கொவிட் தொற்றுக்குள்ளானோருக்கு இதுவரை வெற்றிகரமான சிகிச்சை

கொவிட் தொற்றுக்குள்ளானோருக்கு இதுவரை வெற்றிகரமான சிகிச்சை-Successful Treatment to the COVID19 Patients

கொவிட் தொற்றுக்குள்ளானோருக்கு இதுவரை வெற்றிகரமான சிகிச்சை-Successful Treatment to the COVID19 Patients

'ஆயுர்வேத வைத்தியசாலையில் எவ்வாறு கொவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முடியும்? இந்த சிகிச்சை எமக்கு எப்படி அமையப் போகின்றதோ என்ற அச்சத்துடனேயே அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலைக்குள் நுழைந்தேன்' என அக்கரைப்பற்றைச் சேர்ந்த 60 வயதான எஸ்.எம். யூசுப் தெரிவித்தார்.

கடந்த 2021.07.16 அன்று கொவிட் - 19 தொற்றுக்குள்ளான யூசுப், மேலதிக சிகிச்சைகளுக்காக அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் செயற்படும் இடைத்தங்கல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

'14 நாட்கள் சிகிச்சை நிலையத்தில் இருந்த போது ஏற்பட்ட சந்தோசம் எனது வாழ்வில் மறக்க முடியாதது. இந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்களின் அன்பான உரையாடல், உணவு முறைமை உட்பட அனைத்தும் சிறப்பாக அமைந்தது' என அவர் குறிப்பிட்டார்.

இவர் போன்று அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் கொவிட் - 19 இற்காக சிகிச்சை பெற்ற பலர் மிகத் திருப்பியுடனேயே வீடு திரும்பினர். அது மாத்திரமல்லாமல் அவர்கள் வைத்தியசாலையின் சேவையை நற்சான்றிதழாக எழுதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனினும் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொவிட் 19 இற்கு வழங்கப்படும் சிகிச்சைகள் தொடர்பில் பல்வேறு போலிப் பிரசாரங்கள் சமூகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஆயுர்வேத மருந்துகள் உட்கொள்வதால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், இந்த மருந்துகளில் நேரடியாக கனிமங்கள், இரசாயனங்கள் சேர்க்கப்படுவதாகவும் தகவல்கள் பரிமாற்றப்படுகின்றன.

கொவிட் தொற்றுக்குள்ளானோருக்கு இதுவரை வெற்றிகரமான சிகிச்சை-Successful Treatment to the COVID19 Patients

எவ்வாறாயினும் கி.மு 600ஆம் ஆண்டில் இந்தியாவில் தோன்றிய மிகப் பழைமையான மருத்துவ முறையே ஆயுர்வேதமாகும். நோய்கள் பரவுவதை தடுப்பதோடு குணப்படுத்தவும் இந்த மருத்துவ முறையினால் முடிகின்றது.

கடந்த வருடம் கொரோனா வைரஸ் எமது நாட்டில் மிக வேகமாக பரவத் தொடங்கியது. இந்த நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான உதவியை ஆயுர்வேத மருத்துவத்தின் ஊடாகவும் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட கொவிட் செயலணியும், ஆயுர்வேத மருத்துவ முறைக்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்தது.

இந்த நிலையில் கொவிட் 19 இன் மூன்றாவது அலையின் போது கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அதிகரித்தமையினால் பல வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் சுகாதார அமைச்சு பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியது.

இதனால் நாட்டிலுள்ள பல ஆயுர்வேத வைத்தியசாலைகள், கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த எஸ்.எம். யூசுப் சிகிச்சை பெற்ற அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை உட்பட மூன்று ஆயுர்வேத தள வைத்தியசாலைகள் கடந்த 2021.06.16 ஆம் திகதி முதல் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் இடைத்தங்கல் பராமரிப்பு நிலையங்களாக செயற்பட்டு வருகின்றன.

'கொவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு ஆங்கில மருத்துவ முறைகளுடன் இணைந்ததாக ஆயுர்வேத மருத்துவ முறைகளும் இங்கு பயன்படுத்தப்படுகின்றன' என அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையின் இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி டொக்டர் ஐ.எல்.அப்துல் ஹை தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, நிந்தவூர் தள வைத்தியசாலைகளின் வைத்திய நிபுணர்கள் மற்றும் அட்டாளைச்சேனை மற்றும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலைகளின் வைத்தியர்களின் பங்களிப்புடனும், அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை வைத்தியர்களின் பங்களிப்புடன் இந்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் செயற்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை கொவிட் -19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமாக மாற்றப்பட்ட மூன்று மாத காலப் பகுதிக்குள் இதுவரை 440 தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் எவ்வித உயிரிழப்புகளும் இந்த நிலையத்தில் ஏற்படவில்லை என்று டொக்டர் ஐ.எல்.அப்துல் ஹை கூறினார்.

'கொவிட் -19 தொற்றாளர்களுக்கென்று தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைவாக செயற்படுவதுடன், ஆயுர்வேத நோயெதிர்ப்பு பானம், குடிச்சாதி கசாயம் மற்றும் சுதர்ஷன சூரணம் போன்ற பல மருந்து வகைகள் இந்த தடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தில் வழங்கப்படுகின்றன' என அவர் குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தின் முல்லேரிய மற்றும் மீகமுவ போன்ற பிரதேசங்களை உட்பட நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்ததவர்கள் இந்த இடைத்தங்கல் முகாமில் கொவிட் - 19 இற்காக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, எந்த மருத்துவ முறைமைகள் பற்றி நாம் பேசிக் கொண்டாலும் தடுப்பூசி என்பது கொவிட் - 19 நோய்க்கு மிக முக்கியமாகும் என டொக்டர் ஐ.எல்.அப்துல் ஹை தெரிவித்தார்.

அதுவே கொவிட் -19இல் இருந்து நம் ஒவ்வொருவரையும் பாதுகாக்க மிகச் சிறப்பான தடுப்புமுறைமையாகும். இதனால் எமது இடைத்தங்கல் முகாமில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் அனைவருக்கும் தடுப்பூசியின் அவசியம் தொடர்பில் தெளிவூட்டப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கொவிட் - 19 இனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுதேச ஒளடதங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. இதற்கமைய, ஆயுர்வேத திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத பானங்கள் நாடளாவிய ரீதியில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக 6,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் உள்ளடக்கியதாக சுதேச நோய் எதிர்ப்புச் சக்தி ஒளடதங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு ஊக்கி மூலிகைக் கஞ்சி வழங்குவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், சுதேச ஒளடதங்களுக்கு, சர்வதேச ரீதியில் பெரும் கேள்வி நிலவுவதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சுதேச மருந்துப் பொதி தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் சுதேச மருத்துவ செயலணியின் உறுப்பினரும், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் ஒருங்கிணைப்பாளருமான டொக்டர் எம்.ஏ.நபீல் கருத்துத் தெரிவிக்கையில்,

"கொரோன தொற்றின் காலத்தில் ஆயுர்வேத மருத்துவ முறைமை மீதான நம்பிக்கையையும் குணப்படுத்தும் வீரியத்தினையும் பொதுமக்கள் கண்டுகொண்டனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மருந்துப் பானங்களை உற்பத்தி செய்தோம். அதன் பயன் மக்களிடத்தில் அதிக செல்வாக்கு செலுத்தியதனால் இன்னும் அந்த பானங்களை உற்பத்தி செய்து வருகின்றோம்.

150,000க்கு அதிகமான மருந்துப் பானப் பொதிகளை இந்த பிராந்தியத்தில் வழங்கியுள்ளோம். இன்னும் அதிகளவான மருந்துப் பொதிகள் அக்கரைப்பற்று யூனானி மருந்து உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படுகின்றன" என்றார்.

இதேவேளை, ஆயுர்வேத மருத்துவ முறைமைகளினால் உடலிலுள்ள உறுப்புகள் செயலிழப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது எனத் தெரிவித்த டொக்டர் நபீல், "எதனையும் அளவோடு மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று பயன்படுத்தினால் அது நிச்சயம் ஆரோக்கியமாக அமையும்" என்றார்.

கல்முனை சுகாதார பிராந்தியத்தில் வழங்கப்பட்ட ஆயுர்வேத நோயெதிர்ப்பு பாணிகளின் விபரம்:

கல்முனை பிரதேச செயலக எல்லை-6000, கல்முனை பிரதேச சுகாதார சேவை அதிகார எல்லை -5000, அரச அலுவலகங்கள்-50000, பொலிஸார் -5000, கடற்படையினர் (தென் கிழக்கு கட்டளை முகாம்)-6000, இராணுவம் -2500, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு -14000, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு-26000, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு -12000, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு -8000, வளத்தாப்பிட்டி-1500, இறக்காமம் -1500, சம்மாந்துறை -6000, விசேடமாக (சுய தனிமைப்படுத்தல்களில், சிகிச்சை நிலையங்களுக்கு) - 6000.

றிஷாத் ஏ காதர்
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)