நாட்டை திறப்பது குறித்து 30 ஆம் திகதி இறுதி தீர்மானம்

சுகாதார அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீக்கி நாட்டை திறப்பது குறித்த தீர்மானம் இம்மாதம் 30 ஆம் திகதியே எடுக்கப்படுமென்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதன் போது சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு (25) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் அமைச்சர் அவதானம் செலுத்தினார்.

தற்போது மத்திய மாகாண சபைக்கு கீழ் நிர்வகிக்கப்படும் நாவலப்பிட்டி வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் பொறுப்பிலெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் நிறைவடையும் தருவாயிலுள்ளன.

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் சுகாதார விதிமுறைகளை முறையாக பேணுமாறு மக்களிடம் கோருவதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார். அவ்வாறு செய்வதன் மூலம் கொவிட் 19 பரவலை மிகவும் வெற்றிகரமாக ஒழிக்க முடியுமென்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

சுகாதார தரப்பினர் அவர்களின் பொறுப்பை முறையாக செய்யும் போது மக்களும் அவர்களின் கடமையை முறையாக நிறைவேற்ற வேண்டுமென்பதை அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

மிகவும் வெற்றிகரமாக கொவிட்19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்