பாரதியின் வீரியமிக்க எழுத்தும் யாரும் சொல்லாத பெண்ணிய கருத்துக்களும்

காலம் காலமாக சமூகத்தின் அடக்குமுறைகளை பல்வேறு வகையில் எதிர்கொண்டவள் பெண். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் அந்த அடிமைப்படுத்தல் அமைந்தது. இவற்றிலிருந்து மாற்றுச்சிந்தனை மேற்கத்தேய சிந்தனை வருகையுடன் தமிழ் மண்ணிலும் எழத்தொடங்கியிருந்தது.

பெண்களை அடக்கும் பெண்களும் உண்டு, ஆண்களும் உண்டு . அதேபோன்றுதான் பெண்ணை அவள்வழியில் அவளுக்கானதை அடைந்து வாழவிடவும் ஆண்கள் இருந்தனர். அதன் வழியே சாதாரண நிலையில் இருந்து அதிதீவிரமாக பெண்ணுக்காய் குரல்கொடுத்தவர் பாரதி. அவர் வாழ்ந்த காலத்தில் பலரும் குரல் எழுப்பதொடங்கயிருந்தாலும் பாரதியின் குரல் மேலோங்கியிருந்தது.

நவீன தமிழிலக்கியம் மலரத்தொடங்கிய போது அதன் முக்கிய கருப்பொருள்களில் ஒன்றாகப் பெண், அவள்சார்ந்த துன்பியல் அமைந்தன.பெண்ணுக்கான சமூக அந்தஸ்து, உரிமை, சமூகத்தில் பெண்கள் பங்கு என வெவ்வேறு வகையில் பெண்கள் தொடர்பான கருப்பொருள் இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டன. இவ்வாறு பெண்கள் குறித்து செறிவாகவும் பிரக்ஞையுடனும் தமிழ் எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கியது மேலைத்தேய சிந்தனை வருகையுடன் கூடிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலிருந்தாகும்.

பெண் விடுதலை தனிநபர் சுதந்திரம் என்ற வகையில் மட்டுமன்றி சமூக விடுதலையின் ஒரு முக்கியமான படி என்ற கருத்து

பாரதியின் பெண் விடுதலை தொடர்பான கவிதைகள், கட்டுரைகள், கதைகளின் வழியே பிரகாசிக்க தொடங்கியது. பாரதியின் வீரியமிக்க எழுத்தும் நேரடியாகவே விடயத்தை எடுத்தியம்பும் பாணியும் இது வரையும் யாரும் சொல்லாத பெண்ணிய கருத்துக்களும் மற்றைய எழுத்தாளர்களை விடவும் பாரதியின் எழுத்து முன்னுரிமை பெறுவதற்கு காரணமாய் அமைந்து .

மண்ணுலகில் உள்ள உயிர்கள் எல்லாம் கடவுள் என்றால் பெண்ணும் தெய்வம் அல்லவா? என்று கேட்டு அவளைத் தெய்வமாக மதிக்க வேண்டும் என்று கடவுளுக்கு சமமாக பெண்ணை இருத்தி உலகில் யாவரும் சமம் என்றார்.

கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றிருந்தார். அங்கு நிவேதிதா தேவியை சந்தித்தார். பாரதியாரிடம், Òஉன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லைÓ என்று கேட்டாராம் நிவேதிதா. அதற்குப் பாரதியார், Òஇன்னும் மனைவியைச் சமமாகப் பாவித்துப் பொது இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் எங்களிடையே ஏற்படவில்லை, தவிர காங்கிரசுக்கு என் மனைவியை அழைத்து வருவதால் பயன் என்ன?Ó என்று கூறினாராம். பாரதியாரின் பதிலைக் கேட்ட நிவேதிதாதேவி மிகுந்த கோபம் கொண்டு, Òபெண்களுக்குச் சம உரிமையும், தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால் சமூகம் எப்படிச் சீர்திருத்தம் பெறும், மனைவியை உன் வலது கை என மதித்து வாÓ என்று உபதேசம் செய்தாராம். பாரதி வாழ்க்கைச் சித்திரத்தில் இந்த உரையாடலை காணலாம். இந்த சம்பவம் பாரதியின் சிந்தனையை மேலும் கிளறியது. பெண் விடுதலை, பெண்ணுக்குச் சம உரிமை என்னும் பொருள் பற்றி, பாரதியார் சிந்தனைகள் எழுச்சியுறக் இந்த சந்திப்பும் ஒரு காரணம்.

பாரதி மட்டுமல்ல இன்னும் பல ஆண் இலக்கியவாதிகளது பங்கும் முக்கியமானது.

பெண் கல்வி என்ற நீண்ட கட்டுரையில் வேதநாயகம்பிள்ளை ‘பெண்கள் கல்வி கற்க வேண்டும்’ என அழுத்திக் கூறினார். ஆனாலும் இவரது கருத்துக்கள் பெண் சிறந்த மனைவியாகவும், அன்னை யாகவும் விளங்குவதற்கு அக்கல்வி துணைசெய்ய வேண்டும் என்கின்ற மனநிலை மேலோங்கியிருந்தது. இருப்பினும் பெண்கல்வி தொடர்பில் எடுத்தாண்டமையும் அதன்மூலம் அவள் துன்பமான வாழ்வியல் மாற்றமடையும் எனவும் அவர் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாதவையா தமது பத்மாவதி சரித்திரத்தில் பெண்கல்வியை வலியுறுத்தினார். தமிழில் சிறுகதையின் தந்தை எனக் கூறப்படும் வ.வே.சு.ஐயர் தமது காலப் பெண்களின் பரிதாபகரமான நிலைமையை அனுதாபத்துடன் நோக்கினார். அவரது குளத்தங்கரை அரச மரம் என்ற சிறுகதை சீதன வழக்கத்திற்கும், பெற்றோரின் பிடிவாதத்திற்கும் பெண் ணொருத்தி பலியாவதை விபரிப்பதாகும். 'விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம்'என்றார். அவரது வாழ்க்கையிலும் அதனை பின்பற்றினார்.

ஆண்கள் பெண்களுக்கு எதிரியுமல்ல. பெண் ஆணுக்கு அடிமையும் அல்ல. இந்த மனநிலை தெளிவற்ற நிலையில் இன்று வரையில் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. காலமாற்றத்தில் பெண்கல்வி நிலையால் நிகழ்ந்த நற்பயன்கள் நாம் அறிந்தது.உரிமை மறுத்த சமூகத்திடமிருந்து பெண் உரிமை மீட்டெடுக்க முதல் குரல் தந்ததும் துணைநிற்பதும் ஆண்மைக்கான அடையாளம் என்பேன்.

பவதாரணி ராஜசிங்கம்