பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதம் சமூக வலைத்தளங்களில்

பொலிஸ் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதம் சமூக வலைத்தளங்களில்-Interschool WhatsApp Group-Police Intelligence Letter Leaked

- ஆபத்தான WhatsApp குழுமம்?

'Interschool' எனும் பெயரிலான வட்ஸ் அப் (WhatsApp) குழுமம் ஒன்றில் இணைவதற்கான (Join) இணைப்பொன்று உலா வருவதாகவும், அனைவருக்கும் பகிருமாறும் தெரிவிக்கப்பட்டு உலா வரும் குறித்த இணைப்பானது, ISIS பயங்கரவாதிகளுக்கு சொந்தமானது எனவும், அதில் இணைவதன் மூலம் மீண்டும் அதிலிருந்து வெளியேற முடியாது எனவும் தெரிவிக்கப்படும், மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினால் பொலிஸ் அதிகாரிகளுக்கு எழுதப்பட்ட கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை தொடர்பில், பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.

குறித்த WhatsApp குழு தொடர்பில் வெளியிடப்பட்டு வரும் தகவல்கள் தொடர்பில் உரிய பிரிவினால் மிக விரைவாக விசாரணைகளை முன்னெடுப்பது சிறந்தது என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவ்வாறு வெளியிடப்பட்ட கடிதம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில்,

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் புலனாய்வு பிரிவினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களை தொகுத்து அதனை ஆராயப்படும். தேவையேற்படுமாயின், அவ்வாறான தகவல்கள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டிய அதிகாரிகளுக்கு  அது தொடர்பில் அறிவிக்கப்படும்.

அதன் அடிப்படையில் அனுப்பப்பட்ட கடிதமொன்றே இவ்வாறு சமூக வலைத்தளத்தில் பரவி வருவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆயினும் அவ்வாறான தகவல்கள் தொடர்பில் அறியப்படும் நிலையில் அவை உண்மையாகவோ, பொய்யாகவோ இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ் தலைமையகம், எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறான நாட்டின் புலனாய்வு தொடர்பான தகவல்களை இரகசிய தகவல்களை வெளியிடுவது, அரசாங்க இரகசியங்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அவ்வாறு தகவல்களை கசிய விடுவது பொதுமக்கள் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையக் கூடியது என்பதுடன், கணனி குற்றங்கள் தொடர்பான சட்டத்தின் கீழும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 23ஆம் திகதியிடப்பட்டு, மேல் மாகாண உளவுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புஷ்பகுமாரவினால் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அனுப்பட்ட கடிதமே இவ்வாறு சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளன.

ஆயினும் குறித்த குறித்த கடிதத்தில் குறிப்பட்டுள்ள விடயங்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறான தகவல்களை எந்தவொரு வழியிலும் பகிர்வது, தண்டனைக்குரிய குற்றமாகுமெனவும், அவ்வாறான விடயங்களை சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட எந்தவொரு வழியிலும் மேற்கொள்ள வேண்டாமென பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த கடிதத்தில் உள்ள WhatsApp குழுமம் தொடர்பில் இணையத்தளங்களில் நாம் மேற்கொண்ட தேடலில் இவ்விடயம், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் உலா வரும் ஒரு விடயமாக காணப்படுகின்றது.

PDF File: