதுடன், இது தொடர்பில் தொடர்பில் கவலை அடைவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்  ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அளகப்பெரும தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.