கல்வியமைச்சின் செயலாளர் கபில தெரிவிப்பு
நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் துப்புரவு செய்யும் நடவடிக்கைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகள் கிடைத்ததும் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் கல்வியமைச்சர் தினேஷ் குணவர்த்தன விரைவில் தீர்மானத்தை வெளியிடுவார் என்றும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலைக்கு பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதன்போதே கல்வி அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
நான்கு கட்டங்களாக பாடசாலைகளை திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழிகாட்டல் வழங்கியுள்ளதாகவும் 200 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பாடசாலைகளை முதற்கட்டமாக ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள கல்வியமைச்சின் செயலாளர்,
நேற்று முன்தினம் கல்வியமைச்சர் அனைத்து மாகாண ஆளுநர்களையும் சந்தித்து பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்றைய தினம் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பாடசாலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாடசாலை அபிவிருத்திக் குழு, பொலிசார், சுகாதார பரிசோதகர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாடசாலைகளை துப்புரவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதனையடுத்து சுகாதாரத்துறையினரின் பரிந்துரை கிடைத்ததும் உடனடியாக பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடுமுழுவதுமுள்ள 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 5,231 உள்ளன. அந்த பாடசாலைகளை முதலில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 3,884 பாடசாலைகள் நாட்டில் உள்ளன.
அடுத்ததாக அந்த பாடசாலைகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்க முடியும்.
அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறுவர் நோய் சம்பந்தமான மருத்துவர்கள் 100 பேர் மாணவர்களை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எந்த ஒரு மாணவருக்கும் காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட நோய் காணப்படுமானால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாமென பெற்றோர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்